மன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்5, 2011

அதென்னப்பா அக்குரோணி – அலசுகிறார் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்


பத்து வார்த்தைகளில் நம்முடன் பேசும் ஒரு நல்ல கவிதை நம்மில் ஏற்படுத்தும் சிந்தனைகளை எழுதுவதற்கும் அதனை நயந்து பேசுவதற்கும் பத்தாயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. வாசகனின் சிந்தனையை எவ்வளவு தூரத்துக்கு ஒரு கவிதை பரத்தி விசாலித்துச் செல்கிறதோ அந்தளவுக்கு அந்தக் கவிதை சிறப்புப் பெற்று விடுகிறது. நாம் படித்த ஒரு நல்ல கவிதையின் சில வரிகள், சில வார்த்தைகள், அதன் ஞாபகங்கள் இன்னும் நம் மனத்துள் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்றால் அது அந்தக் கவிதைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும் கிடைத்து விட்ட வெற்றி என்று தயங்காமல் சொல்லி விடலாம்.

ஒவ்வொரு நல்ல கவிதைக்கும் அழகான உடலும் உற்சாகமான உறுப்புகளும் தெளிவான பேச்சும் நளினம் கொண்ட கவர்ச்சியும் அமரத்துவம் பெற்ற சுவாசமும் இருப்பதாக நான் கருதுகிறேன். அவ்வாறாக கவிதைகள் ஒரு போதும் மறக்கப்படுவதுமில்லை, மரித்துப்போவதும் இல்லை. அவற்றை ஒளித்து வைக்கவும் முடிவதில்லை, ஒழித்துக் கட்டவும் முடிவதில்லை. அவை சாகா வரம் கொண்டு சாசுவதமாக வாழும் வரத்தைத் தாமாகவே பெற்றுக் கொள்வதுடன் தன்னைப் படைத்த கவிஞனையும் காலாதி காலத்துக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றன. இதைத்தான் “எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று கண்ணதாசன் குறிப்பிட்டார்.

இவ்வாறான கவிதைகளை இப்போதெல்லாம் நாம் காண்பது அரிது என்பதை நீங்களும் நானும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நமது கவிதைகள் இந்த நிலைக்குக் கீழேதான் இருக்கின்றன. அதில் எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் சரியாக இருக்கும் என்றால் என்றாவது ஒரு நாள் ஓர் அற்புதமான கவிதையை நாம் படைத்து விடுவோம். அந்த ஒரேயொரு கவிதையில் நாம் வாழ்ந்து கொண்டேயிருப்போம். இங்கே புரிதல் என்று நான் குறிப்பிடுவது என்னவென்றால், நான் எழுதுவது கவிதையா அல்லது கவிதையைப் போன்றதா – எனது மொழி நான் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு உகந்ததா, இல்லையா – நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கவிதையின் உயிர் தங்கியிருக்கிறதா இல்லையா – மற்றொருவர் இதை எழுதியிருந்தால் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்குமா இல்லையா – கவிதைக்குத் தேவையற்ற வார்த்தைகள் இதில் அடங்கியிருக்கின்றனவா இல்லையா – எனக்குக் கவிதை வருமா இல்லையா – நான் வலிந்து எழுதுகிறேனா ஓவர் பில்டப் கொடுக்கிறேனா – போன்ற விடயங்களில் ஒவ்வொரு படைப்பாளியும் தெளிவடைந்திருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக நாம் இவ்வாறான சுய பரிசோதனைகளில் இறங்குவதில்லை. பத்திரிகையில் ஒரு கவிதையோ கதையோ, கட்டுரையோ பிரசுரிக்கப்பட்டதும் ‘நான் சொன்னால் காவியம்’ என்ற மனோ நிலை நமக்கு வந்து விடுகிறது. நாம் கொப்புக்குத் தாவி விடுகிறோம். பிறகு எல்லோரும் நம்மை அண்ணாந்து பார்க்க வேண்டும் என்று நினைனக்க ஆரம்பிக்கிறோம். தமிழறிஞனை ஒரு மூத்த படைப்பாளியை எள்ளி நகையாட முனைகிறோம். அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாத ஆயிரம் கேள்விகளைக் கேட்டு அவர்களை மடக்க நினைக்கிறோம். ஒரு விதமான செருக்கும் திமிரும் நமது உடல் முழுக்கப் பரவி விடுகிறது. எல்லா இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும் தலையை நீட்டி நிமிர்ந்து நிற்க அரசியல் பண்ணுகிறோம். இடம் கிடைக்கவில்லை யென்றால் நிகழ்வுகளுக்குள் கலகத்தை உண்டு பண்ணுகிறோம். ஆனால் உண்மையில் நமது கதி என்னவென்றால் நாம் கறுப்பு எழுத்துக்கள் கொண்டு வெள்ளைத் தாள்களை நிரப்புவர்கள் என்பதேயொழிய வேறெதுவும் இல்லை.

இன்றைய நிலையில் நமது நாட்டில் கவிதையில் ஈடுபாடு கொண்ட 500க்கும் மேற்பட்ட புதிய தலைமுறையினர் இருக்கிறார்கள். இவர்களில் 100 பேரை வரவழைத்து பாரதியாரின் கவிதைகளை முழுமையாகப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று சரியாக விசாரித்துப் பாருங்கள். இருபது பேரும் கூடத் தேறமாட்டார்கள் என்று மிக உறுதியாக என்னால் சொல்ல முடியும். நமதான சோகங்கள், நமதான வருத்தங்கள், நமதான கவலைகள் என்று எழுதுவதே நவீன கவிதை என்று மயங்கியபடி எழுதித் தள்ளும் சிலரைப் பின் தொடர்ந்து புதிய தலைமுறையும் “நமதான” என்ற சொல்லை வைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஆகக் குறைந்தது பாரதி எப்படி எழுதியிருக்கிறார், கண்ணதாசன் எப்படி எழுதியிருக்கிறார் என்றாவது படித்துப் பார்ப்பதில்லை.

இந்த எனது பார்வைக்கூடாக மன்னார் அமுதன் நிலைமை என்ன என்று சொல்ல வேண்டும். புரிதல் என்று நான் குறிப்பிட்ட விடயத்தில் அவருக்குத் தெளிவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவரது கவிதைகளில் அவர் பயன்படுத்தும் சொற்கள் அவரது மொழி ஆளுமையைப் புலப்படுத்துகின்றன. சொல்லுகின்ற வியடத்தைக் குறிப்பாக உணர்த்துவதில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

தமிழ்க் கவிதைத் துறையோடு ஈடுபாடுள்ளவர்களில் ஓரளவுக்காவது மரபுக் கவிதையில் ஆர்வம் உள்ளவர்கள் தமது கவிதைகளில் சோபிக்கிறார்கள் என்று எனக்குள் ஓர் அனுமானம் இருக்கிறது. அதற்காக மரபுக் கவிதை தெரிந்தவர்கள்தாம் சிறந்த கவிதைகளைத் தருகிறார்கள் என்பதோ மரபு தெரியாதவர்களால் சிறந்த கவிதைகளை எழுத முடியவில்லை என்றோ அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. யாப்பு இலக்கணத்தில் பரிச்சயம் இல்லாது போனாலும் கூட ஓசையுடன் கவிதை சொல்லக் கூடியவர்களுக்கு மொழி வல்லமை இருப்பதாக நான் கருதுகிறேன். அதற்கு உதாரணமாகக் காட்டக்கூடியவர் மன்னார் அமுதன். அவர் எழுதிய ஓசையுடனான ஒரு கவிதை ‘புத்தாண்டே அருள்வாயா’ என்ற தலைப்பில் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இக் கவிதை முகப்புத்தகத்தில் இடப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்தக் கவிதையின் நயம் கருதி அதை முழுமையாகத் தருவதற்கு விரும்புகிறேன்.

புத்தாண்டில் பல புதுமை பூக்க வேண்டும் – முப்
பத்தாண்டு துன்பமெல்லாம் போக்க வேண்டும்

மத்தாப்பாய் எம் வாழ்வு மலர வேண்டும் – மனதில்
நிறைந்த பகை புகையாக மறைய வேண்டும்

இறைவனிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் – தொழிலில்
இயன்றவரை புதுமுயற்சி செய்ய வேண்டும்

சத்தான இலக்கியங்கள் ஆக்க வேண்டும் – தமிழன்
சாதீயக் கொள்கைகளை நீக்க வேண்டும்

பயன் அறிந்து பாராட்டா நட்பு வேண்டும் – மார்பில்
படுமாறு அடிக்கின்ற எதிரி வேண்டும்

இல்லறத்தில் இன்பங்கள் நிறைய வேண்டும் – நாட்டில்
இனிய தமிழ்க் குழந்தைகள் பெருக வேண்டும்

நல்லறத்தை நம்மவர்கள் அறிய வேண்டும் – எவர்க்கும்
நலம் தரும் செயல்களையே புரிய வேண்டும்

சோதனைகள் எம்மைச் சீர் தூக்க வேண்டும் – மக்கள்
வேதனைகள் பொடிப் பொடியாய் உடைக்க வேண்டும்

பாதகர்கள் செயல்களையே படிக்க வேண்டும் – பாட்டால்
பயத்தினிலே அவர் இதயம் துடிக்க வேண்டும்

பார் போற்றும் பண்புடனே வாழ வேண்டும் – அயலில்
பசித்தோரைக் கண்டு உளம் நோக வேண்டும்

புசிக்கையிலே பசித்தவர்க்கும் ஈய வேண்டும் – ஊர்வாய்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தாங்க வேண்டும்

கம்பி வேலிக் கூண்டுகள் தூள் ஆக வேண்டும் – எங்கள்
சிறகொடிந்த பறவைகள் வான் காண வேண்டும்

தமிழ் நூறு ஆண்டுகள் ஆள வேண்டும் – மறத்
தமிழர் புகழ் தரணியிலே ஓங்க வேண்டும்.

மிக எளிய வார்த்தைகளில்தான் இந்தக் கவிதை நம்முடன் பேசுகிறது. ஆனால் கவிஞன் என்ன சொல்கிறான் என்றால் என்னுடைய எதிரி எனது முதுகில் குத்தும் கோழையாக இருப்பதை நான் விரும்பவில்லை என்கிறான். எதிரி என்னைத் தாக்குவதாக இருந்தால் எனது மார்பில் படுமாறு அடிக்கட்டும் என்று சொல்லும் வார்த்தைகள் உச்சமானவை. அந்தக் கருத்தும் உன்னதமானது. இந்தக் கவிதையில் ஒரு சில திருத்தங்களை அமுதன் மேற் கொள்வாராக இருந்தால் ஐந்தாம் அல்லது ஆறாம் ஆண்டுத் தமிழ்ப் பாடநூலில் இடம் பெற மிகவும் பொருத்தமான ஒரு கவிதையாக இது இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இதே போன்ற மற்றொரு ஓசைக் கவிதை ‘இது மானிட வதை’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. இக்கவிதையிலும் ஓர் நீரோட்டம் போல் அழகாக வார்த்தைகள் வந்த விழுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அக்கவிதையிலிருந்து சில அடிகளைச் சொல்ல விரும்புகிறேன்.

மாயையிலே வாழ்வதுதான் உந்தன் விருப்பு – அதை
மாறி மாறி உரைத்தாலே என்னில் வெறுப்பு

பார்த்ததிரு மேனியெந்தன் கண்கள் குத்துதே
பாதகமே புரிந்தது போல் நெஞ்சம் பத்துதே

காதலென்ன சாதலென்ன இரண்டும் ஒன்றுதான்
கனிந்தவுடன் வெட்டப்படும் வாழைக் கன்றுதான்

பழகிப் பிரியும் துயரமெல்லாம் காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய மனசு வலிக்குமே

புதுக் கவிதையிலும் அமுதனது பங்கு சிலாகித்தக்கது. ‘உறவுகள்’ என்ற தலைப்பில் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. பேசப்படாதவற்றைப் பேசுவது அற்புதமான அனுபவம். அந்தப் பேச்சினூடாகக் கவிஞனின் நுண்ணிய பார்வை நம்மை ரசனை மிக்க அதிர்வுக்குள்ளாக்கும் என்பதற்கு இந்தக் கவிதை ஒரு சிறந்த உதாரணமாகும்.வெறும் நான்கே வரிகளில் கவிஞன் செய்யும் சித்து விளையாட்டை அவனது நுண்ணிய பார்வையை நாம் அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகம் அலாதியானது.

முகம் மலர உறவினரை வழியனுப்பி

வீட்டுக்காரர் வெளியேற்றிய பெரு மூச்சிலும்

அறைந்து சாத்திய கதவின் அதிர்விலும்

அறுந்து தொங்கியது – உறவின் இழை!

அரசியல் கவிதைகள் சிலவும் இத்தொகுதியில் இடம்பிடித்துள்ளன. உதாரணத்துக்காக ஒன்றை மட்டும் எடுத்துக் காட்ட விழைகிறேன். அதிகார நாற்காலி என்பது கவிதையின் தலைப்பு. இன்னும் கொஞ்சம் இந்தக் கவிதையைச் செதுக்கியிருக்கலாம் என்று எனக்குள் ஓர் ஆதங்கத்தை விதைத்த கவிதையாக இது இருந்த போதும் கூட எனது கவனத்தை இக்கவிதை கவர்ந்திருக்கிறது.

ஆணவக் கூட்டணிகளின்
அதிகாரத்தைப் புதுப்பித்துக் கொள்ளும்
ஆசன விளையாட்டு

அடிக்கடி ஆடப்படுவதால்
ஆண்டியாகிப் போனது
ஆண்டுப் பொருளாதாரம்

அமர்ந்தவர் வெல்ல
தோற்றவர் கொல்ல
சமநிலை மாறிக்
கதிரைகள் சாய
குரங்கு பங்கிட்ட
அப்பமாகிறது
அதிகாரப் பரவலாக்கம்

நாற்காலிச் சண்டையில் விடுவிக்கப்பட்ட
வறுமையின் குரல் மட்டும்
தெருவெங்கும்
ஒலித்து ஓயும் இசையாய்த் தொடர்கிறது

ஒரு குட்டித் தேசத்தில் தேர்தல்களுக்காகவே பெருந்தொகைப் பணம் செலவாகிறது. அதுவே நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்டுகிறார் அமுதன். அத்தோடு நின்று விடாமல் அரசியல் கொலைகளையும் கட்சி மாறுவதையும் தொட்டுக் காட்டி அதிகாரப் பரவலாக்கம் குரங்கு பங்கிட்ட அப்பமாக – அதாவது எதுவுமே இல்லாது போய்விடும் அவலத்தை எடுத்துக் காட்டுகிறார். எல்லாம் நடந்து கொண்டேயிருக்கின்றன. வறுமையும் தன் பாட்டில் அப்படியே இருக்கும் சோகத்தையும் சொல்லிச் செல்வது அழகாக இருக்கிறது.

இந்தக் கவிதை எனது சிந்தனையை ஐக்கிய நாடுகள் சபை வரை இழுத்துச் சென்றது. சிந்தித்துப் பாருங்கள். சமநிலையான உலகத்தை நிர்வகிக்கவே ஐ.நா. சபை உருவானது. பிணக்குகள் அறுக்கும் பணியை அது மேற்கொள்வதற்காகத் தொடங்கப் பட்டதாகப் படிக்கிறோம். ஆயிரக் கணக்கான படிப்பாளிகள், ராஜதந்திரிகள் அதிலே கடமை புரிகிறார்கள். ஆனால் அதற் நோக்கம் நிறைவேறியதா? மினரல் வாட்டரும் சிற்றுண்டியுமாக கோர்ட்டும் சூட்டும் அணிந்த கனவான்கள் கூடிக் கலைகிறார்களேயொழிய, உலகத்தில் மேலும் மேலும் சிக்கல்களும் பிரச்சினைகளும் அதிகரிக்கிறதேயொழிய நல்லதாக எதுவும் நடப்பதற்கான எந்த அறிகுறியும் கிடையாது.

இதே போல்தான் அமுதன் சுட்டிக் காட்டும் அரசியலும். உண்மையில் இந்த அவலத்துக்கு அரசியல்வாதி மட்டுமல்ல, நிர்வாக அதிகாரம் கொண்ட அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். ஓர் அரச நிறுவனத்தின் பணத்தைக் கையாளும் அதிகாரம், அரசியல்வாதிகளுக்கு நட்ட முறைகளைச் சொல்லும் பணி அவர்களிடமே இருக்கிறது. அவ்வப்போது நடக்கும் அதியுயர் பரீட்சையில் சித்தியடைந்து நாட்டை நிர்வகிக்கப் பயிற்றுவிக்கப்படும் இந்த அதிகாரிகளினால் நாடு எந்தளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் கூட நாம் சிந்திக்க வேண்டும்.

இனி – அமுதனின் கவிதைகளில் நான் ரசித்த சில வரிகளை எடுத்துக் கூற வேண்டும்.

“மெல்லத் தமிழினிச் சாகும் – எனும்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்பு நாள் விரைவிலே கூடும்”

“அவனின் காயங்கள் எல்லாம்
என் அத்துமீறலின் அடையாளங்கள்தான்”

“வண்ண வண்ணச் செருப்புக்களைக்
கூவி விற்கிறான்
வெறுங்கால்களுடன்”

“உலகப் படை கொண்டு அழித்தீர் – தமிழனைக்
கலகப் படையென்று அழைத்தீர்
வளரும் பிறைபோல வளைத்தீர் – பின்
வணங்காத் தமிழ் மண்ணை வதைத்தீர்”

“நானில்லா நிறையைச் சமன் செய்ய
மற்றொரு தளிர் முளைக்கும்”

“உன் கண்ணீரைத் துடைத்த கைக்குட்டை கூட
இன்னும் ஈரமாய் என் நினைவுகளில்”

“கூதல் என்னைக் கொல்கையில்
உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன்”

“ஓட்டைச் சிரட்டையில் ஊற்றிய தண்ணீராய்
உன்னை நோக்கி ஒழுகி உருகியோடுகிறது மனம்”

“பொத்தியழ போர்வைகள்
போதுமானதாக இல்லை”

“சிலநூறு ரூபாய்களுக்கும்
ஒரு வேளை உணவிற்கும் விற்கப்படும் தேசியம்”

“பறக்கும் இறகினுள் முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா
நானும் அதுபோல் அழுதிடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா?”

இவை இக்கவிதை நூலில் நான் ரசித்த சில இடங்கள். இன்னும் இருக்கின்றன. நேரம் கருதியும் நான் சுட்டிக் காட்டாமலே நூலைப் பெற்றுப் படிப்பவர்கள் தேடிக் கொள்ளட்டும் என்றும் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

இன்றைய தலைமுறைக் கவிஞர்களில் என் கவனத்தைக் கவர்ந்தவர்களில் முதன்மையாளனாக மன்னார் அமுதன் விளங்குகிறார். நம்பிக்கை தரக் கூடிய ஒரு நல்ல கவிஞன் என்ற அடையாளம் அவரில் இருக்கிறது. ஓயாமல் தமிழ்க் கவிதையோடு அவர் தொடர்பு பட்டிருப்பது கவிதை மீதான அவரது காதலை எடுத்துக் காட்டுகிறது. இந்தக் காதல் நாம் பெருமைப்படும் விதத்திலான ஒரு கவிஞனாக அவரை எதிர்காலம் நம்முன்னால் கட்டாயம் நிறுத்தும் என்று நான் பெருத்த எதிர்பார்ப்பு வைத்திருக்கிறேன்.

அவருக்கு நான் சொல்லியாக வேண்டிய ஒரு இருக்கின்றது. அவருக்கு மொழிவாலயம் கைவரப் பெற்றிருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் தமிழ்க் கவிதைகளைக் குறிப்பாக மரபுக் கவிதைகளைப் படிக்க வேண்டும். முடியுமானால் பழந்தமிழ்க் கவிதைகளில் சற்று ஆர்வம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் எடுப்பாராகில் மொழி அவரிடம் கைகட்டி நின்று அழகு தமிழ்க் கவிதைகளாக வெளிவரும் என்று உறுதியாகச் சொல்லுவேன்.

குறிப்பு:
(03.03.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய நயவுரை)

நன்றி:

நாட்டவிழி நெய்தல்
தமிழ் மிரர்
அக்குரோணி கவிதை நூல் கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை -யாழ்ப்பாணம், கொழும்பு (வெள்ளவத்தை & செட்டியார் வீதி), அஷ்டலச்சுமி புத்தகசாலை (செட்டியார் வீதி), ஜெயா புத்தகசாலை (Peoples Park), கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: