மன்னார் அமுதன் எழுதியவை | ஒக்ரோபர்15, 2010

வெ.துஷ்யந்தனின் “வெறிச்சோடும் மனங்கள்” – ஜீவநதி வெளியீடு


மனிதனின் சிந்தனை சக்தியை வளர்ப்பதிலும், வளமாக்குவதிலும் உவமைக் கதைகளும்(Parables), கவிதைகளும் பாரிய பங்கு வகிக்கின்றன. ஒரு கதையை மட்டும் சொல்லி அதனுள் பொதிந்திருக்கும் உட்கருத்துக்களை சிந்திக்கத் தூண்டும் ஆற்றலை உவமைகளே வளர்க்கின்றன. உவமைகளைப் படிக்கும் இன்றைய நவீன இளைஞர்களில் சிலர் அவை சமூகத்திற்குச் சொல்லப்பட்டதாகக் கருதுவதில்லை. இதற்குக் காரணம் உவமைகளைப் பழமையானதாகவும், தம்மை முற்போக்குச் சிந்தனாவாதிகளாகவும் எண்ண முனைவதே. “தினை விதைத்தவன் தினை அறுப்பான்” எனும் வாக்கிலுள்ள உவமை விவசாயிகளுக்கு மட்டும் சொல்லப்பட்டதாகவே இவர்கள் கருதுகின்றனர். மேடைகளில் ஒலிபெருக்கியில் பேசும் திறமையுடைய இவர்களின் தவறான சிந்தனைகள் பார்வையாளர்களின் மனதில் பதியமிட்டுவிடக்கூடாது. இத்தகைய கருத்துக்கள் இலங்கையின் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் இரண்டு மாறுபட்ட எதிரும் புதிருமான எல்லைகளைச் சுட்டி நிற்கிறது.

இத்தகைய இளைஞர்களுக்கு மத்தியில், தனது சிந்தனை வளத்தால் “வெறிச்சோடும் மனங்கள்” எனும் முதலாவது நூலை “ஜீவநதி” ஊடாக வெளியிட்டிருக்கிறார் தோழர் வெ.துஷ்யந்தன். துடிப்பு மிக்க இளைஞரான துஷ்யந்தன் யாழ்-வடமராட்சியின் சிறந்த கலைப்பாரம்பரியத்தின் ஒரு விழுதென முன்மொழிந்திருக்கிறார் கலாநிதி த.கலாமணி. இவரின் “வெறிச்சோடும் மனங்கள்” கடந்த சில வாரங்களாக நான் செல்லும் இடமெல்லாம் என்னூடே பயனித்தது. அதன் காரணமாகவே இக்கட்டுரையைத் தொடர்கிறேன்…

போராட்டம் இல்லாத வாழ்க்கை நீரோட்டம் இல்லாத நதிக்கே ஒப்பாகும். கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள். இவை சமூக அநீதியின் விம்பத்தை பிரதிபலிக்கவேண்டும். இப்பிரதி விம்பங்கள் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டும். தூண்டினால் தான் அது கவிதை. அவ்வாறு தூண்டுமாறு எழுதுவதே கவிஞனின் கடமை. கவிதைகளால் பல சமூக எழுர்ச்சிகள் ஏற்பட்டதை நீங்களும் அறிந்திருபீர்கள். இது, கவிஞன் இரத்தக் கடலில் கொண்ட பற்றால் ஏற்படுத்திய அலைகள் அல்ல. எமது மக்களின் அபிலாசைகள் எப்போதும் ”பாட்டி சுட்ட வடையாக இருந்து விடக் கூடாது” என்பதற்காகவே.

ஆதிக்கக் கால்களின் அடியில் சிக்கி இன்று பல இலக்கியங்கள் மிதவாதத்தைப் போதித்துக் கொண்டுள்ள சூழலில், இலக்கியம் தோன்றியதே அறத்தை வலியுறுத்தி நாட்டை மேம்படுத்தவும், ஆட்சியாளரின் குறைகளையும், சமூக அநீதிகளையும் மக்களுக்கு வெளிச்சமிடுவதற்க்காகவுமே எனும் அடிப்படைக் கருத்திற்கிணங்க பல கவிதைகளை வார்த்துள்ளார் துஷ்யந்தன்.

“….
வலிகள்
போரின் ஊடாகவும்
காதலின் ஊடாகவும்
என்னூடே மட்டுமின்றி
எல்லோரிடமும்
வியாபகம் பெற்றிருக்கின்றது
……………………………………………..” என மார்பிலும், இதயத்தில் சுமந்த வலிகளையும் அழகிய வரிகளில் “வலிகளூடான வாழ்க்கை” எனும் கவிதையில் வெளிப்படுத்தியுள்ள கவிஞர் வயதிற்கு மீறிய ஒரு முதிர்ச்சியைப் பெற்றிருப்பதற்கு இனப்போரே காரணமாகும். இப்போரினூடாகப் பெற்ற அனுபவங்கள் ஆழமான சிந்தனைகளையும், முதிர்வையும் கொடுத்துள்ளது. ஈழ மக்களிடம் இருந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் குறைந்து, இன்று அவர்கள் மனது வெறிச்சோடிக்கிடக்கிறது என்பதை “புரியாத வேதாந்தங்கள்” எனும் கவிதை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

”….
கடந்துபோன துயர் நிறந்த
கொடு நீள நாட்களின்
ஞாபக வடுக்களுடன்
நகர்ந்து கொண்டிருக்கிறது
எமக்கான வாழ்வியல்” — (“அமானுஷ்ய வாழ்வு) என்றும்

”……….
இனிமேலும்
எங்கள் ஜீவன்களில்
இழந்து விட
கண்ணீருக்கும், செந்நீருக்கும்
எதுவித திரானியும் இல்லை
………………….” — (இரவுகள் மீதான வெறுப்பு) என்று கூரும்

இக்கவிதைகள் மூலம் இலங்கைத் தமிழரின் இன்றைய வாழ்வியல் நிலைகளை வரையறுத்துள்ளார். இழப்பதற்கு ஞாபகங்களைத் தவிர எதுவும் அற்ற நிலையில், இழந்த துணைகளை மட்டுமே எண்ணி எண்ணி ஒரு நாளை நகர்த்துதலின் தூரத்தை எழுத்துக்களில் பயணித்து விட முடியாது. இந்நூலில் பெரும்பாண்மையான கவிதைகள் இனப்போரின் இன்னல்களையே சுட்டி நிற்கின்றன. பாலை நிலத்தில் பனை மர நிழல் போலே ஆங்காங்கே சில காதல் கவிதைகளும் (கனவுகளில் வாழ்தல், கவிதைக்குள் கருவானவள்), மனிதாபிமாக் கவிதைகளும், (மீளும் நினைவுகளில்) பசுமை நிறைந்த நினைவுகளும் அழகாகப் பகிரப்பட்டுள்ளன.

”…………..
சுகமான வலிகளின்
கனதியைத் தாங்க முடியாது
உரக்கக் கத்திவிடுகிறேன்
எனக்கு மட்டும் தெரிந்த
உனது பெயர் சொல்லி…….” — எனும் வார்த்தைகளில் “நிசப்த இரவுகளைக்” கிழித்துக் கொண்டு வெளிப்படும் காதல்

”……
இதயங்களை
அடகு வைக்கும்
இதய வங்கி தான் காதல்
இந்த வங்கியில் மட்டும் தான்
வட்டி வீதம்
கணத்திற்கு கணம்
கூடிக் கொண்டே செல்கின்றது..” எனும் வரிகளால் “ஆதலால் காதல் செய்வீரில்” வரவு வைக்கப் பட்டுள்ளது. அதிக நாட்கள் அடக்கி வைக்க முடியாத அஸ்திரமான காதலுக்கு கவிஞரும் இலக்காகியுள்ளார் என்பதை விட இலக்கானதால் இவர் கவிஞராகியுளார் என்பதே ஏற்புடையதாக இருக்கும். பகிரப் படும் அன்பு இரட்டிப்பாய் திரும்பக்கிடைக்கும் என்பதை இதனூடே வலியுறுத்துகிறார். காதலர்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் அன்பை எதிர்பார்ப்பதை விடுத்து, தன்னிடம் உள்ள அன்பை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னுரிமை கொடுத்தால், வாழ்வு சிறப்பாகும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் தான் வாழ்க்கை அன்பில் மலரத் தொடங்கும்.

”…………..
நாட்களும் கணங்களும்
நகர்ந்து கொள்கின்றன
என்பதற்காய்
நாதியற்றுப்போய் கிடந்த
நாழிகைகளை எப்படி மறப்பது?…..” என்று நிர்கதியான நிமிடங்களை அசை போட்டு கரியைப் பூசுகிறார் “அரிதார முகங்களில்”. நாடளாவிய ரீதியில் பெருஞ்செலவில் முன்னெடுக்கப்பட்ட / முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சில நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் இலங்கை மீண்டும் வழமைக்கு திரும்பிவிட்டது; வடக்கு கிழக்கில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றதொரு மாயையை உலகிற்கு உணர்த்தி வருகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவிப்பதை யாரும் குறை சொல்லவில்லை… அவர்களின் மனமும்

“……..
சில நிகழ்கால மகிழ்தலுக்காய்
இறந்த காலத்தையே
இருட்டடிப்பு செய்ய முனைகிறது
மனிதமனம்
……………….” (புரியாத வேதாந்தங்கள்) என்பது போல் பழையன கழிதலையே விரும்புகிறது என்கிறார் கவிஞர். அவர்கள் அழிவிழிருந்து மீண்டு “பீனிக்ஸ்” போன்றதொரு வாழ்வை வாழ வேண்டும் என்பதே எமது பேரவாவாகவும் உள்ளது. இருப்பினும் இந்த மாயைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டு தமது எதிர்கால சிந்தனையை இழந்து ஈசல்களாய் தம்மை அழித்துக் கொள்ள வேண்டும் வேண்டும் என்பதே பேராதிக்க சக்தியின் பொருட்செலவின் சூட்சுமமாக உள்ளது. ”தகர்ந்து போகும் பிடிமானங்களிள்” எனும் கவிதையில்

“எதற்காக வாழ முற்படுகிறோமோ
அந்த வாழ்விழந்து
நாங்கள் இப்பொழுது வாழும்
வாழ்வு
தோற்றுப் போய் விட்டது” என்றும்

“…………..
முன்பெல்லாம்
இம்முறை இல்லாவிடினும்
மறுமுறை பார்ப்போம் என்ற
நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும்
இன்றோ
எதிர்கால நம்பிக்கைகளைக் கூட
ஏமாற்றங்கள் முந்தும் நிலை” என ”வெறிச்சோடும் மனங்களிலும்” துவண்டிருக்கிறார் தோழர். நமது வாழ்விற்கான இலட்சியங்களை அடைவதில் நாம் ஒருமுறை தோற்றிருக்கலாம். ஆனால் அதுவே வழமையாகிவிடாதே. எத்தனையோ விதைகளின் புதைவே, ஒரு வனம். அது போன்றதே சுதந்திரமும். மனிதனுக்கு உணவு, உடை, உறையுள் என்பதைத் தவிர்த்து மேலும் ஒன்று அவனது வாழ்வை சீராக்கத் தேவைப்படுகிறது. அது முள் வேலிகளுக்குள் கிடைக்காதது.. அது தான் சுதந்திரம். அதை அடைய முனைகையில் தான் சில

”காகங்கள் தயாராகின்றன
சுவைப்பதற்கு
நாலைந்து நாய்கள்
கூட்டம் போடுகின்றது
பங்கீடு தொடர்பாக … என ”மரணங்களும் மனிதங்களிலும்” மனித இயலாமைகளை அருமையாக பட்டியலிடுகிறார். இக்கவிதை ஓருயிரின் மரணம் பற்றியதாகவும், அதை மனிதன் எவ்வாறு தவிர்க்கிறான் என்பதாகவும் அமைந்துள்ளது. பூனையின் இறப்பில் நாய்களின் பங்கீட்டுச் சண்டையும், அதைப் மனிதன் பார்த்து கொண்டே மூக்கை மூடிச் செல்வதும் பூனைகளுக்கு மட்டும் சொல்லப்படுவதாக நமக்கு உணர்த்தப்படவில்லை. கவிதையின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருந்தாலும் மனக்கண்ணில் “முள்ளிவாய்க்காலின்” போது மூக்கை மூடிக்கொண்ட சர்வதேசமே நினைவை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

”மீண்டும் கலங்கும் அஸ்தினாபுரி” யில்
”…………….
……………..
வேதனைக் கணைகளால்
தாக்குண்டு பழகிப் போன
எம் உணர்வுகளால்
ஒன்றை மட்டும் உணர முடியும்
இன்னுமொரு
அழிவுக்கு
இந்த அஸ்தினாபுரி
ஆயத்தமாகிக் கொள்கிறது…” என்றும்

”…………….
முட்கம்பிப் பாதுகாப்பு
வேளைக்கு வேளை உணவு
மற்ற நேரத்தில் கணக்கெடுப்பு
………..
…….
ஓடப்பிறந்தவர்கள் நாம்
ஆயுள்வரை எல்லா இடமும்
ஓடிக் கொண்டே இருப்போம்
ஏனெனில்
இது எங்களின் தேசம்”
என்று “அகதிகளின் தேசம்” கவிதையிலும் இன்றைய ஈழ மக்களின் உள்நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் இடம்/ புலம் பெயர்ந்த தன்மையையும், அதற்கு இன்று வரை கிடைக்காத விமோசனத்தையும் தெளிவாக்குகிறது. இலங்கையில் பீரங்கிகளையும், விமானத்தையும் பயன்படுத்திய போர் ஓய்வுபெற்றிருந்தாலும், வன்முறைகளாலும், ஆட்கடத்தலாலும், கற்பழிப்புகளாளும் ஓர் இனத்திற்கு எதிரான அனைத்து விதமான ஈனச்செயல்களும் நாள்தோறும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது என்பதை இக்கவிதைகள் மூலம் கவிஞர் தெளிவாக வெளிப்படுத்துகிறார். குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப் பட்டுள்ள மக்களின் மனித உரிமைகள் இன்று மண்ணுக்குள் புதைக்கப் பட்டுள்ளது.

போலிகளால் நிரப்பப்பட்ட இவ்வுலகில் என் கவிதைகள் நிஜம் என உறுதியாய்க் கூறும் மனத்திடம் மிக்க கவிஞரின், இத்தொகுப்பில் ”ரணமும் பிணமும்”, “மனம் மாறும் மானுடங்கள்”, ”தழும்புகள்”, “குற்றப்பத்திரிகை”, ”சம்பிரதாயக் கூடு”, ”சிறகு நனைந்த பறவையாய்” ”விடையில்லாக் கேள்விகள்”, ”நிம்மதியைத் தேடி” போன்ற பல சமூகப் பற்றுடன் எழுதப்பட்ட சமகாலக் கவிதைகள் வாசகர் மனதில் சுவடுகளைப் பதித்துள்ளன. ”ஆறாம் அறிவு” கவிதை துஷ்யந்தனின் கனிவான உள்ளத்தை தெளிவான நீரோடையாக்குகிறது.

”தாயும் குட்டிகளுமாய்
ஒன்றையொன்று முட்டிமோதி
உராஞ்சுதலில்
பாசத்தவிப்பு
………
……
எனது இரவுணவு
அவற்றின் பசி தீர்க்கும்” – (ஆறாம் அறிவு) என உருகும் கவிஞர் இறுதியில் தாயின் குரைப்பில், தூக்கிய குட்டியை விட்டு விடுவதிலிருந்து இயற்கைக்கு இசைந்துள்ளார்.

ஏலவே கூறியது போல் இனப்போரின் இன்னல்களையும், அதையே எண்ணி கழிக்கும் துயர் மிகுந்த காலத்தையும், அத்தகைய சூழலிலிருந்து வெளியேற நினைக்கும் மனங்களையும், இடையிடையே காதலையும், மனிதாபிமாந்த்தையும் வெளிப்படுத்தியிருக்கும் துஷ்யந்தன் “வறிய நாட்டின் செல்வந்தர்கள்” மூலம் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கெல்லாம் விடை கூறியுள்ளார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் நம் மக்களிடையே புழங்கும் பணத்திற்கு குறைவிருப்பதில்லை. வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டில் என்ற நிலையில் இது சாத்தியமாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

நீங்கள் மறுக்க விரும்புகிறீர்களா?

நூலின் பெயர்: வெறிச்சோடும் மனங்கள்
ஆசிரியர்: வெ.துஷ்யந்தன்
வெளியீடு: ஜீவநதி
கலைஅகம்
அல்வாய் வடமேற்கு
அல்வாய்
விலை: ரூ.200/=
கிடைக்குமிடம்: பூபாலசிங்கம் புத்தகச்சாலை & ஜீவநதி பதிப்பகம்

முகநூலில் கவிஞரின் பக்கத்திற்கான தொடுப்பு: http://www.facebook.com/profile.php?id=1389567046


Responses

  1. tharamanatoru nuul aayvu….puththakaththai neramarra orunaaddilirunthu avasarakkuduukaiyai suvaiththa naan unkal kavi aayvin muulam eththanaiyo vidayankalai kavignari aathankaththai puddu vaithirukirirkal….oru ilaya kaviyil iththanai ulladakkamaa? nampamudiyavillai….nanrikal

  2. title is catchy


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: