மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி19, 2020

குப்பை இல்லா உலகம் எனும் பெருங்கனவு


குப்பை இல்லா உலகம் எனும் பெருங்கனவு

குப்பை என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். இலங்கை உட்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் குப்பைகளை எரிப்பதன் மூலமும் புதைப்பதன் மூலமும் அப்புறப்படுத்துகிறார்கள். இந்த இரண்டு முறைகளுமே சூழலுக்கு நன்மை பயக்குவதில்லை. குப்பைகளை எரிக்கும் போது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலக்கின்றன. சாம்பல் உட்பட பல விதமான துணுக்குகள் காற்றில் பரவி உலக வெப்பமயமாதலுக்கும் கால நிலை மாற்றங்களுக்கும் வலுச்சேர்ப்பதோடு ஆறுகள், கடல், காடுகள் போன்றவற்றை மாசடையச் செய்கின்றன. தொழிற்றுரையில் வளர்ந்துள்ள பல நாடுகளால் வெளியேற்றப்படும் சாம்பலாக்கிகள்  சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி நுரையீரல் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகின்றன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்துவதில் மன்னார் நகரசபை, முசலி பிரதேசசபை,  மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. முசலி பிரதேச சபையினரால் ஒரு மாதத்திற்கு 120 மெற்றிக்தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 80 மெ.தொன் உக்கக்கூடிய கழிவுகளாகவும், 40 மெ.தொ உக்காத கழிவுகளாகவும் உள்ளன. முசலி பிரதேச கழிவுகளைக் கொட்டுவதற்கு கொண்டச்சி எனும் ஊரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உக்காத கழிவுகள் இங்கு எரித்து அழிக்கப்படுவதுடன் இவ்விடத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாந்தை மேற்கு பிரதேச சபையினரால் 14800 கிலோகிராம் கழிவுகள் ஒரு மாத்த்தில் சேகரிக்கப்படுகின்றன. மடுமாதா திருவிழாக் காலங்களில் மேலதிகமாக 20000 கி.கி கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பின்பு இவை தரம் பிரிக்கப்பட்டு ஆழ்குழிகளில் புதைக்கப்படுவதன் மூலம் பசளையாக்கப்பட்டு மீழ்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

மன்னார் பிரதேச சபையினால் ஒரு மாதத்தில் 354 டிராக்டர் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 35 உக்க்க் கூடிய கழிவுகளும் 319 டிராக்டர்கள் உக்காத கழிவுகளாகவும் உள்ளன.  நானாட்டான் பிரதேச சபையால் மாதத்திற்கு 198 டிராக்டர்கள் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 193 டிராக்டர் கழிவுகள் உக்கக் கூடியவையாக உள்ளன. உக்கக் கூடிய கழிவுகள் ஆழ்குழிகளில் புதைக்கப்பட்டு பசளையாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன. உக்காத கழிவுகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.

மன்னார் நகர சபையினால் வட்டார அட்டவணைக்கு அமைவாக காலை மாலை நேரங்களில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. வாரத்தில் ஒருநாள் கிராமங்களில் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இங்கு ஒரு மாதத்தில் 450 மெ.தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதில் 430 மெற்றிக் தொன் உக்கக்கூடிய கழிவுகளாகவும் 20 மெ.தொன் உக்காத கழிவுகளாகவும் உள்ளன. உக்கக் கூடிய கழிவுகள் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தரம் பிரிக்கப்பட்டு பசளை தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. உக்காத கழிவுகள் அரைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக, தடைசெய்யப்பட்ட மக்காத கழிவுகள் எவை, இவற்றால் மனித குலத்திற்கு ஏற்படும் தீங்குகள் யாவை என்பன குறித்து நோக்கும் போது கீழ்வரும் உண்மைகள் துலங்குகின்றன.

தடைசெய்யப்பட்டவை :

பொலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது, அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்டவேண்டாம்; நச்சுத்தன்மை இல்லாதது, நீர்புகாதது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்கலாம். உணவுகளை பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் இல்லாமல் பாதுகாக்க முடியும் எனக் கூறினர். இதன் ஆபத்தை உணராமல் பாராட்டி வரவேற்றோம். இப்படி சீரும், சிறப்புமாக வரவேற்கப்பட்ட பொலிதீன் பொருட்கள் தான், இப்போது, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவை தற்போது குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், பால் பாட்டில்கள், குழந்தைகளுக்கான நாப்கின் என ஆரம்பித்து, குப்பை எடுக்கும் கறுப்பு கவர்கள், விளம்பர பேப்பர்கள், குடிக்கும் தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களை பார்சல் செய்யும் கவர்கள், மைக்ரோவேவ் ஒவனில் வைக்கும் பொருட்கள், டம்ளர்கள், செருப்புகள் என நாம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அளவிற்கு கலந்துவிட்டது.இது தவிர மருத்துவ துறையில் ரத்தம் வைக்கும் கவர்கள், ஊசிகள், குளுக்கோஸ்பாட்டில்கள், மருந்து பாட்டில்கள், கை உறைகள் என மருத்துவ உலகிலும் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பில்லியன் (ஒரு பில்லியன் 100கோடி) பைகளும், 24 பில்லியன் தண்ணீர் பாட்டில்களும் தூக்கி எறியப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, சீனா, பாகிஸ்தானில் மட்டும் 23 ஆயிரம் டன் மின்னணு குப்பை சேகரமாகின்றன. இந்த பாலிதீன் குப்பை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கிவிடுவதில்லை.

மழைநீர் செல்லாது :

இதனால் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்கின்றனர். ஆனால் மறுசுழற்சியின் அளவை விட, பயன்பாட்டின் அளவு பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. இப்படி வளர்ந்து நிற்கும் பாலிதீன் மனித இனத்திற்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புறத்தில் உள்ள நுண் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எறிதல், எரித்தல், பயன்படுத்துதல் என மூன்று வகையிலும் பொலிதீனால் ஆபத்து ஏற்படுகிறது.பயன்படுத்திய பாலிதீன் கவர்கள், பாட்டில்களை பூமியில் எறிவதன் மூலம் மழைநீர் பூமியின் அடியில் செல்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்களில் மழைநீர் தேங்கி, மலேரியா, டெங்கு, கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகி விடுகிறது. இத்தகைய கவர்கள் ஆற்றினையும் மாசுபடுத்தி, நீரோட்டத்துடன் கலந்து அணைகள், கடல் பகுதிகளை மாசுபடுத்தி, கடல் வாழ் உயிரினங்களுக்கு அழிவினை ஏற்படுத்தி விடுகிறது. வண்ண, வண்ண பாலிதீன் பைகளை உணவு என நினைத்து விலங்குகள் சாப்பிட்டு இறந்துவிடுகின்றன.

புற்றுநோய் வரும் :

பொலிதீன் பைகள் எரிக்கப்படுவதால் கார்பன் மோனாக்சைடு, டயாக்ஸின், அல்டிஹைடு ஆகிய நச்சுப்புகைகள் வெளியாகின்றன. இந்த புகையைச் சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய்கள், கண் எரிச்சல், தலைவலி, நுரையீரல், தைராய்டு சம்பந்தமான நோய்கள் வருகின்றன. இதனால் புவிவெப்பமயமாதலும் நடக்கிறது. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், சமையலறை பொருட்களில் அதிக சூடான உணவுப்பொருட்களை வைக்கும் போதோ, சூடான குடிநீரை வைக்கும் போதோ அதிலிருந்து டயாக்சின் என்னும் நச்சுப்பொருள் வெளியாகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இந்த நச்சுப்பொருள் வெளியாகும். பாட்டிலில் உள்ள தண்ணீரில் அசிட்டால்டிஹைடும், பிஸ்டீனால் ஏ என்னும் நச்சுப்பொருளும் கலக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும். உடல் பருமன், சர்க்கரை நோய் உண்டாகும். குடிநீர் குழாய்களில் அதன் வளையும் தன்மைக்காக ‘தாலேட்’ என்னும் நச்சுப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த ‘தாலேட்’ குழந்தைகளின் விளையாட்டு பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தையின்மை, பிறப்புக் குறைபாடுகள், கருப்பைக் கட்டிகள் உண்டாகின்றன. பொலித்தீன் பைகள் 20 மைக்ரோன் தடிமனுக்கு கீழ் உள்ளவற்றை அரசு தடை செய்துள்ளது. அதிகப்படியான பைகளின் பயன்பாட்டினை தடுக்கவே இந்த தடை. மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகள் அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்து ஆக்ஸோபிளாஸ்டிக்குகள், ஹைடிரோ பிளாஸ்டிக்குகள் அல்லது நார்ச்சத்து உடைய பிளாஸ்டிக்குகள் என வகைபடுத்தப்படுகின்றன. ஹைடிரோ அல்லது நார்ச்சத்து உள்ள பிளாஸ்டிக்குகள் விவசாய கழிவு பொருட்கள், மக்காச்சோளம், சோயா, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் 10 முதல் 45 நாட்களில் மக்கிவிடும் என்றாலும் இவற்றை மற்ற பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து மறுசுழற்சியோ அல்லது மக்கச்செய்யவோ முடியாது. தனி இடம் வேண்டும். இவற்றை எரிப்பதால், மீத்தேன், கரியமில வாயுக்கள் வெளியாகின்றன. இதனை தயாரிக்க செலவும் அதிகம் ஆகும்.எனவே பொலிதீன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாற்றாக சணல், துணிப்பைகளை பயன்படுத்தவேண்டும். பொருட்கள் வாங்கும் போது பாத்திரங்கள், பைகள் எடுத்துச் செல்லவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

திண்மக் கழிவகற்றலில் இலங்கையின் செயற்படுதிறன்:

எமது நாட்டின் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் மீள்சுழற்சி என்பது பல வருடங்களாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், செயன்முறையில் அது இன்னமும் ஈடேறவில்லையென்றே கூற வேண்டும். மீள்சுழற்சி என்பது இலங்கையில் கொள்கையளவில் மட்டுமே உள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து, நாடெங்கும் திண்மக் கழிவகற்றல் விவகாரம் பிரதான பேசுபொருளாகிப் போனது. அவ்வேளையிலேயே திண்மக் கழிவகற்றலின் அவசியம் குறித்து நாடெங்கும் பிரதானமாகப் பேசப்பட்டது; அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன.

வீடுகள், வேலைத்தலங்கள் போன்றவற்றில் சேருகின்ற குப்பைகளையெல்லாம் தரம் பிரித்துச் சேகரிக்கும் நடைமுறையும் ஆரம்பமானது. ஆனால் தரம் பிரித்து எடுக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இறுதியில் என்னதான் நேருகின்றதென்பது எவருக்குமே இதுவரை தெரியாது. பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தப் போவதாக உரத்துப் பேசப்பட்டது. நிலத்தில் உக்கல் அடையக் கூடிய பொலித்தீனுக்கு மாத்திரமே இனிமேல் அனுமதியுண்டு என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் எதுவுமே நடைமுறையில் சாத்தியமாகவில்லை. பொலித்தீனும் பிளாஸ்டிக்கும் நாட்டையே தாராளமாக இன்னும்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வீதியோரங்களில் தாராளமாக வீசப்பட்டுக் கிடக்கின்ற பிளாஸ்டிக் வெற்றுப் போத்தல்களையும், பொலித்தீன் கழிவுகளையும் பார்க்கின்ற போது உண்மை புரிகின்றது. பொலித்தீனையும் பிளாஸ்டிக்கையும் ஒழிப்பதென்பது நடைமுறைச் சாத்தியமான விடயமல்ல. அதேசமயம், இலங்கையில் திண்மக் கழிவகற்றல் என்பது எதிர்காலத்தில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தத்தான் போகின்றது.

பிளாஸ்டிக்கும், பொலித்தீனும் உரிய முறையில் மீள்சுழற்சி செய்யப்படுவதாக இருப்பின் வீதியில் அவற்றை எம்மால் காண முடியாது. அவை மறுவடிவம் பெற்று மீண்டும் சந்தைக்கு வந்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்தியா போன்ற சில நாடுகளில் கழிவு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன.

நாட்டில் நாளுக்குநாள் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. நாளாந்தம் நுகர்வுப் பொருட்களின் தேவையும் அதிகரித்தபடி செல்கின்றது. இன்று அத்தனை நுகர்வுப் பொருட்களையும் பொதி செய்வதற்கு பொலித்தீனையும் பிளாஸ்டிக்கையும் விட்டால் எமக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே பொலித்தீன், பிளாஸ்டிக் உற்பத்தியும் வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேசமயம் அவை கழிவுகளாக எமது சுற்றாடலை மாசுபடுத்திக் கொண்டே செல்கின்றன.

இன்றைய நவீன யுகத்தில் இவற்றிலிருந்து மீள்வதென்பது இலகுவான காரியமல்ல. இதனைக் கட்டுப்படுத்துவதென்பது தனிமனிதனால் இயலக் கூடிய காரியமும் அல்ல. அசேதனக் கழிவுகளின் பெருக்கத்தால் நாடு குப்பை மேடாவதைத் தடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான உறுதியான திட்டங்களை செயற்படுத்த வேண்டியது அவசியம். இல்லையேல் சுற்றாடல் பாதிப்பு எமக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

மன்னார் மாவட்டத்திலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க பொலித்தீன் பாவனையைக் கைவிட வேண்டும். அத்தோடு தரம்பிரிக்கப்பட்ட குப்பைகளை உரிய முறையில் பசளையாக்கியோ, விற்றோ இலாபமீட்டக்கூடிய புதிய நுட்பங்களை நாம் உள்வாங்க வேண்டும். மன்னார் நகரசபைப் பிரிவில் மட்டுமே தற்போது  கழிவுமுகாமைத்துவமானது உரிய இயந்திர வசதிகளோடு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. பிற பிரதேச சபைப் பிரிவுகளில் இருந்து நகரசபை முகாமைத்துவநிலையத்திற்கு குப்பைகளைக் கொண்டுவருவதில் உள்ள தூரம், நேரம், போதிய ஆளணியின்மை போன்ற காரணங்களினால் குப்பைகளை மீழ்சுழற்சிக்கு உட்படுத்துவதில் சிக்கல்கள் தொடர்ந்தவண்னமே உள்ளன என்பது அனைவருக்கும் கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: