மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்24, 2010

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 2 …..


சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 1 ன் தொடர்ச்சி….

ஒவ்வொரு சமூகமும் ஓர் இனக் குழுமத்திற்குள் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் இனக் குழுமத்திற்குமென சில வாழ்வியல் நெறிகளும் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவை தான் கலாச்சாரமும், பண்பாடும். கலாச்சாரமும் பண்பாடும் ஆங்கிலத்தில் culture என்ற ஒற்றை வார்த்தையில் அர்த்தப் படுத்தப்படுத்தப்படுகின்றன.

கலாச்சாரம் என்பது பண்டைய காலம் தொட்டு நம் முன்னோர்களால் வாழையடி வாழையாக வழக்கில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். இவை உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை, வழிபாட்டு முறைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சடங்குகள் போன்றவையாகும். சில இனக் குழுமங்களின் கலாச்சாரம் என்பது பிற குழுமங்களால் மூடநம்பிக்கைகளாகவும் பார்க்கப் படுகின்றன.

ஆனால் பண்பாடு எனும் வார்த்தை “பண்படுத்தல்” (refine – நேர்த்தியாக்குதல்) என்ற சொல்லிருந்து வருகிறது. கலாச்சாரம் என்பது, வழி வழியாக முன்னோர் செய்த விவசாயத்தை நாமும் அப்படியே பின்பற்றுவது போன்றதாகும். ஆனால் பண்பாடு என்பது களர் நிலத்தை விளைநிலமாக்குதல் (பண்படுத்தப் பட்ட நிலம்) போன்றதாகும்.

ஒரு காலத்தில் பலதார மணம் என்பது கலாச்சாரமாக இருந்தது. பலவாறான பண்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இன்றைய நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயம் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, அல்லது அவரது சம்மதமின்றியோ மறு மணம் முடித்தலை தடைசெய்துள்ளது. இதுவே பண்பாடாகும்.

இவ்வாறான ஒரு பண்பாடாகவே இருந்து வந்த சங்க காலக் காதல், இன்று ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. “செம்புலப் பெயனீர்க் காதலை” எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும், எங்கு காதல் புரியக் கூடாது எனவும் நற்றினை அழகாகக் கூறுகிறது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மோடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க நீ நல்கின்
நறைபடு நிழல் பிறவுமார் உளவே– நற்றிணை

காலத்தால் முந்திய அகநானூற்றிலும், நற்றினையிலும் புன்னையின் சிறப்புகள் வெகுவாகக் பேசப்படப் பட்டுள்ளன. மாலை மயங்கியதொரு வேளையிலே புன்னை மரத்தடியில், காதல் கொள்ள தலைவியை அழைக்கிறான் தலைவன். அவளோ புன்னை என் சகோதரி என செல்ல மறுக்கிறாள். தலைவன் தன் காதலை வெட்டி விடவே தலைவி வெட்டிப் பேசுகிறாள் என மனமொடியும் வேளை, தலைவி உரைக்கிறாள் “சிறுவயதில் புன்னை விதைகளை வைத்து விளையாடுகையில், விளையாட்டாய்ப் புதைத்த விதை இன்று மரமாகி நிற்கிறது.

நெய்யையும், பாலையும் ஊற்றி வளர்க்கப்பட்ட இப்புன்னையின் நிழலிலே தான் எமது இளமைப் பிராயத்தைக் கழித்தோம். ஆகவே இப்புன்னை என் சகோதரி. இவள் முன்னால் என்னால் உன்னோடு காதல் கொள்ள முடியாது” எனும் வார்த்தைகளில் இன்றைய பேருந்தின் பின்னிருக்கைகளில் நடைபெறும் காதல் லீலைகள் அனைத்தும் தூக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழனின் பண்பாட்டையே இப்பாடல் வரிகள் தெளிவு படுத்துகின்றன. நம் பண்பாடு, இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் கண்டு கொள்ளலாம். காதல் என்பதே மனிதனுக்கு வாழவேண்டும் எனும் உத்வேகத்தைக் கொடுக்கிறது. அத்தகைய காதலை வாழ்வியல் நெறிகளை மீறிப் பிரக்ஞையற்று வெளிப்படுத்தலே பண்பாடற்ற செயலாகும்.

என்னதான் சமூக மாற்றம், மறுமலர்ச்சி, எழுர்ச்சி என்று சந்திக்கு, சந்தி நின்று நாம் முழங்கினாலும், இவை தனி மனித மன மாற்றம் மற்றும் சீரான குடும்ப வாழ்விலிருந்து தான் உருவாக முடியும். குடும்பங்களில் காதலின் வீதம் இவ்வாறு இருக்கும் போது, பிள்ளைகள் எவ்வாறு இருக்கும்.

சாதிக்க முடியாத பெற்றோர் ஒருவரை ஒருவர் பழி தீர்த்துக் கொள்வதால் சீரழிவது, அவர்களின் சின்னச் சிறு குழந்தைகளே. அதனாலேயே “நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; அது அன்பு மணி வழங்கும் சுரங்கம்” என்று பாடுகிறான் கவிஞன்.

இன்றைய ஈழத்துக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரில் ஒருவரையே சார்ந்து வாழ்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் தந்தை அல்லது தாய் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களாகவோ அல்லது தடுப்பு முகாம்களிலோ காலத்தைக் கழிக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் எனும் கேள்வி மனதில் ஒரு உளச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அழிந்த சமுதாயம் ஒரு பக்கம் இருக்க , மற்றொரு பக்கம் மீதமுள்ள இளைஞர்கள் போதை வஸ்துக்களிலும், தீய ஒழுக்கங்களிலும் தம்மைத் தாமே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு மணமகன் மோகத்தில் எத்தனையோ முதிர்கன்னிகள் வாழ்க்கையின் மதியத்தைத் தாண்டி விட்டார்கள். இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல. வெளிநாட்டு மணமகனை முடித்தவர்களும், மணமகன்களின் இரண்டாம் வருகைக்கான காத்திருப்பிலேயே இளமையைத் தொலைத்து விடுகிறார்கள்.

“வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யாராகியரோ தோழி”

எனும் (குறுந்தொகை 110) பாடலுக்கு இணங்க சில தலைவியர் ”திரைகடல் ஓடித் திரவியம் தேடச்” சென்ற தலைவர்களைத் துறந்து, அவர் தம் நண்பரொடு உறவாடித் திளைப்பது மலிந்துவிட்டது. தலைவனின் அருகாமையின்றி குளிர் இரவின் கடும் பனியில் தலைவி எவ்வாறு ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள் என ஒளவையின் குறுங்தொகைப் பாடல் மிக அருமையாக விளக்குகிறது

முட்டு வேன்கொல்?தாக்கு வேன் கொல்?
ஒரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

இவ்வாறு பிறந்த மண்ணைத் துறந்து, மணந்த பெண்ணைத் துறந்து, சுற்றத்தையும் நட்பையும் துறந்து, உழைக்கச் சென்றவர்கள் இளமையையும், உறக்கத்தையும் விற்று ஈட்டும் பணம் பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

இவை இப்படி என்றால் தலைவியியைக் காணாத தலைவன் எவ்வாறு அவஸ்தைப் படுகிறான் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 3 …    ஐ வாசிக்க…..


Responses

  1. நல்ல ஒரு சமூக அக்கம் தொடருங்கள்… வாழ்த்துக்கள்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: