ஆய்வு செய்வதாய்
அவரே முன்வந்தார்
தேடித் தேடிப் படித்துவிட்டு
தேரில் தொலைந்த
குழந்தையாய் விழித்தார்
மோவாய் தடவி
முகத்தினைக் கோணி
கடைசியில் விளித்தார்
“குறியீடும் படிமமும்
குறைகளாய் உள்ளதாய்…”
அதிகாரப் பரவலாக்கத்தை
அவர்கள் அவர்களுக்குள்
புதைத்தது போல்
எதற்குள்ளாவது எதையாவது
புதைக்க வருமாம் “படிமம்”
அப்படி எழுதினால்
என்னவென்றார்?
அப்படிக் கவிதைகள்
ஆயிரம் எழுதியும்
எதனை வென்றார்?
குறியீட்டுக் கொள்கையில்
அடங்க மறுப்பதாய்
ஆத்திரம் கொண்டார்
எதை எழுதினேனென
எனக்கும் புரியாமல்
அவருக்கும் புரியாமல்
புதிராய் இருந்தால்
சிறப்பினும் சிறப்பாம்
எழுத வராதோ ?
என்றும் சீண்டினார்
படிமம் இல்லாதவை
பாதிக் கவிதையாம்
குறியீடு இல்லாததால்
குறைப் பிரசவங்களாம்
பேரறிவாளர் (!) விதந்துரைக்க
பெரும்பாண்மைப் படிமங்கள்
தேவையாம்…
எல்லாம் எல்லார்க்கும்
விளங்கினால்
எதுக்காய்வாம்?
எதற்காய் வந்தாரோ
அதனைச் செய்தார்
உதட்டிற்குள் மறைத்த நகைப்பு
கண்ணில் வெளிப்பட
காணாமல் போனார்
நல்லது.. ஐயா
நல்லாய்வு…
நானென்ன சொல்ல..
இவை கவிதை அல்ல
சிறுபான்மைக் குடியானவனின்
சிறுமடல்கள் தான் என்றா…
மறுமொழியொன்றை இடுங்கள்