மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி19, 2020

சாவுவீடு – சிறுகதை -மன்னார் அமுதன்


சாவுவீடு

— மன்னார் அமுதன்

லூசியா முன்விறாந்தையில் இருந்து புதினம் பார்த்துக்கொண்டிருந்தாள். ரோட்டுக்கு அந்தப்பக்கமிருந்த புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் ஒரு சாவு. ஆண்டு அனுபவித்த ஒருவரின் இறப்பாக இருக்க வேண்டும்.  ஏற்ற இறக்கத்தோடு பறைமேளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். பறைமேளம் ஓய்வெடுக்க பான்ட் அடித்தார்கள். சனம் அதிகமாக இருந்தது. ஒரு ஐஸ்கிறீம் வண்டிக்காரனும் கச்சான் விற்பவனும் கொஞ்சம் தள்ளிநின்று வியாபாரம் பார்த்தார்கள். குருசு போட்ட கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்தாலும் கொண்டாட்டமாக இருந்தது அந்தச் சாவு வீடு.


”வெளிநாட்டுக் காசு போல” என லூசியா சொல்லிக்கொண்டாள்.  தனது மீதிக்கால வாழ்க்கையை நினைத்துக் கவலைப்பட்டாள். சாவை நினைத்துப் பயந்தாள். யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்குள் செத்துவிடுவேனோ என்று நினைத்தாள். மனம் இறுகிக்கொண்டு போகும் போது தான் தன் இரண்டு கால்களும் விறைத்துக்கொண்டதை உணர்ந்தாள். விக்டோரியா பிறந்ததிலிருந்து இப்படித்தான்… வாதம் பிடித்தது போல கால்கள் திசைமாறிக்கொள்ளும்.. காலம் போகப்போக தனியே எங்கும் போக முடியாமல் போய்விட்டது…  ஆனால் லூசியாவுக்கு வீட்டிற்குள்ளும் அடைந்து கிடக்க முடியாது.

செவ்வக வடிவ தடித்த சுவர் கொண்ட பழைய வீடு லூசியாவினுடையது. சதுரவீட்டை பாதியாகச் சுவரால் பிரித்து லூசியாவுக்கும் அவள் அக்காவுக்குமாக சீதனமாகக் கொடுக்கப்பட்டது. காணியின் வெளிவாசலில் இருந்து ஐம்பது மீட்டர் நீள வளவு … உள்ளே போனால் வெளிவிறாந்தையோடு வீடு தொடங்கும்.. தொடர்ந்து முன்வாசலோடு கூடிய விறாந்தை… அதை ஒட்டியபடி இரண்டு படுக்கையறைகள்…. அடுத்து பின்வாசலும் திறந்த குசினியும்… குசினுக்கு முன்னால் ஒரு அறை…  அறைக்குப் பின்னால் சுத்திக்கொண்டு வந்தால் மலசலக்கூடம்…. அதுக்குப்பக்கத்தில் வீட்டிலிருந்து பின்பக்கத்தால் வெளியேறும் வெளிவாசல்…

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படிக் கொடுக்கப்பட்டதோ அப்படியே இருந்தது வீடு. அந்த வீட்டிற்கான எந்தப்பராமரிப்பும் இல்லை.  வண்ணமடிப்பதில்லை… தூசிதட்டுவதில்லை… இத்தனை வருடங்களில் எந்த விதமான நல்ல காரியங்களும் அந்த வீட்டில் நடந்ததற்கான சுவடே இல்லை… வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாது. இங்கு தான் எழுபதைத் தாண்டும் லூசியாவும் அவள் மகள் விக்டோரியாவும் இருந்தார்கள். அவர்களது வீட்டைச் சுற்றி நிறைய அழகான புதுவீடுகள் வந்துவிட்டன.

லூசியாவின் புருசன் உயிரோடு இருந்தாலும் எங்கே இருக்கிறான்… எப்போது வருவான் என்றெல்லாம் தெரியாது… லூசியாவிற்கு ஒரு மகனும் உண்டு… அவனுக்கும் தொழிலுக்கும் தொடர்பேயில்லை… பிரிந்துபோன மூத்தமனைவிக்கு தாபரிப்பு கட்டிக்கொண்டு பணியிலிருக்கும் மற்றொருத்திக்குப் பிள்ளை பெற்றுக்கொண்டு தூரத்தில் வாழ்கிறான்.

கிழமைநாட்களில் அவனது மூன்று பிள்ளைகளைகளையும் கொண்டுவந்து விக்டோரியாவிடம் விட்டுவிடுவான்.  அவளுக்கு பிள்ளை பார்ப்பதில் பெரிய விருப்பமில்லை.. முகத்தைத் திருப்பினால் அண்ணண் அடிப்பான் என்ற பயத்தில் பார்த்துக்கொள்வாள்…

”தம்பியான்… இங்கயே பெரிய கஷ்ட சீவனமடா… எதுவும் காசிருந்தா தந்திட்டுப் போ…. இல்லாட்டா அரிசியையும் ஒரு மீன் டின்னையுமாவது வாங்கித் தாவன்… உண்ட பிள்ளைகளும் சாப்பிட வேணும் தானே… நாங்களும் வாய்க்கு ருசியா ஒரு நாள் திண்டதாப் போகும்”. லூசியா அடிக்கடி மகனிடம் இப்படிப் புலம்புவாள்.

”தரித்திரம் பிடிச்ச சனியங்களே… என்று தொடங்கி அவ்வளவு தூஷணங்களையும் தாயிடமும் தமக்கையிடமும் அவன் ஒப்பித்துவிட்டுப் களைப்புத்தீர ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொள்வான். தகப்பனும் வந்திருந்தால் குடியும் பாட்டுமென இன்னும் கொண்டாட்டமாக இருக்கும்.

சாவுவீட்டைப் பார்த்துக்கொண்டிருந்த லூசியா “இந்தப் பழைய கதிரைக்குள் எவ்வளவு நேரம் தான் குந்திக்கொண்டே இருக்கிறது. எழும்பிக் கொஞ்சமாவது நடக்கனும் இல்லாட்டி ஆட்டோவைப் பிடிச்சுக்கொண்டு சும்மாண்டாலுமாவது சந்தைப்பக்கம் ஒருக்கா போயிட்டு வரனும்…. யாரு செத்ததெண்டு இந்த அடி அடிக்கிறானுகள். காது கிளியுது. மனுஷர் சீவிக்கமுடியுதா இவனுகளோட…  என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு குசினிக்குள் நிண்ட மகளைக் கூப்பிட்டாள்…

மகள் வருவதைப் போலில்லை… ”செவிட்டு முண்டம்…. என்ன கனவுல  திரியுதோ… தெம்மாட்டுப் பிறப்பு… இத்தனை வயசுக்குப் பிறகும் எங்கயாவது பல்ல இளிக்கிறது” என்று பேசிக்கொண்டே ஒருகையை சுவருக்குக் குடுத்து மறுகையால் பொல்லை ஊன்றி  மெல்ல எழுந்தாள். எதிரில் சாவுவீடு முழுதாகத் தெரிந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாயிருந்தார்கள்.

“வெளிநாட்டுக் காசெண்டால் எல்லாம் வாருவாங்கள்… பாண்டல் வீடு… த்தூ…த்தூ…. பாண்டல் வீடு…த்தூ” என சாவுவீட்டைப் பார்த்துக்  காறித் துப்பினாள். எச்சில் அவள் காலுக்கு கீழயே விழுந்தது. வெறுங்காலால் நிலத்தோடு சேர்த்து எச்சிலைத் தேய்த்தாள். பின் மகளின் படுக்கை அறையை நோக்கிப் போனாள்.

அங்கு சுவரில் ஒட்டப்பட்டிருந்த நடிகர்களின் படங்களுக்குப் பக்கத்தில் புதிதாக ஒரு கட்டுமஸ்தான நடிகன் ஒருவனின் படத்தைச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தாள் விக்டோரியா…

“எவ்வளவு நேரமா கூப்பிடுறன்… நாப்பது தாண்டினப்பிறகும் என்ன ஆம்பளை வேண்டிக்கிடக்கு…. வெக்கமாயில்லையா… அதுல நடிகன் வேற…. இவன் எந்தப் படத்துல நடிக்கிறான் எண்டு போட்டிருப்பாங்களே… அதை வாசிச்சியா.. மொக்கு … மொக்கு .“ என்று சீண்டினாள் லூசியா.

“ஓமோம்… நாட்டுச் சண்டைய சாட்டுச் சொல்லி நீயும் அப்பாவும் படிக்கவச்சுக் கிளிச்ச திறத்தாலயும் கல்யாண வயசு வந்ததும் மாப்புளயோட சேத்துவச்சு அழகுபாத்ததாலயுமா வெக்கத்தைப் பத்திக் கேக்கிற… ஒண்டுக்கும் ரெண்டுக்குமா ஒவ்வொண்டுக்கும் நான் வேணும்… நான் விட்டுப்போட்டு போனா நீ கிளிஞ்ச பழஞ்சீலைதான்…” என ஆற்றாமையைக் கொட்டினாள் விக்டோரியா.

விக்டோரியா கோபத்தின் உச்சியில் தாயை ஒருமையில் பேசுவாள்… தூஷணங்களால் அர்ச்சிப்பாள்… லூசியாவும் அப்படித்தான். வீட்டிற்குள் நடக்கும் பிரளயம் வெளியில் கேட்காத படி சுவர் பார்த்துக்கொள்ளும்.

தனது இயலாமையை மகள் குத்திக்காட்டுகிறாள் என்பது லூசியாவின் தன்மானத்தைத் தூண்டிவிட்டது.  இன்னும் கூட எதையாவது சொல்லி அவளை அழ வைத்துவிட்டாள் போதும்… விக்டோரியா அன்று முழுவதும் கட்டிலில் கிடந்து அழுவாள் என்பது லூசியாவிற்குத் தெரியும்… இது விக்டோரியா காதலிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து அவளை அடக்க லூசியா கையாளும் தந்திரம் தான்… எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் விக்டோரிய தனது முப்பதின் நடுப்பகுதிவரை மிளிர்ந்த சருமத்தோடு தான் இருந்தாள்.

கொஞ்சம் யோசித்துவிட்டு லூசியா சொன்னாள்… “ எல்லாம் காஞ்சு, வறண்ட குளமாயிட்டு… மாச மழையும் இந்தா அந்தாண்டு நிக்கப்போகுது… இனித்தான் ராணி விக்டோரியா நீர நெறப்பி விரலால விரால் பிடிக்கப்போறா… சுகரும் பிரசரும் வந்துட்டு… கொலஸ்ரோல் கூடி எல்லாப்பக்கமும் பிதுங்குது… இருந்தா மூச்சுப்பிடிப்பு நிண்டா மூட்டுக் குடைச்சல்… முகமெல்லாம் வீங்கி விகாரமாயிட்டு.. மாசம் தவறாம கிளினிக்..  இந்த வள்ளலில.. முடிச்சா உன்னத் தான் முடிப்பனெண்டு ஆம்பிளைகள் வரிசை கட்டி நிக்கிறானுகளா ”

“கிழட்டுச் சனியனே…. என்ன முடிக்க எத்தனை பொடியங்கள் வந்தாங்கள்… முடிச்சா வெளிநாட்டுல தான் முடிச்சுக் குடுப்பனென்டாய்… ஒருத்தன் ஒல்லியெண்டாய்… ஒருத்தனுக்கு முட்டிவயிறெண்டாய்… இன்னொருத்தனுக்கு முடியில்லையெண்டாய்… ஒருத்தனுக்கு சாதி சரியில்லயெண்டாய்… பொயிண்டுல நிக்குற ஆமிக்காரன் வந்து கேட்டான் தானே, “காசில்லாட்டிப் பறவால்ல… சும்மா முடிக்கிறன்… இந்தக்குமர ஏன் இப்படி சீரழியவிடுறீங்க எண்டு…”  இப்புடியே எத்தனை பேரத் தட்டிவிட்டாய்… இருந்ததெல்லாம் வித்துத் திண்டுபோட்டு கடைசியா வந்தவனுக்கு சீதனம் குடுக்க ஒண்டுமில்லையெண்டாய்… நான் விரும்பினவனோட ஓடியிருந்தாக் கூட இப்புடியெல்லாம் கேக்கவேண்டியிருந்திருக்காதே… இந்த வீடு எனக்குத் தானே…    போடி வெளிய … சவமே…. கிழட்டு வயசுல உனக்கு ஆட்டோ புடிச்சு ஊர் சுத்தனும்… உன்ட மகனுக்கு ரெண்டு பொஞ்சாதி கேக்குது.. இந்த வயசுலயும் உன்ட புருசனுக்கு பொம்பிளை வேணும்.. உனக்கு வாயுக்கு வக்கனையா தின்னனும்….  எனக்குத் தெரியாதெண்டு நினைச்சியா… நான்.. கல்யாணம் முடிச்சுப்போனா உன்னப்பாக்க ஆளில்லாமப் போயிருமெண்டு தான் என்ன இப்படியே முத்த விட்டிருக்க… இந்தச் சாபம் உன்னை நாறித்தான் சாக வக்கும்.”  விக்டோரியாவுக்கு உரு ஏற்றுவதைப் போல மேளச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

சாவைப்பற்றி பேசினால் லூசியாவுக்குப் பிடிக்காது.. சாவதில் அவளுக்கு நாட்டமில்லை… மகள் தன் தந்திரங்களையெல்லாம் தெரிந்து தான் வைத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்தவுடம் லூசியாவுக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்தது. சுவரைப் பிடித்த படி தனது கையிலிருந்த பொல்லால் ஓங்கி ஓங்கி வீசினாள். விக்டோரியா இந்த விசிறலுக்குப் பழக்கப்பட்டவள் தான். இலாவகமாக விலகி ஒரு மூலைக்கு ஒதுங்கினாள்.

எப்படியும் ஒரு அடியாவது அடித்துவிட வேண்டும் என்ற எத்தணிப்பில் லூசியா பொல்லை விசுக்கிக்கொண்டு ஓரடி முன்னால் வைக்க நிலைதடுமாறி கீழே விழுந்தால்.

”இப்புடியே கிடந்து சாவு” என்று சொல்லி காலால் பொல்லைத் தூரத் தள்ளிவிட்டு அந்த நாயகனின் படத்தின் மீதியையும் பசை போட்டு ஒட்டினாள்.

லூசியா கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலியில் முனங்கினாள்.

”இருடி அண்ணன் வரட்டும்… அவனிட்ட சொன்னால் தான் நீ அடங்குவ… கையக் கால முறிக்கணும்… ஆம்பிள கேக்குதா உனக்கு…. என்னை இப்ப தூக்கிவிடப்போறியா இல்ல அண்ணனுக்கு போனெடுத்து வரச்சொல்லவா” என்றுபயங்காட்டினாள்.

அண்ணன் வந்தால் அடிப்பானெண்டு விக்டோரியாவுக்குத் தெரியும். அவனுக்கு அடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டும். இருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறொரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருக்குமாறு போனமுறை பிரச்சினை வந்தபோது சொன்னான்.  வீட்டை விற்றால் காசை அண்ணன் எடுத்துவிடுவான் என அவளுக்குத் தெரியும்.. லூசியாவிற்கும் தெரியும்… ஆனால் வீண் பிரச்சினை எடுப்பானென்று அமைதியாக இருந்தாள்.

”இந்த வீட்டுல இருந்தாதான் கிளினிக் போக லேசு… நான் விக்கமாட்டன்” என்று விக்டோரியா சொல்லி முடிப்பதற்குள் அருகில்கிடந்த நாய்ச் சங்கிலியால் விசுக்கி விட்டான். கை, கால் முதுகெல்லாம் நீள்வட்டம் நீள்வட்டமாக சங்கிலி பதிந்திருந்தது.  கதிரையைத் தூக்கி அவள்மீது வீசினான்.  உடம்பிலிருந்து அந்த வலி போகவே ஒருமாதம் ஆனது.

ஒருநாள் விக்டோரியா பாண் வாங்கப் போன வழியில் வழமையாக வரும் ஆட்டோ ஓட்டுனரைக் கண்டு புன்னகைப்பதைப்  பார்த்துவிட்டான்.  அன்று வீட்டிற்கு வந்து ஒட்டிவைத்திருந்த நடிகர்களின் படங்களை எல்லாம் கிளித்தெறிந்தான்.  முடியைப்பிடித்து தலையைச் சுவரோடு சேர்த்து அடித்தான். மண்டை வெடித்து இரத்தம் சுவரில் உறைய அப்படியே இரண்டு நாட்கள் கிடந்தாள் விக்டோரியா. பின்பு எழுந்து கிழிந்துகிடந்த படங்களைப் பொருத்தி ஒட்டினாள்.

இப்போதெல்லாம் அண்ணணை நினைத்தாலே பயம்… கைகள் நடுங்கும்.. வியர்த்துக் கொட்டும்… அவன் வரும் போது உயரதிகாரியைக் காணும் படைச்சிப்பாயைப் போல ஒடுங்கி நின்றுவிடுவாள். அவன் போகும்வரை மனதிற்குள் நடுக்கமும் கால்களில் பலவீனமும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

கதிரைக் கொண்டு வந்து லூசியாவின் அருகில் வைத்துவிட்டு அவளின்  முன்புறமாக வந்து அவளது இரண்டு கைகளையும் கமக்கட்டிற்குள் குடுத்து தூக்கிக் கதிரையில் வைத்தாள்.

முன்னும் பின்னும் அசைந்து கதிரைக்குள் தன்னைப் பொருத்திக்கொண்ட லூசியா பொல்லை எடுத்துத்தருமாறு கேட்டாள். எடுத்துக்கொடுத்த அடுத்தநொடி விக்டோரியாவை நோக்கி பொல்லை விசிறினாள் லூசியா.

காலில் பட்ட வசமான ஒரு அடியோடு பொல்லைப் பிடித்துப் பறித்தெடுத்தாள் விக்டோரியா.

“அவனிட்ட சொல்லுவியா… அவனிட்ட சொல்லுவியா… அவனை வீட்டுக்குள்ள எடுப்பியா…. அவனிட்ட சொல்லிறதெண்டா நீ இருக்கக் கூடாது… சாவு… சாவு” என்று கத்திக்கொண்டே லூசியாவின் கால்களில் அடித்தாள்.

அடி தாங்காத லூசியா, “சொல்லமாட்டன்… என்ன விட்டிரு…. இனி எதுவும் சொல்ல மாட்டன்… வீட்டுக்க எடுக்கமாட்டன்… அடிக்காத நோகுது”என்று கத்தினாள்.

பொல்லைத்தூக்கிப் போட்டுவிட்டு குசினிக்குள் போன விக்டோரியா தேத்தண்ணி தயாரித்தாள். ஒன்றை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக்கொண்டு முன்விறாந்தைக்குப் போனாள்.

பட்டாசுச் சத்தத்தில் சாவுவீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது… வெளியூரிலிருந்தெல்லாம் சொந்தங்கள் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் வாசலிலேயே கட்டித் தழுவினார்கள். கண்ணீர் விட்டார்கள். பிறகு சிரித்தார்கள்… ரோட்டை மறித்துப் போட்டிருந்த கூடாரத்திற்கு கீழே நின்று நிறைய கதைத்துக் கொண்டார்கள். உறவுக்கார சிறுவர்கள் எல்லாம் ஒன்றுகூடி விளையாடினார்கள். முதியவர் ஒருவர் எல்லோரையும் நோக்கி “முகம் பாக்காதவங்க … பார்த்துக்கொள்ளுங்க” என்றார்.

நாலைந்து இளம் பொடியங்கள் அடிக்கடி தலையைத்திருப்பி விக்டோரியாவைப் பார்ப்பது போலிருந்தது. விக்டோரியா  அப்படியே கதிரையில் சாய்ந்து  காலுக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டாள். பாவாடையின் நுனியை எடுத்து முகத்தைத் துடைத்தாள். முடியின் ஒரு பகுதியை முன்னால் இழுத்துவிட்டு ரோட்டைப் பார்த்தாள்… சுவற்றில் ஒட்டியிருந்த பொட்டை எடுத்து கண்ணாடி பார்க்காமலே நெற்றியில் வைத்தாள்.

ஊர்வலம் விக்டோரியாவின் வீட்டைத் தாண்டி போய்க்கொண்டிருந்தது. கடைசி ஆள் கடந்து போகும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

தோரணங்களையும் கூடாரத்தையும் நீக்கியதும் சாவுவீடு மத்தியான வெயிலில் பளீரெனத் தெரிந்தது.

விக்டோரியா சத்தமாக சொல்லிக்கொண்டே படுக்கையறைக்குப் போனாள், ”மனுசன் சீவிப்பான இந்த வீட்டுல…. பாண்டல் வீடு… பாண்டல் வீடு”

—-

நன்றி : நடு இணைய இலக்கிய இதழ்
https://naduweb.com/?p=11124


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: