மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்26, 2012

முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”


முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி” 
                                                                                    — மன்னார் அமுதன்

தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார்.  சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.

 

நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர்.  பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்… காதலைத் தான்… காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.

 

ஒருவரின் மீது வைத்திருக்கும் காதலை எழுத்தின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ கூறிவிட வேண்டும். இதயங்களுக்கிடையே பகிரப்படாத எத்தனையோ காதல்கள் இன்றும் ஏக்கப் பெருமூச்சுகளோடே சுற்றித் திரிகின்றன. பகிரப்படாத அன்பு பெறுமதியற்றதாகி விடுகின்றது. ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோம் என்பதை அடிக்கடி செயல்களின் மூலம் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு உணர்த்தப் பிரயத்தனப்படும், ஒரு பகிரப்பட்ட ஒரு காதலின் தொகுப்பாகவே கவிஞர் சுரேஷ்குமாரின் அழகிய இராட்சசியை நான் பார்க்கிறேன்.

 

மிக எளிய நடையில், அனைவருக்கும் விளங்கும் வகையில் ““சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்ற பாரதியின் வாக்கிக்கேற்ப கவிதைகளைப் படைத்துள்ளார் சுரேஷ்குமார்.

 

“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த். சுரேஷ்குமாரின் உள்ளத்து உணர்வுகள் கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. யதார்த்தமான உவமைகளைக் கையாண்டு கவிதைகளுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார். நான் ரசித்த அவருடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.

“அரிசி மண்ணெண்ணெய் 

வாங்க வரிசையில்

முண்டியடிக்கும் ஜனங்களைப் போலவே

முண்டியடித்து நிற்கின்றன

என் கனவுகள்”

 

‘கண்ணாடியைப் பார்த்து 

உன்னழகை சரிசெய்து கொள்கிறாய்

அனைவரும்

உன்னைப் பார்த்து

தங்களின் அழகை

சரிசெய்து கொள்கின்றனர்”

அழகு என்பது எங்கு உள்ளது என்பது இன்றுவரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்பதை நாம் அறிந்திருந்தாலும், மற்றொருவர் பார்த்து தம்மைத் திருத்திக் கொள்ளும் வகையில்

‘என் கன்னக்குழிகளில் 

ஊற்றி வைத்திருக்கின்றேன்

நீ கொடுத்த முத்தத்தின்

ஈரத்தை”

 

தேநீர் அருந்திய

கோப்பையை எறிந்துவிடாதே

இதழ்கள் பட்ட 

கோப்பையின்

ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது

நம் காதல்

காதலில் வென்றவர்கள் சாதனை படைக்கிறார்கள். காதலில் தோற்றவர்கள் சரித்திரம் படைக்கிறார்கள் என்பார்கள். காதல் எவரையும் வீழ விடுவதில்லை. பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயத்தில் அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை நினைவு படுத்துவதற்காக வெளியிடப்படும் இந்நூலோடு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு இன்னும் பல நூல்களைப் படைத்து கவியுலகில் அழியாத சுவடுகளை கவிஞர் முனைவென்றி நா.சுரேஷ்குமார் பதிக்க வேண்டுமெனெ மனமாற வாழ்த்துகின்றேன்.

 

#அழகிய ராட்சசி கவிதை நூலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து 

 


Responses

 1. .வணக்கம்
  அமுதன்,

  மிகவும் அருமையான படைப்பு வரிகளும் அருமை வாழ்த்துக்கள்
  தேநீர் அருந்திய

  கோப்பையை எறிந்துவிடாதே

  இதழ்கள் பட்ட

  கோப்பையின்

  ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது

  இந்த வரிகளில் எவ்வளவு கருத்துக்கள் புரையோடியுள்ளது,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: