மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்8, 2018

மனிதர்களில்லாத வீடுகள்

மீண்டுமொருமுறை போகக்கிடைத்தது
முன்பிருந்த வீட்டிற்கு
அங்குதான் மகன் பிறந்தான்
அதைத்தவிர ஏதுமில்லை
நினைக்கவும் இரசிக்கவும்

நினைத்தாலும் அயற்சிதான்
முப்பதுபடிகளில் ஏறி இறங்கியதை…

இப்போதிருப்பது பாட்டிவீடு
அம்மாவும் நானும் இங்கு தான் பிறந்தோம்
பிள்ளைகளும் இங்கு தான்…
அழுகையும் சிரிப்புமென
கலவையாய் சேமித்து வைத்திருக்கிறது
கனவுகளை…

தனிமையின் இரவொன்றில்
சின்னக்கால் கொண்ட
கொலுசொலிகளை கேட்கச் செய்கிறது ஊஞ்சல்

அன்றாடப் புதினங்களைச்
அறிந்து வைத்திருக்கின்றன
திண்னைகள்

ஆடு, மாடுகளையும்
வழிப்போக்கரையும் சுகம் கேட்கும்
தெருப்பார்த்த தண்ணீர்த் தொட்டியென….
எல்லோர் நினைவிலும்
ஒரு சொந்தவீடுண்டு

இப்போதெல்லாம்
வீடுகளுக்குத் தான்
சொந்தமாக மனிதர்கள் இல்லை
போர் ஓய்ந்த பூமியில்….

#மன்னார் அமுதன்  8/8/2018

Advertisements
மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்8, 2018

புனிதர்களின் மொழி

அவர்கள் புனிதமானவர்கள்…..
விலைவாசி உயர்வோ
விளையாட்டுச் சிறுமியொருத்தியின்
உயிர்பறிப்போ
அவர்களை எதுவும் செய்வதில்லை…
அவர்களுக்கு எவர்கள் மீதும் புகாரில்லை…

அவர்கள் நாகரிகமானவர்கள்
அடுத்தவன் செயல்களில் மூக்கை நுழைப்பதில்லை…
அவன் பாதையோரத்தில் பசியோடு கிடந்தாலும்
பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்

அவர்கள் வஞ்சகமற்றவர்கள்
விடுமுறைக்காய்
அரச தலைவர்களின் இறப்பை
வேலைநாட்களில் இரஞ்சுபவர்கள்…
அவர்களின் அவலக்குரல் எப்போதும் கேட்கப்படும்…

அவர்கள் அமைதி விரும்பிகள்
எப்போதும் நாங்கள் மெளனித்தே இருக்க வேண்டும்
புதைகுழியொன்று புதிதாய்
தோண்டப்படுவதை விரும்புவதில்லை
அவர்களின் அன்றாடம்
அமைதியாய் நகர்ந்துவிட வேண்டும்

அவர்கள் எதன்பொருட்டும் தாமதிப்பதில்லை
வீதிவிபத்தை ஏறெடுப்பதுமில்லை…
பாவிகளின் இரத்தம்
அவர்களைக் கறைபடுத்திவிடலாம்

ஆம் … அவர்கள் புனிதமானவர்கள்
அப்புனித மொழியில் எங்களை
“சபிக்கப்பட்டவர்கள்” என மொழிபெயர்க்கிறார்கள்..

#மன்னார் அமுதன் #1.ஆகஸ்ட்.2018

Older Posts »

பிரிவுகள்

%d bloggers like this: