மன்னார் அமுதன் எழுதியவை | மே25, 2011

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்”


படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியால் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.

இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.

அத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ”இலக்கியமும் எதிர்காலமும்“ எனும் கட்டுரைத்தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மீண்டும் துளிர்ப்போம் – சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை

“டேய்! எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ? அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” — (உயிரிலும் மேலானது)

“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே… என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ!” – (பொய்முகங்கள்)

என்னும் வரிகள் கதாநாயகர்கள் சிக்கியுள்ள இக்கட்டான சூழலை வெளிப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள திருமணத்தை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி உயிர்பிழைத்தவர்களுக்கு இப்படியொரு பிரச்சினையும் உண்டென்பதையும், மாணவப் பருவத்தில் உருவாகும் சாதிப் புறக்கணிப்பின் தாக்கத்தையும் க.பரணீதரன் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.

இவரின் மெய்ப்பட வேண்டும் எனும் கதையை வாசிக்கும் போது கமலா விஜயரத்தினவின் தி ஹோம் கம்மிங் எனும் ஆங்கிலக் கதை நினைவில் மோதுகிறது. கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைதேடிப் பயணிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சினைகளை அக்கதை அழகாகச் சித்தரிக்கின்றது. அதே போன்றததொரு பிரச்சினையை சியாமளாவும் எதிர்நோக்க நேரிடலாம் என்னும் யதார்த்தத்தை

“பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் தான். என்ன தான் விழிப்பாக இருந்தாலும் அவளைப் பொறிக்குள் சிக்க வைத்து விடுவதாகத் தான் இந்த உலகம் இருக்கிறது. இது தான் உண்மை நிலை….” எனும் வரிகள் ஊடாக வெளிப்படுத்துகிறார்.

சில கதைகளில் கதைக்குள் ஒரு பாத்திரமாக நின்றும், சில கதைகளில் கதைக்கு வெளியே நின்று ஒரு கதைசொல்லியாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் கதாசிரியர். இவை இரண்டுமே கதை சொல்லும் பாங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே.

ஆனால் புதிய காலடி எனும் கதையில் ராசுவாக கதைகளில் பயணிக்கும் பாத்திரம் கதையை கலந்துரையாடலாக நகர்த்திச் செல்கின்றது. இடையில் ராசுவைப் பற்றிக் கூறுகையில் கதைசொல்லியும் கதைக்குள் இணைந்துகொள்வது சப்பாத்துக்குள் புகுந்து கொண்ட சிறு சரளைக் கல்லைப் போன்று உள்ளது.

புதியகாலடி – ராசு கதாப்பாத்திரம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முனையும் படைப்பாக இருப்பது அருமை. சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏற்படவேண்டும் என்பதற்கமைவாக தங்களுக்கு நன்மையே செய்திராத துரைசிங்கத்தை தன்னுடைய வீட்டிலேயே வைத்து பராமரிக்க முன்வருதல் என்பது கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனைக்குத் தளமமைக்கிறது.

நகுதற் பொருட்டன்று, பகிடிவதை போன்ற சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மது இல்லாத கலாச்சார நிகழ்ச்சிகளே பல்கலைக்கழகங்களில் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் இதனை வளர்த்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். போதை தரும் பொருட்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளோ அல்லது பல்கலைக்கழக விடுதிகளிலோ தான் மாணவர்கள் உட்கொள்ளுகிறார்கள். அதைவிட வேறு இடங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. இதற்குத் துணைபோகும் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றனர். இன்று சிறந்த ”குடி”மக்களை உருவாக்கும் முக்கிய இடமாக இருப்பது பல்கலைக்கழகங்களே.

நன்றி: நீர்வேலி இணையம்பல்கலைக்கழக மாணவர்கள் “பல்கலைக்கழக வாழ்க்கையே வாழ்க்கை என்று நினைக்கின்றனர்”. ஆனால் உண்மையான வாழ்க்கை பல்கலைக்கழகத்தை விட்டு வெளிவந்து ஒரு வேலையைத் தேடித் திரியும் போது தான் ஆரம்பிக்கிறது. என்னை பகிடிவதை செய்த சிரேஷ்ட மாணவர்கள் “என்னிடம் வந்து, ஒரு வேலையிருந்தால் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லும் போதும், நான் உணவருந்தப் போன உணவகத்தில் உணவுப்பட்டியலோடு (மெனுகாட்) என்முன் வந்து நிற்ற போதும் யோசிக்கின்றேன், ”அவர்கள் போதித்த கொள்கைகள் ஏன் அவர்களை வழிநடத்தவில்லையென”. பகிடிவதையால் பாதிக்கப்படுபவரை எவ்வாறு ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றோமோ, அவ்வாறே பகிடிவதை புரிபவரையும் ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். நடைபெற்ற போரினால் பல்லாயிரக்கணக்கான தென்னை பனைமரங்கள் மொட்டையாகிவிட்டன. பச்சைமட்டைக்கும் பஞ்சம் வந்துவிட்டதால் தான் இன்று பகிடிவதை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது.

ரோபோ எனும் கதை “அவர் நாண நன்னயம் செய்துவிடல்” எனும் குறளுக்கமைவாக விளங்குகிறது. மீண்டும் துளிர்ப்போம், உறவுகள் ஆகிய கதைகள் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வியலையும், புலம்பெயர்ந்த வாழ்வின் குறைபாடுகளையும் சுட்டி நிற்கின்றன.

விட்டு விடுதலையாகி நிற்பாய் கதையானது ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பிறகதைகளில் வரும் கதைமாந்தர்களை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் கடந்துசெல்கிறோமோ, அதே போன்றதொரு கதாப்பபாத்திரம் தான் இக்கதையில் வரும் சிவகுமாரன். இவர்களைப் போன்றவர்கள் அற்ப சுகத்திற்காக, வாழ்வியல் நெறிகளைத் தகர்க்கும் கோடாரிக்காம்புகள்.

சீதனப்பிரச்சினையையும், பெண்விடுதலையையும் பேசும் எழுத்தாளர் ஒருவருக்கு இரு மனைவிகள். ஒருவர் வெளிநாட்டில், மற்றவர் உள்நாட்டில். வெளிநாட்டுப் பிரஜா உரிமை பெறுவதற்காகவும், தன் குழந்தைகளை வளர்க்கவும் வெளிநாட்டு மனைவி. அந்நாட்டில் குளிரடித்தால் ஒதுங்குவதற்கு உள்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான ஒரு மனைவி. இவர்களால் படைக்கப்படும் இலக்கியத்தின் நோக்கம் மட்டும் பெண்விடுதலையும், சீதனம் மற்ரும் விபச்சாரச் சீரழிவும்.

அக்காலத்தில் வாழ்ந்த பெரியவர்களின் எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது. ஒரு புகழ்பெற்ற எழுத்தாளனிடம் வந்த பல்கலைக்கழக மாணவி

“ ஐயா, புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?”

“நாளை இதே நேரம் வாம்மா…சொல்றன்”

“என்ன ஐயா. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர். இரு ஒரு சின்னக் கருத்து தானே. ஐந்து நிமிடம் போதுமே… இது பற்றிய உங்கள் கருத்தைக் கூற..”

“இல்லையம்மா…. நான் வெற்றிலை போடும் பழக்கமுடையவன்… நான் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு எவ்வாறு புகையிலை பாவிப்பவனை விமர்சிக்க முடியும். அதனால் நாளைக்கு வாங்க.. அதற்குள் எனது வெற்றிலை போடும் கெட்ட பழக்கத்தை நான் முதலில் நிறுத்திவிடுகின்றேன்.. பின்பு புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு எனது அறிவுரையைக் கூறுகின்றேன்”.

இவ்வாறு தான் அன்றையப் பெரியவர்களும், எழுத்தாளர்களும் சொல்வேறு செயல்வேறு என்றில்லாமல் இருந்தார்கள். இதற்கு மாறாக வாழ்ந்துவரும் ஊருக்கு மட்டும் உபதேசம் கூறி, ”என்னைப் பார்க்காதே, எழுத்தை மட்டும் பார்” எனும் பண்டிதர்களைத் தான் விட்டு விடுதலையாகி நிற்பாய் எனும் கதைமூலம் படம்பிடித்துக்காட்டுகிறார் பரணீதரன்.

மாறுதல் கதையில் கலாச்சார சீரழிவு குறித்தும், யதார்த்தம் கதையில் தாயைக் கைவிடும் பெற்ற பிள்ளையைக் குறித்தும், கற்பக தருக்களில் பிள்ளையின் கல்விக்காக தன் ஒரே வாழ்வாதாரமான பனைகளை விற்கும் செல்வநாயகி எனும் தாய் பாத்திரத்தையும் கதைகளினூடே அருமையாக ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார். உளவியல் பின்புலத்துடன் நடமாடவிடப்பட்டுள்ள கதைமாந்தர்கள் பிரச்சினைகளை எதிர்த்து நிற்காமல், விலகி வேறொரு வழியில் செல்வது கதைசொல்லியின் உளவியல் முதிச்சியைக் குறிப்பதாக அமைகின்றது.

ஏழை எளியவர்களின் துன்பத்தையும், சமூகத்தில் பெண்களின் நிலையையும், பல்கலைக்கழக மாணவர்களின் அறியாமையயும், ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியையும் கூட வெளிச்சமிடத்தவறாத எழுத்தாளர் பரணீதரன் அறச்சார்பு பயன் கொள்வாதத்தின் வெளிப்பாடுகளாக கதைகளை அமைத்துள்ளது சிறப்பு. சமூக பிரக்ஞை கொண்ட ஒரு இளம் படைப்பாளியான கதைசொல்லி பரணீதரன் கதைகளை நேர்க்கோட்டுப்பண்புடன் கூறியுள்ளார்.

கதைகளில் உலாவும் கதாப்பாத்திரங்கள் பல கதைகளில் நினைவுகளில் மூழ்கி பின்னோக்கிச் செல்லும் யுக்தியை தவிர்ப்பதன் ஊடாகவும், கதை நிகழும் காலத்தைக் கருத்தில் எடுப்பதன் ஊடாகவும் சிறந்த கதைக்களங்களை அமைக்கமுடியும். கதைக்குரிய கரு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குக் காலமும், களமும் (Theme, Time, Settings) முக்கியமாகும்.

இளவயதிலேயே ஆக்க இலக்கியத்தில் தடம் பதித்துள்ள தோழர் கலாமணி பரணீதரனின் இன்னும் பல ஆக்கங்கள் இது போல் மீண்டும் துளிர்க்க வேண்டும். ஒரு முறை வாசித்தால் நாமும் “மீண்டும் துளிர்க்கலாம்”

நூல்: மீண்டும் துளிப்போம்
ஆசிரியர்: கலாமணி பரணீதரன்
வெளியீடு: ஜீவநதி, கலை அகம், அல்வாய்
விலை:200.00

நன்றி
# கீற்று
## தமிழ் ஓதர்ஸ் 


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: