மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி15, 2010

வெலிகம றிம்ஷாவின் “தென்றலின் வேகம்” கவிதை நூல் வெளியீடு


வளர்ந்து வரும் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியவர் வெலிகம றிம்ஷா. இவரது தனது முதலாவது கவிதைத் தொகுதியான “தென்றலின் வேகம்” நேற்று (14-02-2010) மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் வைத்து “இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை”யினால் வெளியிடப்பட்டது. மருத்துவர்.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமதி.வசந்தி தயாபரன் மற்றும் கவிஞர் ஏ.இக்பால் ஆகியோர் ஆற்றிய ஆய்வுரை முத்தாய்ப்பாக அமைந்தது.

இலங்கையின் மூத்த படைப்பாளிகள், இளைய படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் என திரளான மக்கள் கூட்டம் மண்டபம் நிறைய வருகை தந்திருந்தமை மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

“நானெழுதிய கவிதை இது”, “நானெழுதியது கவிதையா?” “நானெழுதியது இது” இவ்விதம் கூறி, மூன்று விதமானவர்கள் என்னை அண்டியிருக்கிறார்கள். இம்மூவரும் கவிதைகள் எழுதியே காட்டினர். உண்மையில் அம்மூன்றும் கவிதைகள் தான். ஆனால். “நானெழுதிய கவிதை இது” என்று காட்டிய கவிதை, மற்ற இருவரது கவிதைகளிலும் சிறந்த கவிதை. தன்னம்பிக்கை தான் கவிதையை நிலை நிறுத்தும் எனும் கவிஞர் ஏ.இக்பாலின் முன்னுரையோடு ஆரம்பிக்கும் தென்றலின் வேகம், பதிப்புரையைக் கடந்து எண்ணங்களை வண்ணமாக்கிய றிம்ஷாவின் கடந்த காலச் சுமைகளையும், சுகங்களையும் கவிதைகளாக நம்மை நோக்கி அள்ளி வருகிறது.

64 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள தென்றலின் வேகத்தை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளன ஸ்ரீதர் பிச்சையப்பாவின் அழகான அர்த்தம் பொதிந்த ஓவியங்கள்.

பல கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும் இங்கு ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படுக்கை எனத் தலைப்பிடப்பட்ட இக்கவிதை குறுங்கவிதைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

படுக்கை

பணக்காரனுக்கு
பஞ்சு மெத்தை
ஏழைக்குப் பாய்
பிச்சைக் காரனுக்குத்
தெரு

எனும் இக்கவிதை மிகவும் அழகானது. சமுதாயத்தின் வெவ்வேறு பொருளாதார மட்டங்களில் வாழும் மக்களின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. படுக்கைகள் வெவ்வேறு. செய்ய நினைக்கும் செயல், தூக்கம் என்னவோ அனைவருக்கும் ஒன்று தான். இதை இன்னும் ஆழமாகக் கூடப் பார்க்கலாம்.

இதைப் போன்று இன்னும் பல மனதைத் தொடும் கவிதைகளோடு வெளிவந்துள்ள ” தென்றலின் வேகம்” கிடைக்குமிடம் பூபாலசிங்கம் புத்தக சாலை. ஆர்வலர்கள் வாங்கிப் பயன் பெறலாம்.

கவிதை நூல்: தென்றலின் வேகம்
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=
கிடைக்குமிடம்: பூபாலசிங்கம் புத்தக சாலை


மறுவினைகள்

  1. பதிவிற்கு நன்றி

    ==============
    அமுதன் நவின்றது:

    நன்றி ஐயா


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்