மன்னார் அமுதன் எழுதியவை | ஜனவரி12, 2012

அன்றும் இன்றும் என்றும் – பொங்கல் (சிறப்புக் கவியரங்கக் கவிதை)


வசந்தம் தொலைக்காட்சியில் 2012-01-15 ஆம் திகதி ஒளிபரப்பப்பட உள்ள பொங்கல் சிறப்புக் கவியரங்கம் – கவிபாடுவோர் தமிழ்மணி அகளங்கன்(தலைமை), வதிரி சி.ரவீந்திரன், கிண்ணியா அமீர் அலி, மன்னார் அமுதன்

கண்ணிரண்டும் காதிரண்டும் கொண்டவ னாயல்லாமல்
பண்ணிரண்டு படைக்கும் ஆற்றலோடு எனைவகுத்த
கண்ணாலோ காதாலோ கண்டறியா கர்த்தாவே
என்நாவில் வந்தமர் வாய்.

ஆன்ற பெருங்கவிஞர் அகளங்கன் தலைமையிலே
தோன்ற நான்செய்த பெரியதவம் யாதறியேன்
கூனோடும் குறையோடும் பிறக்குமென் கவிதையிலே
குறைகண்டால் பொறுத்தருள்வீர்

அன்று:
மண்ணிலே கருவாகி
மண்ணிலே உருவாகி
மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒரு வார்த்தை
பொன்னைக் குறித்திடலாம்
மண்ணென்ற ஒரு வார்த்தை
மண்ணைக் குறிப்பதில்லை

தோழர்களே
மண்ணென்ற ஒரு வார்த்தை
மண்ணைக் குறிப்பதில்லை
அது நம் முன்னோரின் மானம்

மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து
வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி
ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து
பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி
பசுவின் பாலூற்றி
ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல்

பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்
பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்

தமிழர் பட்ட துன்பமெல்லாம் மங்கட்டும்
தரணியிலே இன்ப வெள்ளம் பொங்கட்டும்

இன்று:
பொங்குக பொங்கலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ…
நான் பொங்கலைத் தான் பாடுகின்றேன்

பொங்குக பொங்கெலென்று
புலவர்கள் பாடிவிட்டால்
பொங்கிடுமோ…
தமிழர் குடி பெற்ற துன்பம்
மங்கிடுமோ
தரணியிலே இன்ப வெள்ளம்
தங்கிடுமோ

தரம் பிரித்து
விதை விதைக்க காணியுமில்லை
தரிசு நிலம்
கிழித்து உழ ஏருமேயில்லை
உருப் படியாய்
ஊரில் ஒரு காளையுமில்லை
உலைக்குப் போட
உலக்கில் சிறு நெல்லுமேயில்லை

வீட்டிற்கு ஒருவர்
விரைந்தோடிப் போய் நாட்டைக்
காக்கத் தேவையுமில்லை

நல்லதுதான் தோழர்களே
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்கு

ஏதோ ஒரு மூலையிலே
ஒடுங்கிக் கிடந்துவிட்டு
பசித்தால் பாண் தின்னும்
பரம்பரை நாம்

தீதோ நன்றோ
ஏதும் அறியாமல்
ஏதோ ஒரு நாட்டில் உழுகின்றோம்

மண்ணும் நமதல்ல
மாடும் நமதல்ல -விளையும்
பொன்னும் நமதல்ல
பொருளும் நமதல்ல… உழுகின்றோம்

ஓயாமல் உழைத்துவிட்டு
சாய மடியின்றி
எங்கோ ஒரு மூலையிலே
சாகின்றோம்

நாமில்லா நாடா – தனியாக
நாடென்றும் நிலமென்றும்
நமக்கெதற்குத் தோழர்களே

என்றும்:

நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா
என்றும் ஏர் பூட்டியுழ
சாதி சனம் கூடியழ
நமக்கெதுவும் வேண்டாம் தான்
நம் குடிக்கும் வேண்டாமா

மண்ணிலே கருவாகி
மண்ணிலே உருவாகி
மண்ணையே ஆண்டவனே உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

விளைநிலங்கள் செழிக்காது
சூரியன் இன்றி
உழைத்துக் களைத்து உழவனுக்கு
சொல்லுவோம் நன்றி

நன்றி சொல்ல நாமும் இன்று
பொங்க வேண்டுமே
நாளை ஒரு நாள் மலரும்
பொங்க வேண்டுமே

பொங்கட்டும் இன்பம்
பொங்கலைப் போலினிமேல்
மங்கட்டும் நாம் பட்ட துன்பமெலாம்
தங்கட்டும் இன்பம் தரணியெல்லாம்

===================


Responses

 1. தோழர்களே
  மண்ணென்ற ஒரு வார்த்தை
  மண்ணைக் குறிப்பதில்லை
  அது நம் முன்னோரின் மானம்//

  வீட்டிற்கு ஒருவர்
  விரைந்தோடிப் போய் நாட்டைக்
  காக்கத் தேவையுமில்லை//

  நமக்கெதுவும் வேண்டாம் தான்
  நம் குடிக்கும் வேண்டாமா//

  நன்றி சொல்ல நாமும் இன்று
  பொங்க வேண்டுமே
  நாளை ஒரு நாள் மலரும்
  பொங்க வேண்டுமே//

  ‘சிறப்பு கவியரங்கக் கவிதை’ சிறப்பு.. அருமையான சொல்லாடல்களும் ஆங்காங்கே வந்துபோகும் ஒற்றைப்புற சந்தமும் அருமையாக இருக்கிறது.
  இதன் குரல் வழி வடிவம் கேட்க, பார்க்க ஆவல். வாழ்த்துக்கள் அமுதன்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: