மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி5, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா – 2011 ஜனவரியில் இலங்கையில்


சர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும், வருடாந்த ஒன்று கூடல்களை நடத்துவதற்கும், இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தார் விழாவை நடத்துவதற்காகவும், படைப்பாளிகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெறுவதற்காக எழுத்தாளர் திரு.முருகபூபதி ( இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தற்போது ஒஸ்ரேலியாவில் வசிக்கும்) அவர்கள் தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் 03-01-2009 ஞாயிற்றுக் கிழமை அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இனிதே நடைபெற்றது.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப் படுவதன் நோக்கங்கள்:

1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாகக் கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் செம்மைப்படுத்தும் கலையை வளர்த்தெடுப்பது.

2. தமிழ் இலக்கிய படைப்புகளைப் பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளைப் பேணி வளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளைச் சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.

3. தமிழ் இலக்கியப் படைப்புகளை (நூல்கள் – இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது.

4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்குவது.

5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.

6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுதல்.

7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை, இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவித்தல்.

8. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை, இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.

9. நாடகம், நடனம், நாட்டுக்கூத்து, இசைநாடகம் மற்றும் பாரம்பரிய கிராமியக் கலைகளைப் பற்றிய கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஒழுங்கு செய்தல்

10. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.

11. குரும்படம் தொடர்பான பிரக்ஞையை பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரசனையை வளர்த்தல்.

12. ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, Graphics முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும் விதமான காட்சிப்ப்டுத்தும் கருத்தரங்கு அமர்வுகளை நடத்தல்.

மேற்கூறப்பட்ட 12 அம்சங்களை உள்ளடக்கியதாக அமைப்பு ஒன்றை இலங்கையில் உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப் படுமென எழுத்தாளர் முருகபூபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை, ஒஸ்ரேலியா மற்றும் இலண்டனைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் நன்நோக்கத்தோடு முன்னெடுக்கும் இம்முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதே சக படைப்பாளிகளின் அவாவாகும்.

கலந்துகொண்டு கருத்துக்கூறிய பலருள் சிலரது ஒளிப்படங்கள்:


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்