மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்1, 2010

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 3


சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 1
சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 2 ஐ வாசிக்க

இவை இப்படி என்றால், காதலியைக் காணாத ஒருவன் தன் நிலையை எவ்வாறு வெளிப்படுத்துக்கிறான் என்பதை

”ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்றுகொளற்கு அரிதே”

என்னும் குறுந்தொகைப்பாடல் மூலம் அறியலாம். சூரியன் சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் ஒரு பாறையின் மேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணையையைக் காணும் கையில்லாத ஊமை ஒருவன், அந்த “வெண்ணை” வீணாவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அவ்வாறே காதலியைக் காணாததால் ஏற்பட்ட ஏக்க உணர்விலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதாய்க் கூறுகிறான்.

இலக்கியக் காதல் பாடல்கள் காதலை உரைப்பதற்காக மட்டும் பாடப்படவில்லை. இவை நம் முன்னோர்கள் தம் வாழ்வில் கற்றறிந்த பாடங்கள். அவர்கள் தம் கருத்துக்களைத் தெளிவாக நம்முடன் பகிர்ந்து சென்றுள்ளார்கள். இருப்பினும் நாம் அவற்றைக் கற்பதும் இல்லை. தவறிக் கற்றாலும், கடைப் பிடிப்பதும் இல்லை.

“வம்ச விருத்தி” மட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. ”ஒருவனுக்கு ஒருத்தி” எனும் நெறி பிறழாத வாழ்வைக் கடைப்பிடிப்பதற்காகவே திருமணங்கள் தேவைப்படுகின்றன. பால்ய காலம் முதல், பாடையில் செல்லும் வரை மனிதனுடைய தேவைகள் காலத்திற்குக் காலம் வித்தியாசப்படுகிறதே இன்றி, ஒருபோதும் குறைவதே இல்லை. ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழும் படி அமைக்கப்பட்டுள்ள நம் சமூகக் கட்டமைப்பு இரு மனம் ஒத்த திருமணத்தை வலியுறுத்துவது “திறன்மிக்க மனிதவளத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகக் குற்றங்களைக் குறைப்பதற்குமே.

பெருங் குற்றங்கங்களுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் அடிப்படையாக அமைவது பூர்த்தியாகாத பாலியல் தேவைகளே என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. இத்தகைய பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முறையற்ற உறவுகளைப் பேணுவதால் கடந்த வருடத்தில் மட்டும் (19 வயதிற்குட்பட்ட) இலங்கையில் 1300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு நடத்தப் பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்களாலேயே இந்நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இன்று உறவு முறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அறிந்து கொள்ள முடியவில்லையா?

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப (நற்றினை)

இந்த நற்றினைப் பாடலானது வீட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை மூலம் தலைவன் பரத்தையரொடு கொண்டிருந்த முறையற்ற உறவை மறைமுகமாக விளக்குகிறது. பிறிதொரு துணையோடு கூடி விட்டு வீட்டிற்கு வரும் ஆண் குருவியை, பெண் குருவியும் அதன் குஞ்சுகளும் சேர்ந்து கூட்டிற்குள் வர விடாமல் தடுக்கின்றன. அதே போன்று தலைவியும் வீட்டிற்குள் வர விடாமல் தடுத்தாள் என்று கூறுகிறது.

ஆணிற்கு அழகு எது?

மலைஎன, எழுஎன வழங்கும் தோள்களும்
பாயல் ஆம்எனப் படர்தரு மார்பமும்
காளையர்க்கு உரித்துஎனக் கழறினர் கற்றோர். (அறுவகை இலக்கணம்)

கற்றறிந்த பாவலர்கள் குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ள மார்பும் வாலிபர்களுக்கு உரியன என்று கூறியுள்ளனர். மனையாள் கட்டித் தளுவுவதற்கும், பிள்ளைகள் ஏறி விளையாடுவதற்கும் உகந்த அகன்ற மார்பைப் பெறுதலே ஆணிற்கு அழகென்கிறது இப்பாடல். மேலும் இப்பாடல் மூலம் நாம் ஆணிற்கு அழகு வினைமாட்சி என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆனெனப்படுபவன் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்லாம்.

அதனையும் தாண்டிய அழகு அவன் ஆண்மை என்கிறது வள்ளுவம்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனோன்றோ ஆன்ற ஒழுக்கு

எனும் குறள் மூலம் பிறருடைய மனைவியை காமக் கண் கொண்டு நோக்காமல் இருப்பதே பேராண்மையிலும் சிறந்த ஒழுக்கம் என்கிறது. ஆனால் இன்று வயது பேதமின்றி அனைவரையும் காமக்கண்களால் துகிலுரிப்பதும், மது மற்றும் போதையில் திளைப்பதையுமே ஆண்மையாகக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதுடன், தாம் சார்ந்து வாழும் குடும்பங்களையும் மீள முடியாத துன்பங்களுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

யார் யாரோடு இருக்கிறார்கள்? யாரை யார் வைத்திருக்கிறார்கள் ? என்பதை அறிந்து கொள்வதும், பேசுவதும் தான் இன்றைய பெரும் பொழுதுபோக்காக உள்ளது.

உரிய கல்வியறிவையும், அறியாமையையும் அழிக்கும் போதே நமது சமூகம் இத்தகைய சீரழிவிலிருந்து வெளியேறி ஒரு பண்பட்ட சமூகமாக மாறும். உரிமையை இழந்துவிட்டோம். நாம் உணர்வையும் இழந்து விடுவோமோ எனும் கேள்வி இன்றைய இளைய சமுதாயத்தின் கைகளில் தான் உள்ளது. அதற்கு அவர்களுக்கு தேவையான கல்வியை உரிய முறையில் வழங்க வேண்டும்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

என்று நிலையான அழகு பற்றி நாலடியார் கூறுகிறது. கல்விக்கான முக்கியத்துவம் இன்று சிறிது சிறிதாக அழிந்து வருவது பெருகி வரும் தனியார்க் கல்வி நிலையங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய ஈழத்து மாணவர்கள் ஒரு பாடத்திற்கு நான்கு ஆசிரியர்களிடம் சென்று கற்கிறார்கள். இந்த நான்கு ஆசிரியர்களின் வேறுபட்ட பயிற்றுவிப்பு முறைகளை மாணவர்கள் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடன் உள்ளார்களா என்பது கேள்விக்குறியே. மாணவர்களுக்காக ஆசிரியர்கள் என்ற நிலை இன்று மாறிவிட்டது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வியை மணித்தியாளக் கணக்கில் விற்கும் விற்பனைப் பிரதி நிதிகளாக கற்றறிந்த ஆசிரிய சமூகம் செயல்பட்டு வருவது வேதனையழிக்கிறது.

தொடரும்…………   சீரழிகிறதா நம் சமூகம்…… ?  பாகம் – 4… ஐ வாசிக்க


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: