மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி19, 2020

செத்தால் பிணம் சிறுகதை மன்னார் அமுதன்


செத்தால் பிணம்

================= மன்னார் அமுதன்

பெரியப்பா தோளைத்தொட்டு உலுக்கிய போதுதான் மார்டின் சுயநினைவிற்கு வந்தான். மார்டினின் முகம் அதைத்துப்போயிருந்தது. நெற்றியிலிருந்து கண்ணோரமாக காதுநோக்கிக் செல்லும் நரம்பொன்று புடைத்திருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அழுகை வரவில்லை.

“இப்படியே எவ்வளவு நேரம் இருக்கப்போற…. இப்படி இருந்து எதுவும் ஆகப்போறதில்லை” எழும்புடா…. என்பார்ம் செய்து கொண்டுவாறதுக்குள்ள குளிச்சிட்டு வந்துரலாம். பொறல்ல ஜெயரட்னம் ரெய்மன்ஸ்ல இடமில்லையெண்டுட்டான். பார்னி ரெய்மன்ஸ்ல மூணுநாளைக்கு சொல்லியிருக்கு”

“மூண்டுநாளா… மூண்டுநாள் வச்சு என்ன பெரியப்பா செய்யிறது… வெளிநாட்டுல இருந்து வாறதுக்கு ஒருவரும் இல்ல. இப்பவே இங்க எல்லாரும் களைச்சுட்டாங்க… மூண்டுநாள் வச்சா எலிக்கு சாப்பாடா போயிரும்…. பிறகு மூக்கக் காணல… முளியக்காணல எண்டு நிப்பாங்கள்”

000

மூக்குக்குள் பஞ்சு அடைத்திருக்க ஓசேப்பு காலை நீட்டி அமைதியாக சவப்பெட்டிக்குள் படுத்திருந்தார். ஓடிக்கொலன் மணமும், வாசனைத்திரவியங்களும், ஊதுபத்திப்புகையுமாய் கலவையாண மணமொன்று நாசியை விறாண்டித் தலைக்குள் குத்தியது. சவப்பெட்டியின் இரண்டு பக்கமும் மெழுகுதிரிகள் அசையாமல் எரிந்துகொண்டிருந்தன. ஓசேப்பின் தலைக்குநேர் பின்புறமாக ஒரு குருசு வைக்கப்பட்டிருந்தது. தலைமாட்டிலிருந்து இலையான் கலைத்துக்கொண்டிருந்த மார்டினின் முகத்தில் பெருங்களைப்புத் தெரிந்தது. காற்றில்லாத அந்த அறைக்குள் மெழுகுதிரி வெப்பமும் சேர்ந்து உடம்பு கசகசத்தது. பேப்பரில் விளம்பரம் போட்டும் கூட்டமில்லை என பெரியப்பா அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்.

“கல்யாண வீட்டுக்குப் போகாட்டியும் செத்தவீட்டுக்குப் போயிரனும்டா…. இல்லாட்டி தனிப்பிணமாத்தான் போகனும். இதையெல்லாம் இந்தச் சனம் எப்ப விளங்கப்போகுது. ஊரில செத்தா இப்படி ஒரு இழவில்ல. ஒத்தாசைக்கு எட்டுப் பேர் நிப்பாங்கள். இங்கபாரு, ஒரு கண்ணி  செபம் சொல்ல ஆளில்லை… பாட்டுப்பாட ஆளில்லை… சவப்பெட்டியைக் கூட திருப்பி எடுக்க வழியில்லாத இந்த தொடர்மாடிகளில் மனுசனிட வாழ்க்கைகூட சவமாயிட்டு”.

 “அவனவனுக்கு ஆயிரம் வேலை பெரியப்பா… கொழும்புட ஓட்டத்துல சிக்கிறவன் உயிரோட இருக்கிறவனையே நினைக்கமாட்டான். இதுல செத்தவர நினைச்சு வாறதெல்லாம் நடக்கிறகாரியமா”

“மார்டின்! விளங்காமக் கதைக்காத… இதுல செத்துக்கிடக்கிற மனுசன்… உங்கப்பன்.. ஓசேப்பிட்ட உதவிபெற்றவங்கள் வந்தாலே இந்த இடம் கொள்ளாதுடா… உனக்கென்னடா தெரியும் ஓசேப்பைப் பத்தி… ஒவ்வொருத்தனுக்கும் ஓடி ஓடி உதவிசெஞ்ச மனுசன்… ஒரு செத்தவீடெங்கிறது உறவுகள் ஒண்டா சேர்ந்து அழுறதுக்கான இடம் மட்டுமில்ல… அங்க தான் எல்லோரும் ஒண்டாக் கூடிக் கதைக்க நேரம் கிடைக்கும். உடைஞ்சு போய்க்கிடக்கிற குடும்பத்துக்கு உரிமையா உதவி செய்யிறதுக்கான இடமடா இது. ஒரு சாவு பத்து கொண்டாட்ட வீட்டை உருவாக்கும். செத்தவீட்டுல பொம்பிளை பார்த்து முடிக்கிறதும் இருக்குதானே. சாவை ஒரு கொண்டாட்டமா பாக்கனும்டா. உறவுகள் கூடிவந்து செஞ்சா தானேடா செத்தவுனுக்கே மகிம”

தொண்டைக்குள் கமறிய ஊதுபத்திப் புகையை சீரணிக்கமுடியாமல் மார்டின் அங்கிருந்து எழும்பிப்போனான். மார்டினுக்கு அவன் அப்பா நல்ல மனிதரென்று தெரியும். ஆனால்  நல்லவராகவே வாழ்ந்து இறப்பதால் ஒரு பயனுமில்லை என கதைக்கும்போது சொல்லுவான்.

அவன் தகப்பனோடு கதைக்காமல்விட்டே பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஏ.எல் முடிச்சவுடனேயே அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஓசேப்பின் தம்பி “மார்டினை இங்க அனுப்புங்க. ஏதாவது வேலை எடுத்துக்குடுக்கிறன்” என்றார்.

“ஏ.எல் படிச்சுட்டு அங்க வந்து அவனென்ன கக்கூஸா கழுவுறது. அவன நான் இங்கயே படிப்பிச்சுக்கொள்ளுறன்” என போனைத் துண்டித்த நாள் மார்டினுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. மார்டின் டிகிரி ஒன்றை முடித்து அரசாங்க உத்தியோகத்தில் நல்ல சம்பளத்தில் இருந்தாலும் அவனுக்குள் வெளிநாட்டுக் கனவொன்று கிளைபரப்பி வளர்ந்துகொண்டேதான் இருந்தது.

 “வேறயாரும் வெளிநாட்டுக்குப் பிள்ளைகளை அனுப்பனும் எண்டு வந்து காசு உதவி கேட்டாலும் அவர் அப்படித்தான் சொல்லுறவர். அரியண்டப்படுத்திக் கேட்டா குடுத்திருவேர்” என்று மார்டினின் அம்மா சொன்ன போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

 “வெளிநாட்டுக்கு அனுப்பாட்டி நான் இயக்கத்துக்கு போயிருவன்” என ஓசேப்பிடம் உண்ணாவிரதமிருந்து அரியண்டப்படுத்தியபோது மார்டினின் காதுகளில் கோச்சி கூவியது.

அதைக் கொஞ்சம் மாற்றி “அரசாங்க உத்தியோகம் தானே… நான் ஆமிக்குப் போறன்” என்ற போது ஓசேப்பு சளைக்காமல் கொண்டுபோய் தும்முல்லை பொலிஸ்கிரவுண்டில் ஒடவிட்டார். ஐந்து ரவுண்டில் ஒன்றுக்கு மேல் ஓடமுடியவில்லை. நாக்குத்தள்ள மார்டின் அதிலேயே படுத்துவிட்டான்.

அப்படியே கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருக்கும் கானிவல் ஐஸ்கிறீம் ஹவுஸுக்கு கூட்டிட்டுப் போய்ச் சொன்னார் “மார்டின் உனக்கு இந்த வேலையெல்லாம் கஸ்டமெண்டு எனக்குத் தெரியும். அது உனக்கும் தெரியனுமெண்டுதான் கூட்டிட்டுப் போனன். இயக்கத்துக்கு போறனெண்டு நீ சொன்னப்போ கூட நான் கூட்டிட்டுப் போயிருப்பன். ஆனா திரும்பி வந்து ஐஸ்கிறீம் குடிக்கமுடியாது மகன்…  உனக்கு விருப்பமான எந்த வேலையையும் செய்யலாம். வெளிநாட்டுக்குக் கூடப் போ. அதுக்கு முதலில நீ படிச்சு முடிக்கனும்” என்று முடித்தபோது ஓசேப்புக்கு கண்கள் உருகியிருந்தன.  மார்டின் ஐஸ்கிறீமுக்குள் கிடந்த காற்றுப்போன வேப்பர்ஸை பார்த்துக்கொண்டிருந்தான்.

000

அப்பாவுக்கு அருகிலிருந்து செபமாலையை ஒருசுற்று உருட்டிவிட்டு அம்மா வந்து அருகிலிருந்துகொண்டாள். அம்மா களைத்திருந்தாள். அவளுக்கு செலவுகளை நினைத்துப் பயம். ரெய்மண்ட் காசு நாற்பத்தைந்தாயிரம் என்ற போது அவள் விக்கித்துப்போனது தொண்டையில் தெரிந்தது. “கோயில் காசு, எட்டாஞ்செலவு, முப்பத்தியொண்டு, இறையிரக்கப்புத்தகம் எண்டு அடுத்த திவசம் வரைக்கும் செலவு இருக்குத்தம்பி…இப்பவே இப்படிச் செலவளிச்சு கடனாளியாகிறாத…. வாழுறவைக்கு தான் காசு தேவை… இப்படிச் செலவளிக்கிறத உங்கட அப்பாவே விரும்ப மாட்டேர்” என பொட்டழிந்த முகத்தோடு சொன்னாள்.

இரண்டு நாளுக்குமுன் இருந்த அம்மாவில் சில மாற்றங்கள் நடந்திருந்தன. சூழல் தலைகீழாக மாறுவதற்கு ஒருநொடி போதுமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முதல்தான் மார்டினின் தங்கைக்கு திருமணம் முடிந்திருந்தது. நுவரெலியாவின் குளிரில் வியர்வை உறைந்துகிடந்தது. மேக்கப்முகங்கள் வியர்த்து வடியவில்லை. எல்லோருமே ஐஸ்கட்டியில் வைத்த அப்பிள் பழங்களைப் போல பொலிவாக இருந்தார்கள். அம்மாவும் தங்கையும் இன்னும் அழகாக இருந்தார்கள். கல்யாணம் முடிந்த சந்தோசத்தோடு, சந்தோசமாக வீட்டுக்கு போயிரலாம் என்றபோது ஓசேப்புக்கு மனம் கேட்கவில்லை. விடிஞ்சதும் மகளைப் பார்த்துட்டு போயிரலாமே” என்றார் கெஞ்சலாக.

ஆறாஞ்சாமத்தில்  “மார்டின் ! மார்டின்!” என அம்மா அழைப்பது கேட்டது. மார்டினுக்கு கண் திறக்கமுடியாத நித்திரை. இரவு நித்திரைகொள்ளப் போகும்போது பன்னிரண்டு மணியைத்தாண்டியிருந்தது. பெரிய தங்கையின் கல்யாண வேலைகளை இழுத்துப்போட்டு செய்ததால் உடல் நொந்தது. பழக்கமில்லாத நுவரெலியாவின் குளிர்வேறு. கனத்த கம்பளிக்குள் உடலைக் குறுக்கிக்கொண்டு நிலத்தில் படுத்திருந்தான். பக்கத்தில் அவன் தம்பியும் சிறியதங்கையும்.

 “மார்டின் கொஞ்சம் எழும்பு… அப்பாவுக்கு சுகமில்லையடா …. எழும்பு…” என்ற அம்மாவின் அழுகை கலந்த குரல் எங்கோ தொலைவில் கேட்பதுபோலக் கேட்டது. ஒருகணத்தில் திடுக்கிட்டு எழும்பினான். கட்டிலில் அம்மா அப்பாவை மடியில் சாய்த்து வைத்திருந்தாள். அப்பாவின் நாக்கு வெளியில் தள்ளியபடி பற்களுக்கிடையில் கிட்டிக்கிடந்தது. வாயிலிருந்து நுரையும் சளியுமாக வெளியேறி  ஒரு நூலைப்போல அம்மாவின் கைகளிடையே வழிந்து கிடந்தது.

“மார்டின் … கரண்டி எடுத்துக்கொண்டு ஓடிவா… அப்பாக்கு பல்லுக்கிட்டுது… ”

ஒருநிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் கால்கள் வெட்டியிலுக்க வாயால் நுரை ததும்பும் அப்பாவை பார்த்துக்கொண்டு நின்றான். சமையலறைக்கு ஓடினான். பூட்டிக்கிடந்தது. ஓடிப்போய் பக்கத்து அறைக் கதவைத் தட்டினான். திறக்கவில்லை. அவனுக்கு தலை விறைத்துக்கொண்டு கோவம் வந்தது. “இதற்குத்தான் அப்பாவிடம் சொன்னேன். பிறத்தியாக்கள் வீட்ட நிக்கவேணாம்..கல்யாணம் முடிஞ்ச கையோட இரவெண்டு பாக்காம கொழும்புக்கே போயிருவமெண்டு” என நினைத்துக்கொண்டான். இன்னும் இரண்டு முறை ஓங்கித்தட்டிய போது எதிர் அறையின் கதவைத் திறந்துகொண்டு தங்கையின் மாமனார் வினோதமாய்ப் பார்த்தபடி நின்றார்.

“இந்தச்சாமத்துல அந்தக்கதவ என்னாத்துக்கு தட்டுறீங்க…அதுல மகளெல்லா தூங்குறா” என சாரணை உதறி இடுப்பில் முடிந்துகொண்டார்.

 “அப்பாவுக்கு சுகமில்லாம இருக்கு… எனக்கொரு கரண்டி வேணும்… பல்லுக்கிட்டிட்டு” எனச் சொல்லும் போதே மார்டினின் கண்கள் கலங்கிவிட்டது. எந்நேரமும் முதல்துளி விழுந்துவிடத் தயாராக இருந்தது.

“அதுக்கு இப்படியா தட்டுறது… மகள் பயந்திருக்கும்.. தூக்கமெல்லா கெடும்…” எனச் சலித்தபடி குசினியைத் திறந்து ஒரு தேக்கரண்டியை அவர் எடுத்துக்கொடுத்தார். அதற்குள் அவர் மனைவி பின்னாலேயே வந்தாள்.

“குளிருக்குத் தான் அப்பாவுக்கு நடுக்கம் போலருக்கு…. கொஞ்சம் இருங்க நான் கோப்பி போட்டுட்டு வாறன்” என உள்ளே போகவும் மார்டின் கரண்டியை அப்பாவின் பற்களுகிடையில் தள்ளி நாக்கை விடுவித்தான்.  “அம்மா… மூணு மணி ஆகுது… ஒரு வாகனம் இருந்தா அப்பாவை ஹொஸ்பிடலுக்கு கொண்டு போயிரலாம்… அந்த மனுசி கோப்பி கொண்டுவந்தா வாகனத்தைக் கேளுங்க.. காசு தேவைப்படும்… நான் பெரியப்பாட்ட கதச்சிட்டுவாறன்” என அலைபேசியை எடுத்துக்கொண்டு சிக்னல் தேடி வெளியில் போனான்.

கோப்பி கொண்டுவந்தவளிடம் அம்மா கேட்டாள் “இவர ஹொஸ்பிடலுக்கு கொண்டுபோறது நல்லம் போலக் கிடக்கு… வாகனத்தை ஒருக்கா எடுக்கச்சொல்லுங்க…”

“மகனையும் மருமகளையும் இரவு ஹோட்டலில் தான் தங்க வச்சிருக்கு. காலையில அவங்கள கூட்டிக்கொண்டு கோயிலுக்கு போகனும். மகனுக்கு கல்யாணம் முடிஞ்சதும் வாறதெண்டு நேர்த்தி… போகாட்டி நல்லாருக்குமா… உங்கட மகளிட வாழ்க்கைக்கும் சேர்த்து தான் நேர்த்தி வச்சிருக்கிறன். ஐயாக்கு குளிர்தான் ஒத்துக்கல… நான் நெருப்பு கொண்டுவந்து வைக்கிறன்…

மார்டின் கதைத்துவிட்டு வரும்போது அறை புகைமூட்டமாயிருந்தது. அப்பாவின் கண்கள் மேல்நோக்கி சொருகியிருக்க மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்தார். இருமல் சத்தம் முழுதாகக் கேட்காமல் கழுத்தை வெட்டிய கோழியிடமிருந்து வரும்   சத்தத்தைப் போல இருந்தது. தங்கையும் தம்பியும் எழும்பி அழுது கொண்டிருந்தார்கள். அம்மாவின் கண்களில் நீர் வந்தாலும் சத்தம் இல்லை. இதுபோல எத்தனையோ துயரங்களை இந்தநாடு அவளுக்குப் பழக்கியிருந்தது.

மாமிக்காரியிடம் மார்டின் சண்டை போட்டான். இந்த வாகனம் இல்லாவிட்டால் வேறுவாகனத்தை ஏற்பாடு செய்யச்சொன்னான். வேறுவாகனங்கள் கிடைக்கவில்லை. அதற்குள் ஓசேப்பின் மூச்சு நின்றிருந்தது. “மங்களம் நடந்தவீட்டில் சவத்தை வைச்சிருக்க கூடாது தொரை.. இந்த வாகனத்திலையே எடுத்துட்டுப்போங்க” என்றார்கள்.

 “சவத்தை கொழும்புக்கு கொண்டுபோறதுன்னா மரணஅறிக்கை வேண்டும். நாவலப்பிட்டி மருத்துவமனைக்கு போவோம். அங்க என்னவுட்ட தம்பி லேபரா இருக்கான். வேண்டியமாதிரி செஞ்சுக்கலாம்” என அறைக்கதவைத் திறந்துகொண்டுவந்தார் மாமனார். “ஹொஸ்பிடலிலே கேட்டா வரும் வழியில தான் உயிர்போனதா சொல்லனும்… ஒங்கவுட்ட மகளுக்கு விசயம் தெரிய வேணாம்… கொழும்புக்கு போனப்பிறகு சொல்லிக்கலாம். எல்லாம் அவட பிற்கால நன்மைக்குத்தான் சொல்றன்”

மருத்துவ அறிக்கையை எடுத்துக்கொண்டு , மார்டின் சவமேற்றும் வாகனமொன்றை பிடித்தான். சவப்பெட்டிக்குள் வைத்தால்தான் வாகனத்தில் கொண்டுபோகாலாமென வெற்றிலைக் குதப்பலைத் துப்பிவிட்டு வாகனமோட்டி  சொன்னான். கால்சராயில் தெறித்த வெற்றிலைக் கறையை கவனிக்காதது போல சவப்பெட்டிக் கடைக்குப் போனான் மார்டின். சின்னப்பெட்டிகள் முதல் எல்லா அளவிலும் இருந்தன. கடைக்காரன் அளவு கேட்டான். மார்டினுக்கு துல்லியமாக சொல்ல முடியவில்லை. வயசைச் சொன்னான். ப்ரீசைஸ் வேண்டினால் எல்லா சவத்துக்கும் பொருந்துமென கடைக்காரன் ஒருபெட்டியை எடுத்துத் தந்தான். பேரம்பேசாமல் வாங்கிக்கொண்டான்.

மருத்துவமனையின் பின்வாசலால் சென்றபோது பிணவறையின் டைல்ஸ் பதித்த கல்மேசையில் ஓசேப்பு ஒருக்களித்துக் கிடந்தார். கால்களைப் பரத்தியபடியே விறைத்திருந்தார். அங்கிருந்த கூலியாள் கால்களை ஒடுக்கி கட்டைவிரல்களைப் பிணைத்துக் கட்டினான். மார்டினை அழைத்து ஒரு பக்கம் பிடிக்கச்சொன்னான். மார்டின் அருகில் சென்றான். அவனுக்குத் தொடுவதற்கு மனமில்லை… பயம் போன்றதொரு உணர்வு வயிற்றுக்குள் குமைந்தது.

தம்பியைக் கூப்பிட்டுத் தூக்கச் சொல்லலாம் என வாசலுக்குப் போனான். அதற்குள் அவன் ஓசேப்பரை பிணவறை கல்மேசையிலிருந்து கீழே தள்ளினான். ஓசேப்பரின் உடல்  “டொம்”மென்ற சத்தத்துடன் கீழே விழுந்து அசையாமல் கிடந்தது. தலை நிலத்தில் மோதித்தான் சத்தம் வந்திருக்க வேண்டுமென்ற எண்ணம் கூலியாளின் மீது கோபத்தை உருவாக்கியது. உடலை தள்ளிவிட்ட எதிர்விசையில் அவன் தள்ளாடிக்கொண்டு நின்றான். சண்டைபிடிக்கத் திராணியில்லை. எதையும் எதிர்த்துக் கேட்பதற்கு முதுகெலும்பில்லாமல் வளர்த்ததும் அப்பா தான். அதற்குள் அந்தக் கூலியாள் ஒரு நைலோன் கயிற்றை ஓசேப்பின் இரண்டு கைகளுக்கும் இடையில் கொடுத்து நெஞ்சோடு சேர்த்து சுருக்கிட்டு இழுத்து ஓசேப்பை  நகர்த்தத்தொடங்கியிருந்தான். விட்டத்தைப் பார்த்தபடி ஓசேப்பின் முகமிருக்க, பின்பக்கமும் கால்களும் உராய தூஷணங்களை இறைத்தபடி கூலியாள் ஓசேப்பை இழுத்தான்.

அதைக்கண்ட மார்டினுக்கு மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. அப்பாவின் பரந்த தோள்களுக்குள் முகம்புதைத்து வியர்வையை மணந்தபடி கிடந்த பால்யம் நினைவிலாடியது. பதினைந்து வயதுக்கு முன்புவரை எழுந்தவுடன் ஓடிப்போய் அப்பாவிற்கு அருகில் அரைமணி நேரமாவது படுத்திருப்பான். அப்பா தலையைத் தடவுவர். முதுகைத் தடவுவார். அது சுகமாக இருக்கும். அது அப்பாவை “அப்பா” என்று கூப்பிட்ட காலம். இன்னும் சிறுபிராயத்தில் அப்பா தலை குளிக்கும்போது மார்டினையும் இளையவர்களையும் சேர்த்தே குளிக்க வைப்பார். கிணற்று வாளியிலிருந்து அப்பாவின் தலையில் கொட்டும் நீர் தோள், முதுகு, வயிரெனப் பிரிந்து கீழே நிற்கும் மார்டினுக்கு மேலேயும் விழும். கொழும்பிற்கு வந்தபிறகு ஷவரில் குளிக்கும் போது மார்டினுக்கு அது ஞாபகம்வரும்.  இந்த உறவின் இழை எப்போது அறுந்தது என்பதை பலமுறை யோசித்தும் ஞாபகப்படுத்த முடியவில்லை.  கூலியாளை மறித்து இன்னொருவனையும் கூட்டிவருமாறு காசைக்கொடுத்தான். தம்பி வந்தவுடன் அவனையே பிரேதவாகனத்தில் வருமாறு சொல்லிவிட்டு மற்றுமொரு வாகனத்தை பிடித்து அதில் அம்மாவோடும் சிறிய தங்கையோடும் ஏறிக்கொண்டான்.

000

மழை துமித்துக்கொண்டிருந்தது. இறுதிச்சடங்கிற்கான பிரார்த்தனைகளை பாதிரியார் தொடங்கியிருந்தார். இரத்த உறவுகளை வரிசைப்படுத்தி எல்லோரையும் மூன்றுபிடி மண் போடசொன்னார் பாதிரியார். வரிசையில் வந்து பெயரெழுதிய மலர்வளையங்களை வைத்துவிட்டு மூன்றுபிடி மண்போட்டு கையில் அப்பிக்கொண்ட மண்ணை மினரல் வோட்டரில் கழுவிவிட்டு ஓடத்தொடங்கினார்கள் உறவினர்கள். மார்டினும் மூன்றுபிடி போட்டுவிட்டு மினரல் வாட்டரை எடுத்துக் கையைக் கழுவிக்கொண்டான். மழை வேகமெடுத்தது.  கூலியாட்களும் மழைக்கு ஒதுங்க மார்டின் மட்டும் குழியை மூடிக்கொண்டிருந்தான். மலர்வளையங்களையும் உடைத்துக் குளிக்குள் போட்டான். குழி சிறிது சிறிதாக நிறைய மனதை அழுத்திக்கொண்டிருந்த பெருஞ்சுமை கரைந்து அப்பாவின் நினைவுகளால் நிரம்பத்தொடங்கின. மார்டினின் முதல் கண்ணீர்த்துளி ஓசேப்பரின் மீது விழுந்தது.

000****000


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: