மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்7, 2010

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 4


சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 1
சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 2
சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 3 ஐ வாசிக்க

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 4 .. தொடர்கிறது….

எதற்குச் செலவு செய்ய வேண்டுமென்ற எந்த வரையறையுமின்றி, செலவு செய்து இறுதியாக பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ, அல்லது வெளிநாட்டில் எரிவாயு நிரப்புவராகவோ உருவாக்கி விடும் பெற்றோர், தாம் செய்த செலவுகளை வரதட்சனை மூலம் பெற்றுக் கொள்ள பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணிவது சமூக சீரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவி புரிகிறது.

கல்விக்காக 30 வயது வரை பாடுபடும் நம் இளைஞர்கள், அதன் பின் தான் உழைப்பதற்கான முனைப்புகளில் ஈடுபடுகிறார்கள். நாற்பது வயது வரை உழைத்து விட்டு, தன்னால் முடியாது எனும் சூழலில், இறுதி வருமானமான சீதனத்தையும் வாங்கிக் கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நாற்பது வயதில் யாருமற்ற தனிமையில், எவராவது என் மேல் அன்பு காட்ட மாட்டார்களா என்ற கழிவிரக்கமே மிஞ்சி நிற்குமே தவிர, நிச்சயமாக நம்மிடம் இருக்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலை இருக்காது.

இதை விட சற்று இராஜாங்க மனநிலையுடன் தான் சீதனம் கொடுத்து வந்த மணமகள் இருப்பார். ”நீ கேட்டதெல்லாம் தான், கொடுத்தாகி விட்டதே, பிறகென்ன” என்ற மனநிலையில், அவர் நிச்சயமாக மணமகன் எதிர்பார்க்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ள மாட்டார். மேலும் இந்தத் திருமணத்திற்காய் கடன் வாங்கிச் சீதனம் கொடுத்த மற்றுமொரு அண்ணணோ, தம்பியோ ஏதோவொரு நாட்டில் தன் இளமையை விற்றுக் கொண்டிருப்பான்.

இலங்கையில் பெண்கள் முதிர்கன்னிகளாக இருக்க வரதட்சணை மட்டும் ஒரு காரணமாக இருப்பதில்லை என்பது என் கருத்து…ஏனென்றால் இவர்களில் பலர் வெளிநாட்டு மணமகனைத் தவிர வேறொருவரை முடிக்க மாட்டேன் என்று ஒன்றைக் காலில் நிற்பவர்கள். இன்று பெண்களே மணமகனைப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள். இது வரவேற்கக் கூடிய விடயமாக இருந்தாலும், மணமகன் தெரிவு முறை என்பது முற்று முழுதாக “வெளிநாடு” சார்ந்த ஒன்றாகவே உள்ளது.

சம்பிரதாயச் சந்திப்பின் போது பெரும்பாலான மணமகளின் தாயார்கள் கேட்கும் கேள்வி, “வெளிநாடு போற வாய்ப்பு இருக்கா..?, சீவியத்தில ஒருக்காவாவது சுவிசுக்கு கூட்டிட்டு போவிங்களா..? இவவுக்கு அந்த லண்டன் மணியைப் பார்க்க சரியான விருப்பம்.. அங்கயாவது ஒருக்கா கூட்டிட்டுப் போவிங்களா..?

இவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் இலங்கையில் உள்ள நுவர எலியாவிற்குக் கூடச் சென்று எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள்.

திருமணம் என்பது நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். நல்ல குணத்தினையும், அளவான வருமானத்தையும் பார்த்து, விட்டுக் கொடுப்போடு வாழ முன்வந்தால் திருமணம் என்பது ஒரு சிக்கலாக இருக்காது.

நான் சார்ந்து வாழும் சமூகத்திலிருந்து அறிந்து கொண்டது என்னவென்றால் சாதாரண தரம் அல்லது உயர்தரம் வரை படித்த மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சிறிது அழகு குறைந்தவர்கள் என்று பிறர் சொல்லும் நிலையில் இருந்தாலும், திருமணம் முடித்து நன்றாகவே வாழ்கிறார்கள். ஆனால் நல்ல நிறமாக இருந்து, சிறிது வசதியாகவும், கையில் தொழிலுடனும் இருப்பவர்கள் தான் முதிர் கன்னிகளாகவும், மணமுறிவுடனும் வாழ்கிறார்கள்.

இதற்கான காரணம், பட்டதாரிப் பெண்களோ, ஆசிரியைகளோ ஒரு ஆசிரியரை முடிக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அவர்கள் ஒரு மருத்துவரையோ, பொறியியலாளரையோ, அல்லது வெளிநாட்டு மணமகனையோ தான் மணமுடிக்க விரும்புகிறார்கள். இது போல பல காரணங்கள் உள்ளன. பல பெண்கள் தம் திருமண வயதில் பெற்றோர் பார்க்கும் உள்ளூர் வரன்களை தட்டிக் கழித்து விட்டு, வெளிநாட்டில் உள்ள ஒருவரை அலைபேசியில் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் பகலாக இருக்கும் போது இலங்கையில் இரவாக உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் பொழுதுபோக்காக கணணியில் பகலில் உரையாடுவார்கள். ஆனால் நம்மவர்கள், இரவுத் தூக்கத்தை தொலைத்துவிட்டு விடி விடிய பேசுகிறார்கள். இதன் விளைவாக, சிறு வயதிலேயே, கண்ணின் கீழ் கருவளையமும், முதுமைத் தோற்றமும் வந்து விடுகிறது.

கனடாவில் வாழும் இலங்கை எழுத்தாளர் ஒருவர், இலங்கைப் பெண்ணை மணமுடித்து விட்டுச் சென்றவர் தான். இன்று வரை வரவேயில்லை.. இப்பொழுது தகவல் அனுப்பியுள்ளாராம் .. ஜனவரியில் இலங்கையில் நடைபெற இருக்கும் ஒரு மாநாட்டிற்கு வருகை தர உள்ளதாக… இவர்களை என்ன செய்வது..? யாரைக் குறை சொல்வது..? அதிஷ்டமற்ற பிள்ளை என மணமகளைக் குறை கூறி தம் தவறை பெற்றோர் மறைக்கப் பார்க்கின்றனர்.

பெற்றோரிடமும், இளைஞர், யுவதிகளிடமும் இருக்கும் இந்த வெளிநாட்டு மாயைகள் மறைய வேண்டும். திருமணம் என்பதை அதிஸ்டச் லாபச் சீட்டுப் போல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்வில் படிப்படியான வளர்ச்சியே நிரந்தரமான இன்பத்தைத் தரும்.

ஒரே நாளில் வெளிநாட்டு மணமகனாகவோ, மணமகளாகவோ மாறி எல்லா இன்பத்தையும் அனுபவித்து விட வேண்டும் எனும் அதிகப் படியான எதிர்பார்ப்பே “முற்று முழுதான தோல்விக்கும்” மணமுறிவிற்கும் வழி வகுக்கிறது.

வரதட்சிணையையும், முதிர்கன்னிகளையும் பற்றிப் பேசுமளவிற்கு நாம் ஒரு போதும், திருமணத்திற்கு பின்னரான வாழ்வையும், மணமுறிவுகளையும் பற்றிப் பேசுவதில்லை. நம்மைப் பொறுத்தவரை எப்பாடு பட்டாவது திருமணம் முடிந்தால் சரி என்ற என்ற மனோநிலையே பெரும்பாலோனோருக்கு உள்ளது. மணமகன் தேவை எனும் விளம்பரங்கள் எல்லாம் “வெளிநாட்டு மணமகன் / மணமகளுக்கு முன்னுரிமை” என்று கொடிபிடிப்பதை இலங்கையின் எல்லா திருமண விளம்பரங்களிலும் காணலாம்.

நானறிந்தே பல பெண்களின் வெளிநாட்டுக் கணவர்கள் நாடு திரும்பியதே இல்லை. இப்பெண்கள் தம்மையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக நினைத்துக் கொண்டு, உடைகளையும், பேச்சு வழக்கையும் மாற்றிக் கொண்டு, மன நிலை குன்றிவர்கள் போல் என் முன் அமர்ந்து உரையாடுகையில் ”நீ இப்பொழுது இலங்கையில் தான் இருக்கிறாய்; நீ ஒரு தமிழச்சி; என்று நான் கூறும் வார்த்தைகள் அவர்களின் போலி உறக்கத்தைக் கலைத்துவிடுவதில்லை. மாறாக “நான் பொறாமையுடையவனாக சித்தரிக்கப் பட்டு விடுகிறேன்”.

சிலர் திருமணத்தின் பின் பொருளாதார தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தம்மை அடகு வைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள். இத்தகையவர்களின் நோக்கம் தம் குடும்பத்தின் பொருளாதார உயர்வாக இருந்தாலும், குடும்ப அங்கத்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை காலம் முழுதும் அணிந்து கொள்வதற்காகவும், கானல் கெளரவத்திற்காகவும் இவர்களை மீண்டும் வீடு திரும்ப அனுமதிபதே இல்லை. இவர்களின் பிள்ளைகளும், சமூக உணர்வோ, பொறுப்போ அற்றவர்களாக சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளாகவே வாழப் பழகி விடுகிறார்கள்.

”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’

என்னும் மாறன் பொறையனாரின் ஐந்திணைப் பாடல் கணவன் மனைவியின் அன்பைப் பறை சாற்றுகிறது. நதிகளற்ற நிலத்திலே, தாகத்தோடிருக்கும் ஜோடி மான்கள் ஒரு குட்டையில் தேக்கிக் கிடக்கும் சிறிதளவிலான நீரைக் காண்கிறது. நீரோ சிறிது. ஒருவர் குடிப்பதற்குக் கூட காணாது. இந்த நிலையில் ஆண்மான் “ நீ போய் நீரைப் பருகு” என தன் துணையிடம் சொல்கிறது. நீர் இருவர் பருகக் காணாது என்பதால் பிணை கூறுகிறது “இல்லை.

எனக்குத் தாகமாக இல்லை, நீயே பருகு”. சரி, இந்தப் பிரச்சினை வேண்டாம் “வா, இருவரும் சேர்ந்தே பருகுவோம்” என இரண்டும் சேர்ந்து சுனையில் வாயை வைத்து நீரைப் பருகுகிறது. ஆனால் நீரின் அளவு குறையவே இல்லை. ஏனென்றால் கலைமான் குடிக்கட்டும் என பிணையும், பிணைமான் குடிக்கட்டும் என கலையும்” ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்ததால் இருவருமே குடிக்கவில்லை என இல்லறத்தைப் பாடுகிறது இப்பாடல்.

சங்க இலக்கியங்கள், விலங்குகளின் ஊடாக நம் முன்னோர்களின் காதல் நெறியினை எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது. தாம் வாழும் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுச் பகுதியிலிருந்து விதி வசத்தால் இடம் பெயர்ந்த மான்கள், பாலை நிலத்திலும் தம் அடிப்படைப் பண்பான அன்பை விட்டு விடவில்லையே…. நாம் மட்டும் ஏன், முற்று முழுதாக மாறி விடுகிறோம்.

பொருளாதாரத் தேவைக்காகவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமென வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழும் குடிமகன்களில் எத்தனை பேரால் தம் பிள்ளைகளை அன்போடும், அரவணைபோடும் வளர்க்க முடிந்துள்ளது. எத்தனை பிள்ளைகள், தாய் தந்தையரின் சொல்லிற்கு கீழ்ப்படிகிறார்கள்? எத்தனை தாய் தந்தையர்களால் தம் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிட முடிகிறது…

பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும், நம் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்து இச்சமுதாயத்தில் சிறந்த குணங்களையுடைய ஒருவராக, அவரை அறிமுகப் படுத்த வேண்டியது உங்கள் கடமை தான். அதற்கு உங்கள் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப் படுகிறது.

கணவன்மார்களே,
உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது உங்கள் கடமையே… அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்கும் அருகாமையையும், அன்பையும், விசுவாசத்தையும் அவர்களுக்கு உணர்த்துவது.

மனைவியர்களே,
குடும்பப் பொருளாதாரத்தில் நீங்கள் உதவினாலும், உங்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டே உங்கள் கணவன், உறக்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறான்… நீங்கள் சிறந்த தாயாகவும், தாரமாகவும், விசுவாசமாகவும் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

பிள்ளைகளே,
ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளும் நீங்கள் தான். உங்கள் அழகான உடைகளும், போசாக்கான உணவும் அவர்களின் இரத்தமே. பெற்றோர்கள் தமங்கள் நிகழ்காலத்தை விற்று, உங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துத் தருகிறார்கள் என்பதை ஒரு போது மறந்துவிடாதீர்கள்.

நமது சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு உருப்படியான செயலைச் செய்வதற்காகவே இவ்வுலகிற்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். தனி மனித மாற்றமே சமூக மாற்றம் என்பதை மனதில் நிறுத்தி நாம் சார்ந்து வாழும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்.

அரசியலில் ஏற்படும் மாற்றம் என்பது இருவருக்கிடையே பரிமாறப்படும் அதிகாரங்கள் மாத்திரமே. தனி மனித மாற்றம் என்பது “ஒரு குடும்பத்தின் மறுமலர்ச்சியாகும்”. கலை இலக்கியத்தின் ஊடாக ஒவ்வொருவரிலும் ஏற்படும் மாற்றமே சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடும்.

————முற்றும்——————

குறிப்பு: நன்றிகள்
உங்கள் சிறந்த கருத்துக்களை, முகப் புத்தகத்தின் ஊடாகவும், மின்னஞ்சல் / தனிமடல் மூலமாகவும் பகிர்ந்து கொண்டு இக்கட்டுரையை எழுத ஊக்குவித்த தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.


Responses

 1. […]   சீரழிகிறதா நம் சமூகம்…… ?  பாகம் &#8211…… ஐ […]

 2. பொருளாதாரத் தேவைக்காகவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமென வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழும் குடிமகன்களில் எத்தனை பேரால் தம் பிள்ளைகளை அன்போடும், அரவணைபோடும் வளர்க்க முடிந்துள்ளது.

  முதிர்கன்னிகளையும் பற்றிப் பேசுமளவிற்கு நாம் ஒரு போதும், திருமணத்திற்கு பின்னரான வாழ்வையும், மணமுறிவுகளையும் பற்றிப் பேசுவதில்லை.

  ஒரு பதிவில் இத்தனை சமூகக் கருத்துக்களா.. நன்றிகள் உரித்தாகட்டும்…

  ===

  அமுதன் நவின்றது:

  நன்றிகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: