மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி25, 2010

ஊடகங்களில் மதத்திணிப்பா “வணக்கம்”? – சுய கருத்து


தோழர்களுக்கு வணக்கம்,

ஊடகங்களில் மதத்திணிப்பா “வணக்கம்”? எனும் தலைப்பில் (அதை ஒரு முறை படிச்சிட்டு வாங்க) தோழர் “என்ன கொடுமை சார்” பதிவிட்டதுடன் முகப் புத்தகத்தில் “நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று கேட்டு எனக்கும் ஒரு தகவல் அனுப்பியிருந்தார்.

அழைப்பு விடுத்ததால் நானும் இதில் பங்கேற்க வேண்டிய நிலை. என் இரு கருத்துக்களைப் பின்னூட்டமிட்டேன். சில தோழர்கள் எனது பின்னூட்டத்தைப் பதிவிடுமாறு கேட்டார்கள். அதனால் இப்பதிவு.

என்னையும் இதில் (ஊடகங்களில் மதத்திணிப்பா “வணக்கம்”?) இணைத்துக் கொண்டமையால் சில கருத்துக்களை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.

வணக்கம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் வயது வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொள்ளும் வரவேற்பு வார்த்தைப் பதமாகும். சிறியவர் பெரியவருக்கும், பெரியவர் சிறியவருக்கும், ஆண் பெண்ணுக்கும் என எவரும், எவ்வேளைகளிலும் வணக்கம் சொல்ல முடியும். ஆனால் கால ஓட்டத்தில் வணக்கத்தை சிறியவர் தான் முதலில் பெரியவருக்கு சொல்ல வேண்டும், பெண் முதலில் ஆணுக்கு சொல்ல வேண்டும் என மாற்றிக் கொண்டார்கள்.

வணக்கம் எனும் சொல் வணங்குதல் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது என்பது சரிதான். இறைவனை வணங்கும்போது, இறைவன் முன் மனிதன் தன்னைத் தானே தாழ்த்திக் (பக்தி, பணிவு) கொள்கிறான்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன் (நற்பண்புகள்) இருக்கிறான். (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது)

பணிவை வெளிப்படுத்துவதற்காகவே நாமும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம். மற்றவரும் வணக்கம் (அவர்களுடைய பயன்பாட்டு மொழியில்) சொல்லும் போது அவரும் அதை ஏற்றுக் கொண்டு பேச்சின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.

தெரிந்த அல்லது அறிமுகமில்லாத ஒருவரைக் காணும் போது அவர்களுடன் உரையாட வேண்டிய சூழலில் வணக்கம், சலாம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும் (Have a blessed day) போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப் படுவது மதக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவோ, திணிப்பதற்காகவோ அல்ல. மனித மனங்களை இணைப்பதற்காக. ஆகையால் வணக்கம்.

GOOD MORNING – ஆங்கில மொழி – யாவரும் பயன்படுத்தலாம்
HAVE A BLESSED DAY – ஆங்கில மொழி – யாவரும் பயன்படுத்தலாம்
SALAM – அரபு மொழி – யாவரும் பயன்படுத்தலாம்
VANAKKAM – தமிழ் மொழி – யாவரும் பயன்படுத்தலாம்

வணக்கம் என்றால் என்ன?
தன் இஷ்டத்திற்கு வாழ்வதை குழி தோண்டி புதைத்து விட்டு அல்லாஹ்வின் இஷ்டத்திற்கு ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு பெயர் தான் வணக்கம்.
— ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)

சலாம் என்றால் —- இறைவனின் அமைதி, சாந்தம் உங்களுக்கு உண்டாகட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் —- இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!
பதில் சொல்பவரும் —– வ அலைக்கும் சலாம் (உங்களின் மீது அவ்வாறே சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக)
சலாம் – சலாம் என்று ஒரு வார்த்தையில்கூட ஒருவருக்கொருவர் சலாம் கூறி கொள்ளலாம்.
இந்த வார்த்தை முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை. கடவுள் நம்பிக்கை உடைய எல்லோருக்கும் பொதுவான வார்த்தை இன்னும் அழகான வார்த்தையும்கூட. யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.

சலாம் சொல்வதற்கு மதக் கட்டுப் பாடுகள் இல்லை. அதே போல் வணக்கத்திற்கும் இல்லை. இச்சொற்கள் மொழியினால் மட்டுமே வேறுபடுகின்றன. பொருளினால் மற்றொரு மனிதனுக்கான பிரார்த்தனைகளையும், நல்வாழ்வையும், இறையாசியையும், அடிப்படைப் பண்பான பணிவையுமே வேண்டி நிற்கின்றன.

வணக்கத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. வணக்கம் கூறலாம் என்பதே என் பணிவான கருத்து

ஒன்றை நாம் கற்றுக் (அறிந்து) கொள்ள வேண்டும் எனும் எண்ணத்துடன் ஒரு விவாதத்தைத் தொடங்கினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ஏதோ சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு (அறியாமை), முடிவையும் நாமே முடிவு செய்துவிட்டு, சர்ச்சை செய்தல் யாருக்கும் நலம் பயக்காது. மேலும் மனக் கசப்புகளைத் தான் உருவாக்கும்.

விவாதங்களின் ஒரு நிமிட வெற்றி நமது பால்ய கால நல்ல நட்புகளைக் கூட முறித்துவிடும். ஏனெனில், விவாதம் யார் சரி என்றே தீர்மானிக்கிறது. எது (எக்கருத்து) சரியென தீர்மானிக்காது.

ஒன்றை அறிந்து கொள்ள முன் நமது மனதை வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், சரியானவற்றை இனங்கானவும் முடியும்.

நமக்குரிய முகநன்னை யார் எம்மொழியில் கூறினால் என்ன… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருந்தால் போதும் தானே ஐயா…

இன்னும் எத்தனை காலம் இதே மதத்தையும், கடவுளையும் வசை பாடிக் கொண்டே காலத்தைக் கடத்துவது.

பிற மதங்களைப் பற்றிய நல்லெண்ணமும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும் போது மட்டும் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.

நாளை நானும் நீங்களும் சந்தித்துப் பிரியும் போதோ, அலைபேசியில் பேசி முடிக்கும் போதோ “god bless you” என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா தோழரே?

உங்களுக்கான எனது பிரார்த்தனையாக நினைக்க மாட்டீர்களா?

சர்ச்சைகள் வேண்டாம் தோழர்… சாதிக்க இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன… விரும்பினால் எம் இலக்கியப் பாசறையில் இணைந்து கொள்ளுங்கள்…

மதங்களைக் கடந்து
மனிதத்தை சுவாசிப்போம்…
மாற்றுக் கருத்தினை
மதித்தே நேசிப்போம்…


Responses

 1. //“god bless you” என்று நான் கூறினால் கூட நீங்கள் அதை மதத் திணிப்பாகத் தான் எடுப்பீர்களா?//

  ஒருபோதும் இல்லை. கடவுளின் ஆசீர்வாதம் கடவுளை நம்பும் எல்லோருக்கும் தேவை. இங்கு “வணக்கம்” வணங்குகிறேன் என்று பொருள்படுவதாக கருதப்படுவதால் தான் இக்குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் வேண்டாம் என்கிறோம். பிரார்த்தனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

  முகமன் வரம்புமீறாததாக இருக்கவேண்டும். “வணக்கம்” என்பது வணங்கிகிறேன் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாக முஸ்லிம்கள் கருதுவதால், ஒருவர் எம்மை வணங்குவதையோ, நாம் இன்னொருவரை வணங்குவதையோ
  தடுக்கிறோம்.

  இங்கு நோக்கமல்ல. திணிக்கவேண்டாம் என்பதே விடயதானம்.

  இன்னும் பலவிடயங்களை என்பதிலில் பகிர்ந்திருக்கிறேன்.

  =============================

  அமுதன் நவின்றது:

  நீங்கள் டொடருங்கள் தோழரே

  எனக்கு இப்பவே கண்ணக் கட்டுது….. முடியல

 2. நல்ல பதில் அமுதன், எனக்கும் அதே கருத்துதான்

  ===============

  அமுதன் நவின்றது:

  நன்றி யோ…

 3. வணக்கம் – இங்கு நாம் சுவிசில் அனைவரையும் கண்டால் சொல்லும் தமிழ் வார்த்தை! எமது மறைந்த தலைவர் தந்தை எஸ்.ஜே.வி அவர்களும் பிறப்பால் கிறீஸ்தவராயிருந்தாலும் அனைவரையும் கைகூப்பி வணக்கம் சொல்லுவார்! ஏன் எமது தலைவர் மறைந்த சிவசிதம்பரம் ஐயாவை மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷரப் அவர்கள் காணும்போதெல்லாம் வணக்கம் சொல்லுவார் அவர் மாத்திரமல்ல – தமிழரசுக் கட்சியிலும் பின்னாளில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்த அனைவருமே அப்படித்தான்!

  ===========================

  அமுதன் நவின்றது:

  வாங்க தங்க முகுந்தன்.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து சென்றமைக்கு நன்றிகள்…

  கொடுமை சார், இப்போ உங்க சான்ஸ்..

  கண்ணக் கட்டுதே…..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: