மன்னார் அமுதன் எழுதியவை | மே3, 2010

கலை ஞான பூரணண்” திரு.அருள் மா. இராஜேந்திரனின் “அருளின் சிறுகதைகள்”


“கலை ஞான பூரணண்” திரு.அருள் மா. இராஜேந்திரனின் “அருளின் சிறுகதைகள்”

… இலங்கை திருமறைக்கலா மன்றத்தின் வெளியீடு ‍‍

கடந்த 40 ஆண்டு காலமாக இலங்கைத் திருமறைக்கலா மன்றத்தின் வளர்ச்சிக்கு தோள்கொடுத்து உழைத்து வரும் மூத்த படைப்பாளியும் கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் மூத்த உறுப்பினரும் ஆலோசகருமான கலை ஞானதீபம் , “கலை ஞான பூரணண்”திரு.அருள் மா. இராஜேந்திரனின் “அருளின் சிறுகதைகள்” தொகுப்பு (28.04.2010 ) நேற்று திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப் பட்டது.

கொழும்பு திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு டி.ஞானசேகரம் தலைமை தாங்கினார். ரோயல் கல்லூரியின் துணை அதிபரும், தமிழ்ப் பிரிவின் அதிபருமான மா.கணபதி பிள்ளையும், பெனடிக்ட் கல்லூரியின் ஆசிரியர் வி.கிருபாகரனும் மிகவும் அருமையான நூல் நயப்புரையை வழங்கினர். மேலும் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பள்ளிக் கல்வித்திட்டத்தில் உள்வாங்கப் பட வேண்டும் எனும்கோரிக்கையையும் முன் வைத்தார்.

இலங்கையின் இலக்கிய வரலாற்றில், இன மத பேதங்களைக் கடந்து பல்துறை நூல்களின் முதல் பிரதிகளை பெருந்தொகை கொடுத்து வாங்கும் கலியுக சடையப்ப வள்ளலான இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் இந்நிகழ்விலும் கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

நூலாசிரியர் அருள்.மா.இராஜேந்திரன் 1928ஆம் ஆண்டில் பிறந்தவர். யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் தனது கல்வி காலத்தை நிறைவு செய்த இவர் மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு கொழும்பு மாநகர சபையிலும் இலிகிதராகப் பணிபுரிந்தவர்.

தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்த போதுஅதிலிருந்து ஓய்வு பெற்று சமூக, சமயப் பணிகளைல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என நூலாசிரியர் பற்றி கொழும்பு திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலக்கியப் பாசறை நிகழ்வுகளிளும், நாடக அரங்கேற்றங்களிலும் தவறாது கலந்து கொள்ளும் திரு.அருள் மா.இராஜேந்திரன் அமைதியான சுபாவம் உடையவர். இன்று வரை பல இளம் இலக்கிய கர்த்தாக்களுக்கு முன் மாதிரியாகத் திகழும் இவர் ஒரு நிறைகுடம். இளம் எழுத்தாளர்களை அரவணைத்துக் கொண்டு செல்லும் மிகச் சிறந்த பண்பாளர். அனைவரின் உரைகளையும் அமைதியாக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்.

காலம் அறிந்து பயிர் செய்து நல்வாழ்வு பெறும் விவசாயியைப் போல, தக்க காலத்தே இந்நூலை வெளியிட்டுள்ள இலங்கை திருமறைக் கலாமன்றத்தின் பணி அளப்பரியதாகும்.

சிறந்த ஆங்கில மொழியறிவும், தமிழ்ப் புலமையும் கொண்ட அருள், கலாநிதி எஸ்.பத்மநாதன் அவர்களின் ” யாழ்ப்பாண இராச்சியம்” என்ற நூலை மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளார். இருமொழிப் புலமை கைவரப் பெற்றதால் பத்திரிக்கைகளில் கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்பு, நாடகங்கள் என இவர் படைத்த‌ ஆக்கங்கள் எண்ணற்றவையாகும்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும், ஆட்சிக்குழு உறுப்பினராகவும் தொண்டாற்றிய இவரை தமிச்சங்கம் சங்கச் சான்றோரின் வரிசையில் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

தந்தை செல்வாவின் இறுதிக் காலத்தில் அவருடைய செயலாளராக பணியாற்றிய இவர் எழுதிய இரண்டு கடிதங்கள் அந்நாட்களில் இலங்கைப் பாராளுமன்றத்தில் வாசிக்கப் பட்டுள்ளது.

நூலாசிரியரின் முந்தைய நூலான “தவச் சுடர்கள்” என்ற நூலையும் திருமறைக் கலாமன்றம் ஏலவே வெளியிட்டிருந்தது. அருளின் சிறுகதைகள் நூலைத் தொடர்ந்து இவரின் நாடகங்களையும் நூலுருவில் வெளிக்கொணர முயற்சிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

1952ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலப் பகுதியில் எழுதப் பட்ட 10 கதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் வெளிவதுள்ள கதைகள் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் (டெயிலி நியூஸ், கதலிக் மெசஞ்சர்) வெளிவந்து பரிசுகளையும், பணப் பத்திரங்களையும் சுவீகரித்துக் கொண்டவையாகும்.

காலத்தால் அழியாத சிறந்த படைப்புகளை இருமொழியிலும் உலகிற்கு வழங்கியுள்ள அருள் மா. இராஜேந்திரனுக்கு அவரின் உன்னதமான பணியையும், சமூகப் பொறுப்பையும் பாராட்டி திருமறைக் கலாமன்றத்தின் அதியுயர் விருதான “கலை ஞான பூரணண்” எனும் விருதும் பதக்கமும் இலங்கை திருமறைக் கலாமன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பெருமதிப்பிற்குரிய அருட்பணி . மரியசேவியர் அடிகளாரால் வழங்கி கெளரவிக்கப் பட்டது.

கலைஞர்கள் மறைந்த பின் அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதையும், அஞ்சலிக் கவிதைகள் படைப்பதையும் விட, அருள் மா.இராஜேந்திரன் போன்ற சிறந்த பிற படைப்பாளிகளை இனங்கண்டு காலத்தே அவர்களின் எழுத்துக்களை நூலுருவாக்கம் கொடுப்பதே தமிழ் வளர்க்கும் அமைப்புகளின், சங்கங்களின் மிகச் சிறந்த இலக்கியப் பணியாக அமையும்.

காணொளி:


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: