மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்27, 2016

பாரி

பரம்பு மலை பாரி வந்திருந்தான்
ஓமோம் …. அவன் தான் …
முல்லைக்குத் தேர் கொடுத்தவன்
அட்டைக்குதிரையும் தேருமாய்
வாகனத்தில் வந்திருந்தான்
 
வஸ்திரமெங்கும் வைரமாய் ஜொலிக்க
வியர்வையில் வழிந்தோடிக் கொண்டிருந்தது
வரையப்பட்ட மீசை
 
அமைச்சரின் வருகைக்காய்
தார்ச்சூடு தாங்காமல்
ஒற்றைக் காலில்
ஒளவையும் வள்ளுவனும் பாரதியும்….
 
வயிற்றுப் பசிக்காய்
வரிசையில் நிற்கையில்
கபிலன் வந்து
காணி கேட்கிறான்
எழிலன் வந்து
ஈழம் கேட்கிறான்
 
ஆறுதலாய் பதில் சொல்லி
அனுப்பி வைத்த பாரியிடம்
அமைச்சர் வந்து
கை கொடுத்தார்…..
கொடுத்தான்
 
காசு கொடுத்தார்
வீசி எறிந்தான்
 
அவன் பாரி தான்….
 
============ மன்னார் அமுதன்
Advertisements
மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்27, 2016

நாளை எல்லாமே கிடைத்துவிடலாம்…

நாளை எல்லாமே கிடைத்துவிடலாம்…
============================== மன்னார் அமுதன்

அவசரமாய் தேடிய போது தான் தெரிந்தது
வங்கிப்புத்தகம் தொலைந்திருந்தது
ஐந்து நிமிட தியானத்தில்
ஆற்றுப்படுத்திக்கொண்டு
அடுத்தகட்டமாய் வங்கிக்கு நகர்ந்தேன்

புதிதிற்கு விண்ணப்பித்தபோது
இன்னும் இருவாரம் ஆகுமென்றார்கள்
அதற்குள் மாலை வந்திருந்தது

மளிகைப் பொருட்களை வாங்கிக்குவித்து
வீடு திரும்புகையில் தெரிந்தது
வண்டிச்சாவி தொலைந்திருந்தது

தேடிக்களைத்து திரும்புகையில்
மாடு தின்றிருந்தது மளிகைப் பொருட்களை

இதுவரை தொலைத்த எல்லாவற்றையும்
நினைத்துக்கொண்டு வீடடைகையில்
தொலைத்ததைக் கண்டெடுத்த உற்சாகத்தோடு
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது குழந்தை

நாளை எல்லாமே கிடைத்துவிடலாம்…

======= மன்னார் அமுதன்

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்

%d bloggers like this: