புத்தாண்டில் பல புதுமை
பூக்க வேண்டும் – முப்
பத்தாண்டு துன்பமெல்லாம்
போக்க வேண்டும்
மத்தாப்பாய் எம்வாழ்வு
மலர வேண்டும் – மனதில்
நிறைந்த பகை புகையாக
மறைய வேண்டும்
இறைவனிடம் நம்பிக்கை
கொள்ள வேண்டும் – தொழிலில்
இயன்றவரை புதுமுயற்சி
செய்ய வேண்டும்
சத்தான இலக்கியங்கள்
ஆக்க வேண்டும் – தமிழன்
சாதீயக் கொள்கைகளை
நீக்க வேண்டும்
பயன் அறிந்து பாராட்டா
நட்பு வேண்டும் – மார்பில்
படுமாறு அடிக்கின்ற
எதிரி வேண்டும்
இல்லற இன்பங்கள்
நிறைய வேண்டும் – நாட்டில்
இனிய தமிழ்க் குழந்தைகள்
பெருக வேண்டும்
நல்லறத்தை நம்மவர்கள்
அறிய வேண்டும் – எவர்க்கும்
நலம்தரும் செயல்களையே
புரிய வேண்டும்
சோதனைகள் எம்மைச்சீர்
தூக்க வேண்டும் – வாழ்வில்
சோர்வென்ற சொல்லை நாம்
நீக்க வேண்டும்
சாதனைகள் ஆயிரம் நாம்
படைக்க வேண்டும் – மக்கள்
வேதனைகள் பொடிப்பொடியாய்
உடைக்க வேண்டும்
பாதகர்கள் செயல்களையே
படிக்க வேண்டும் – பாட்டால்
பயத்தினிலே அவர் இதயம்
துடிக்க வேண்டும்
பார் போற்றும் பண்புடனே
வாழ வேண்டும் – அயலில்
பசித்தோரைக் கண்டு உளம்
நோக வேண்டும்
புசிக்கையிலே பசித்தவர்க்கும்
ஈய வேண்டும் – ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும்
தாங்க வேண்டும்
கம்பிவேலிக் கூண்டுகள் தூள்
ஆக வேண்டும் – எங்கள்
சிறகொடிந்த பறவைகள் வான்
காண வேண்டும்
தமிழ் நூறு ஆண்டுகள்
ஆள வேண்டும் – மறத்
தமிழர் புகழ் தரணியிலே
ஓங்க வேண்டும்
//புசிக்கையிலே பசித்தவர்க்கும்
ஈய வேண்டும்//
“உண்ணும்போது ஒரு பிடி.” இதுவே எனக்கு உயர்ந்த தத்துவம்.
தங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவுபெற இப்புத்தாண்டு ஏற்புடையதாக அமையட்டும்.
By: Jana on ஜனவரி3, 2011
at 11:29 முப
நன்றி தோழரே
By: மன்னார் அமுதன் on ஜனவரி3, 2011
at 12:36 பிப