மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்22, 2010

சீரழிகிறதா நம் சமூகம்…… ? பாகம் – 1


“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”
எனச் எதிர்மறைச் சமூகச் சூழலுக்கும், பிரிவினைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக அன்றே பாடினான் மகாகவி.

மூடநம்பிக்கைகளில் இருந்து பெருமளவில் விடுபட்டிருக்கும் இன்றைய பகுத்தறிவுச் சமுதாயம், நாகரிக மோகத்திலும், வழி தவறிய வாழ்வியல் நெறிகளிலும் சீரழிந்து கொண்டிருப்பது மனச்கசப்பான விடயமே. அன்றைய காலம் தொட்டு, இன்றை காலம் வரை வெளிவருகின்ற அனைத்து இலக்கிய நூல்களும், கலை வடிவங்கங்களும் மக்களுக்கு ஏதோவொரு வகையில் விழிப்புணர்வூட்டக் கூடிய கருத்துக்களையே மையக் கருக்களாகக் கொண்டுள்ளன.

படைப்பாளிகள் காலத்தின் கண்ணாடிகள் என எடுத்துக் கொண்டால் “இவர்கள் சமகாலத்தில் இருட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தான் வெளிச்சமிடுகிறார்கள்” என்பதை உணர முடியும். “மக்களை நோக்கி இவ்வாறு தான் வாழ வேண்டும்” என்றும் சில இலக்கியங்களும், எவ்வாறெல்லாம் வாழக் கூடாது என்பதை சில இலக்கியங்களும், இப்படித் தான் சீரழிந்து வாழ்கிறீர்கள் என சில இலக்கியங்களும் உரைக்கின்றன. ஆக மொத்தத்தில் இலக்கியம் என்பது தனது சமூகத்தை இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி உயர்த்துவதற்காகவே அன்றி, தாழ்த்துவதற்காக அல்ல என்பது தெளிவாகிறது.

பல தனி மரங்களின் கூட்டே தோப்பாகும். இது போன்றதே நம் சமூகமும். சமூகம் என்பது மனிதர்களின் கட்டமைப்பாகும். இத்தகைய சமூகத்திற்குத் தேவையான மனித வளத்தையும், தலைமைகளையும் உற்பத்தி செய்வதிலும், அவர்களை சமூகத்திற்கு வழங்குவதிலும், குடும்பம் எனும் உற்பத்திக்கூடம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் சங்க காலம் தொட்டு மாற்றமின்றி கடைப்பிடிக்கப் பட்டு வரும் ஒரு பண்பாடே “காதல்” எனக் கூறத் துணியலாம். காதலைப் பேசும் காலங்களிலெல்லாம் நம் மனக் கண்ணில் வந்து நிற்பது

“செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” எனும் மனமொத்த துணைகளின் அன்பினைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடல் தான். செம்மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறத்தை பெற்று, மணத்தைப் பெற்று, அதில் கலந்துள்ள அத்தனை அம்சங்களையும் தன்னுள் ஏற்றுக் கொண்டு செல்வதைப் போல காதல் கொண்ட தலைவனும், தலைவியும் வாழ வேண்டும் எனும் இல்லற நெறியினை எடுத்தியம்புகிறது இப்பாடல்.

இல்லறக் கட்டிடத்தின் அடித்தளங்கள் எவையென்றால், அவை அன்பும், விட்டுக்கொடுப்புமே. இவை இரண்டும் இல்லாத குடும்பத்தில் இருந்து சமூகத்திற்கு வழங்கப்படும் உறுப்பினர்களே சமூகத்தின் புற்று நோயாகக் கருதப் படுகிறார்கள்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!

— எனும் பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலில் இருந்து ஒரு இளைஞனை சமூகப் பங்காளியாக மாற்றுவதில் குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் உள்ள கடமைகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். நவீன இளைஞனொருவன் தன் வாழ்நாளில் ஒரு பகுதியைத் தன் குடும்பத்திற்குள்ளேயும், பெரும் பகுதியைச் சுற்றியுள்ள சமூகத்திலும் கழிக்கிறான் என்பது கண்கூடு.

கால சுழற்சியில் ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்திற்கு தலைவர்களாகிறார்கள். பின்பு தன் பிள்ளைகளையும் சமூக உறுப்பினர்களாக மாற்றி, அவர்களையும் ஒரு குடும்பத் தலைவராக மாற்றி விடுகிறார்கள். இந்தப் படிமுறை ஒரு சுழற்சிக்கு உட்பட்டதாகும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சுழற்சி வேகத்தில், இன்று பல குடும்பங்களின் அடிப்படைத் தேவையான அன்பும், விட்டுக் கொடுப்பும், விசுவாசமும், ஒளிவுமறைவின்மையும் காணமல் போய் விடுகிறது. சந்தேகமும் மிகுந்து யாரை யார் கட்டுப்படுத்துவது என்ற ஆதிக்க வெறியில் பல குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. ஒருவரை ஒருவர் பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு, நெறியற்ற வாழ்க்கை முறையினக் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களே சமூக குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் வித்திடுபவர்கள்.

மேலும்…

சீரழிகிறதா நம் சமூகம்…… ?  பாகம் – 2  … வாசிக்க இத்தொடுப்பைப் பயன்படுத்தவும்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: