மன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்3, 2020

கலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்


கலைஞனின் வீடு  

  • மன்னார் அமுதன்

தான தந்தன தானனா

தான தந்தன தானனா 

தான தந்தன தான தந்தன

தான தந்தன தானனா… 

எம்மா நாச்சி தூக்கிப் போட்ட காகிதக் கட்டிலிருந்து தூசி விசிறியடித்தது. எல்லாம் செய்தித்தாள்கள். ஒரு பாதி கறையான் அரித்திருந்தது. தூக்கிப்போட்ட கட்டிலிருந்து காகிதப்பூச்சிகள் சிதறி ஓடின.. பழைய கதிரையிலிருந்து தாளம் போட்டுக் கொண்டிருந்த  முடியப்புப் புலவர் விடாமல் தும்மத் தொடங்கினார். தும்மிக் களைத்து மேலும்  இருந்து தும்ம முடியாமல் எழும்பி நின்று தும்மினார். கண்கள் கலங்கி கண்ணீர் நரை மீசையைக் கடந்து ஓடியது. மூக்கைச்சீறி ஜன்னலால் விசிறினார். மீசையில் பாதி ஜன்னல் கம்பியில் பாதியென தொங்கிகொண்டிருந்தது.  மீசையைப் புறங்கையால் துடைத்துக்கொண்டே எம்மாவைப் பார்த்தார். 

எம்மா நாச்சி அதைக் கண்டுவிட்டாள். “ஜன்னலால விசிறாதயுமெண்டா கேட்டால்லா… உம்மைக் கட்டினதுக்கு வீட்டக் கழுவினதும் ஜன்னலைச் துடச்சதும் தான் ஆச்சு. நல்ல சோறுண்டா… கறியுண்டா… என்று அப்படியே ராகமெடுத்து ஒப்பாரியாக்கினாள் ”வயித்துல பெத்ததும் தான் வழியிலயே போயிட்டு….  கழுத்துல கட்டினதுவும் கடனுக்கு போயிட்டு….. ஏ மரியா…. மாதோட்டத் தாயே….. மனசென்டு ஒண்டிருந்தா…. கண்ணு திறப்பாயே….  ”

“அரசாங்கம் கலைஞனுக்கு வீடு கொடுக்குதாம். பரிசு வாங்கின காகிதமெல்லாம் கறையான் திண்டு வளந்திருக்கே….  இதுகள சீராக்கி கொண்டு போய் காட்டினா வீடு தர மாட்டானா…. பொலப்பு இல்லாதவன் பணிஞ்சு போனா குத்தமில்ல புலவரே…. வானம் பார்த்த வீடா இருக்கே…வரப்புக் கட்டுறன் வீட்டுக்குள்ள…   “

முடியப்பு மனசுக்குள்ளயே சிரித்துக் கொண்டார். இந்த உலகத்தில ரொம்ப பிடிச்சது யாருன்னு கேட்டா “எம்மா நாச்சி”ன்னு தான் சொல்லுவார்.  எம்மாக்கு ஐம்பத்தெட்டு. முடியப்பருக்கு அறுவது. காட்டு மரம் போல நல்ல தேகம். கண்ணாடி போடாமலே சின்ன எழுத்துக்களைக் கூட வாசித்து விடுவார். புலவர் எண்டு சொல்லுற அளவுக்கு அவர் பல்கலைக்கழகம் எல்லாம் போய்ப் படிக்கவில்லை. ஆனால் திருவிழாக் கூத்து போடவேண்டுமென்றால் முடியப்பர் இல்லாமல் எதுவும் ஆகாது. ஒரு துறைன்னு இல்ல, கவிதை, சிறுகதை, நாவல், நாட்டார் பாடல்னு எல்லாப் பக்கமும் அவருக்கு ஆகும்.

காலத்துக்கு ஏற்றது போல கூத்துப் பாட்டு எழுதுறதும், எழுதுறதுகளை திருத்துறதுலயும் தாளம் தப்பாது.  முடியப்புக்கு பதினெட்டு வயது இருக்கும் போது தான் எம்மாவைப் பார்த்தார். விவசாய வேலை முடிஞ்சா கூத்துல பாட்டுக்கட்டுறது புலவருக்கு வேலை.  எம்மா பேருக்கேத்தது போல நல்ல வெள்ளக்காறி மாதிரி இருந்தா… கோரஸ்ல ஒரு ஓரமா மிரண்ட மான்குட்டிமாதிரி எம்மா நின்றதைப் பாத்ததுமே புலவருக்கு பிடித்துக் கொண்டது. 

திருவிழாவுக்கு கூத்துப் பார்க்க மாடுகட்டிவந்த எம்மாவுக்கு அந்தப் பத்துநாள் கூத்துலயும், பகலில் நடக்கும் கூத்துப்பாசறையிலும் முடியப்பரைப்  பிடித்துப் போய்விட்டது. திருவிழா முடிஞ்சு எல்லாரும் வண்டியைக் கட்டும் போது  எம்மா  முடியப்புவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள். 

”யேய்… நாச்சி… எம்மாக்கெளவி… சம்பவம் நடந்து நாப்பது வருசம் ஆயிருக்கும்ல”   சின்னச் சிரிப்போடு  முடியப்பர் சீண்டினார். இப்படி ஏதாவது இடையிடையே கேட்டு சீண்டுவது முடியப்புவிற்கு பிடிக்கும். நாச்சிக்கும் பழசை நினைக்கிறதுல ஒரு விருப்பம் இருக்கத் தான் செய்தது. 

“அதெ எதுக்கு இப்ப நினைக்குறீரு. அறுபதாங் கல்யாண ஆசையா… பெத்த புள்ள இருந்திருந்தா ஒப்பாரிக்கு விட்டிருக்க மாட்டானே.. நீரும் தான் கட்டி அலையுறீரே… சிஷ்யக் கோடிகள…. செய்வானுகளா…. ஆசான்னு வாயுக்குள்ளயாவது சொல்லுவானுகளா… ”

”எவனும் என்னத்துக்கு சொல்லனும்… அரசாங்கம் தான் சேவைக்கு கலாபூஷணம் தந்திருக்கே. நாவலுக்கு சாகித்தியம் தந்திருக்கே” என்று ஓலைவீட்டின் மூலையைப் பார்த்தார். கிடுகுகளுக்கு இடையிடையே நிறைய பதக்கங்கள் சொருகிக் கிடந்தன. கூரையின் வழியாக வானம் விரிந்து கிடந்தது. 

 ”எல்லாம் வெங்கலம். இரும்பா இருந்தாக் கூட அவசரத்துக்கு விக்கலாம். மாலையெல்லாம் மணி கழண்டிருச்செ.. பொன்னாடயப் பாரு… தலைய மூடினா கால் குளிருது. பொறந்தநாள்னு வந்த குட்டிக்கு பாவாட தக்கட்டும்னு நேத்து ரெண்டக் குடுத்துவிட்டன்…”

“குடு… குடு… வச்சி வச்சி பாச்சான் மணமடிக்குது.  இறைச்சாத் தானெ ஊறும்..” கதைத்துக் கொண்டே முடியப்பர் காகிதக் கட்டிலிருந்து கலைத்துறை ஆவணங்களையும், செய்தித் தாள் ஆதாரங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். 

”எங்க ஊறிச்சு… சாகித்ய ரெத்னாவை எவனோ கேட்டான்னு எறச்சீரு…. 10 வருசம் ஆச்சு… மறுக்கா ஊறிச்சா… ” எம்மாவின் குரலில் வேதனை கலந்திருந்தது.

தொடர்ச்சியாக கூத்து நடந்த காலங்களில் எம்மா முடியப்பரோடு விரல்களைக் கோர்த்துகொண்டு பாட்டுக் கட்டப் போவாள். முடியப்பரோடு போட்டிக்கு பாடும் அளவில் எம்மா தேர்ச்சி பெற்றிருந்தாள். 

“வான் நிறைந்த முகிலம்மா…. வளம் கொழிக்கும் மழையம்மா… பேதமின்றி அன்பு காட்டும்… கருணையவள் மொழியம்மா…. “ என அறுவடைக்கும் கூத்துத்தொடங்கும் காலங்களிலும் எம்மா மாதாவை நினைத்துக் குரலை உயர்த்தி உள்ளத்தால் உருகிப் பாடினால் தான் வேலைகள் தொடங்கும்….

முடியப்பர் பழசை நினைத்து மனசுக்குள் சிரித்துகொண்டே காகிதங்களை வரிசையாகக் கட்டினார். நேரத்துக்கே வெளிக்கிட்டாத் தான் கந்தோருக்குப் போய் உரியவர்களைச் சந்திக்கலாம் என நினைத்துக்கொண்டார்.

கோப்பியை ஊத்திக் குடித்தார். எம்மாவுக்கும் ஒரு குவளைக் கோப்பி வைத்தார். எம்மாவுக்கு கோப்பி குடிக்கப் பிடிக்கும். ஆனால் ஊத்தப் பிடிக்காது. முதலிலிருந்தே அப்படி ஆகிவிட்டது.

பலபல நினைப்புகளோடு பஸ் ஏறியவருக்கு இறங்க வேண்டிய இடம் வந்தது கூட தெரியவில்லை. இடையில் கொஞ்சம் நித்திரை வேற…. கண்ணைக் கசக்கிக் கொண்டே  தடுமாறி இறங்கி கந்தோரை நோக்கி நடந்தார்.

கந்தோரில் இவருக்கு முன்னமே நிறைய ஆட்கள் நின்றார்கள். அவருடைய வயதில் யாரும் இல்லை. கொஞ்சம் வெட்கமாகவும் கிடந்தது. எல்லாம் இளம் ஆட்கள். 

முன்னாள் நின்ற இளைஞனிடம் “ தம்பி இங்க கலைஞர்களுக்கு வீட்டுத் திட்டம் குடுக்கிறது உண்மையா” என்று கேட்டார்.

அவன் தன் வீட்டிலேயே பாதியைக் கேட்டது போல முகத்தைச் சுழித்தான். “கலைஞர்களுக்கு குடுக்கப் போறாங்க எண்டு தான் கதை… அதான் வந்திருக்கிறன்… நீங்க எந்தத் துறையில கலைஞர்” 

”ஒரு துறையெண்டு இல்லையப்பன்…. கொஞ்சம் ஆவணங்கள் கொண்டு வந்தன் … காட்டிப் பாப்பமெண்டு…”

கதைத்துக்கொண்டு நிற்கும் போதே முன்னாள் இருந்து அழைப்பு வந்தது… “அந்த வயசான ஐயாவைக் கொஞ்சம் விடுங்கோ…. வயோதிபருக்கு வரிசையில முன்னுரிமை குடுக்கனும்” என்று வீட்டுத் திட்ட அலுவலர் சத்தம் போட முன்னாள் விட்டார்கள்.

ஐயாட பேர் என்ன…  எந்த இடம்? 

சொன்னார்..

ஐயா… ஆவணம் எல்லாம் எடுங்கோ….

காட்டினார்.

ஐயா… அரசாங்க சுற்று நிருபம் வாசிச்சீங்களா…? அது என்ன சொல்லுதெண்டா வறுமையில வாடுற கலைஞரா இருக்கனும். 60 வயசுக்கு உள்ள இருக்கனும்…. 20 வருசத்துக்கு மேல கலைத்துறை அனுபவம் இருக்கனும். உங்கட பேருல ஒரு காணியோ  வீடோ இருக்கக் கூடாது…

அது சரி தம்பி… 60 வயசு வரைக்கும் இருக்க ஒரு காணியில்லாமயா இருப்போம். வயல்லையும் வெய்யில்லயும் காஞ்சு 10 பேச் காணி வேண்டி வச்சிருக்கிறன். வீடு கட்டுற அளவுல தான் வசதி அமையல. மத்தபடி மூணு வேள நாச்சியும் நானும் வயித்த நிறப்புற அளவுல வசதியாத் தான் இருக்கிறோம். 

ஐயாட கதையில ஞாயம் இருக்கு. அது எனக்கு தெரியும்… அரசாங்கத்துக்கும் தெரியனும் தானே. இந்த ஆவணங்களும் ஒண்டும் ஒழுங்கா இல்ல. இந்தப் படத்துல நிக்கிறது நீங்களா எண்டே தெரியல… இன்னொரு முறை பாப்போம்… நீங்க வெயிலேற முதல் வீட்ட போயிருங்க… 

முடியப்பருக்கு கண்கள் கனத்தன… வீடில்லை என்பது ஒரு விசயமில்லை. இதைப்போல் எத்தனை எத்தனை புறக்கணிப்புகள் முடியப்பருக்கு. எம்மா கிளவிக்கு என்ன பதில் சொல்வது என்பது தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. உடனே வீட்டிற்கு செல்வது பற்றிய சாத்தியத்தை யோசித்துக்கொண்டார். அது ஏலாது. இருட்டவிட்டு கடைசி பஸ் எடுத்தால் போய் படுத்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டே மரநிழலில் சாய்ந்தார்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. அவ்வளவு பேரும் கலைஞர்கள் என தெரிந்தபோது முடியப்பருக்கு பரவசமாக இருந்தது. கூத்துப் பழக்க ஆள் தேவையெண்டு கூப்பிட்டால் கூட முன்பு போல இப்போது ஆக்கள் வருவதில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார்.  மத்தியானத்திற்கு மேல் இன்னும் பலர் வந்தார்கள். அவர்கள் கந்தோர்களில் லீவு போட்டுவிட்டு வந்தவர்கள். பலருக்கு முடியப்பரைத் தெரிந்திருந்தது. ஒராள் சாப்பிடப் போவோம் எனக்கூட்டிப்போனார். ஒராள் கைகழுவத் தண்ணீர் கொடுத்தார். 

இப்போது முடியப்பரைச் சுற்றி ஆறு ஏழு கலைஞர்கள் இருந்து கதைத்தார்கள். அவருடைய நாடகங்களில் சிப்பந்தியாக நின்று சாமரம் வீசியவனும் ராசா வேசம் கட்டினவனும் கூட வீட்டுத்திட்டத்திற்காக வந்திருந்தார்கள். கூடிக்கதைக்க நல்ல வாய்ப்பாக இருந்தது போல பலதையும் சிரித்து சிரித்துக் கதைத்தார்கள். 

கலைஞர் வீட்டுத்திட்ட பரிதாபங்களைப் பற்றிய பகடிகளாக நிறையச் சொன்னார்கள். 

மேளம் அடிக்கும் குட்டியான் சொன்னான்… அப்பு… அண்டக்கி கூட்டம் எண்டு வந்து பாத்தன். வழமைக்கு மாறா ஏகப்பட்ட கூட்டம். கூட்டம் முடியறப்போ தான் எங்களுக்கே வீட்டுத்திட்டம் பத்தித் தெரியும். முடிஞ்சு வெளியில் வரும் போது அவசரமா வந்த பொடியன் கேட்டான்…. “கலைஞர் கூட்டம் முடிஞ்சுதா ஜி”

ஓம்

நானும் கலைஞன் தான் ஜி… வர கொஞ்சம் லேட்டாயிட்டு..

எந்த அமைப்பு ஜி நீங்க…?

அமைப்பா பதிவு செய்யத்தான் யோசிச்சிட்டு இருக்கிறன்… இப்ப நான் தனியா தான் பண்ணிட்டிருக்கன் ஜி…”

என்ன பண்ணிட்டிருக்கிங்க…?

”4,5 டிக்டொக் வீடியோ போட்டிருக்கன் ஜி… வீட்டுத்திட்டம் கிடைக்குமோ தெரியலைஜி…”

கட்டாயம் கிடைக்கும் ஜி… முயற்சியை மட்டும் கைவிட்றாதிங்க..கலைஞர்ஜி… அமைப்பை பதிவு செய்யும் போது தலைவர் செயலாளர் தேவைப்பட்டா சொல்லுங்க… கைவசம் ஒரு குழு இருக்கு … வாழ்த்துக்கள் ஜி…. “ அப்படின்னு சொல்லி அனுப்பிட்டேன்ன்னு குட்டியான் சொல்லி முடிக்க முடியப்பரும் வாய்விட்டுச் சிரித்தார்.

குட்டியானின் முறை வர அவன் வீட்டுத்திட்ட அலுவலைரைப் பார்க்க போனான். முடியப்பர் தேத்தண்ணி ஒன்றை குடித்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தார். 

திரும்பிவந்த குட்டியானின் முகம் தொங்கிக் கிடந்தது. “அப்பு… ஆவணம் ஒண்டும் காணாதாம்… ஏதாவது ரெண்டு மூணு படம் இருந்தா கிடைக்கலாமாம்” என்றான்…

முடியப்பர் கையிலிருந்த காகிதக் கட்டை அவனிடம் போட்டார். ”இதுல உண்ட படம் ரெண்டு மூணு பாத்தன்… சவுரிக்கும், ராசாக்கும் தேவையானது கிடந்தாலும் எடுத்துக்குடு…. எறக்கிறது தானேடா ஊறும்… நான் மெல்ல போறன்… வீடுகட்டி முடிய வாங்கடாப்பு. ஏதாவது நாடகம் போடுவம்” என்றபடி முடியப்பர் எழும்பி நடந்தார்.  நாச்சியாவின் பாடல்கள் காதுக்குள் அலையடித்தன.

  ——–முற்றும்–
நன்றி : சிறுகதை மஞ்சரி , நோர்வே தமிழ்ச்சங்கம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: