நாளை எல்லாமே கிடைத்துவிடலாம்…
============================== மன்னார் அமுதன்
அவசரமாய் தேடிய போது தான் தெரிந்தது
வங்கிப்புத்தகம் தொலைந்திருந்தது
ஐந்து நிமிட தியானத்தில்
ஆற்றுப்படுத்திக்கொண்டு
அடுத்தகட்டமாய் வங்கிக்கு நகர்ந்தேன்
புதிதிற்கு விண்ணப்பித்தபோது
இன்னும் இருவாரம் ஆகுமென்றார்கள்
அதற்குள் மாலை வந்திருந்தது
மளிகைப் பொருட்களை வாங்கிக்குவித்து
வீடு திரும்புகையில் தெரிந்தது
வண்டிச்சாவி தொலைந்திருந்தது
தேடிக்களைத்து திரும்புகையில்
மாடு தின்றிருந்தது மளிகைப் பொருட்களை
இதுவரை தொலைத்த எல்லாவற்றையும்
நினைத்துக்கொண்டு வீடடைகையில்
தொலைத்ததைக் கண்டெடுத்த உற்சாகத்தோடு
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது குழந்தை
நாளை எல்லாமே கிடைத்துவிடலாம்…
======= மன்னார் அமுதன்
மறுமொழியொன்றை இடுங்கள்