அநுராதபுர மாவட்ட மண்ணிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் சிற்றிலக்கிய இதழான படிகள் சஞ்சிகை இலங்கை இலக்கிய வளர்ச்சியில் பாரிய பங்காற்றி வருவது அனைவரும் அறிந்ததே.
இத்தகைய நிலையில் படிகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் முதலாவது கவிதைத் தொகுதியே “வேர்களைத் தாண்டும் வேர்கள்”. இக்கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா 21-02-2010 அன்று மாலை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மறைந்த பல்துறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்பு ஜவகர்ஷா, பேனா மனோகரன், கெக்கிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், கெக்கிராவ ஸுலைஹா, அநுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ், எல்.வஸீம் அக்ரம், எம்.சீ.ரஸ்மின், அநுராதபுரம் சமான் ஆகிய கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள், ஒன்பது பேரின் கவிதைகளை உள்ளடக்கியதாக மிகவும் கனதியான படைப்பாக வெளிவந்துள்ளது.
மூத்த படைப்பாளியான டொமினிக் ஜீவா (வாழ்த்துரை), பத்மா சோமகாந்தன் (விமர்சன நோக்குரை) உட்பட மேமன்கவி (தலைமையுரை), அஸ்ரப் சிராப்தீன் (விமர்சன நோக்குரை), புரவலர் ஹாசிம் உமர் (முதல் பிரதி), என பல பிரதிநிகள் நிகழ்வில் கலந்து கொண்டு கெளரவப்படுத்தினர்.
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்பவர்கள் வடக்குக் கிழக்குப் படைப்புகளை மட்டும் ஆய்வில் சேர்த்துக் கொள்வதையும், கொழும்பு, மலையகம் மற்றும் பிற பிரதேச படைப்புகளை புறந்தள்ளுவதையும் சுட்டிக்காட்டிய மேமன் கவி ஆய்வுகளின் போது இலங்கை இலக்கியங்கள் பிரதேச வேறுபாடின்றி உள்வாங்கப் படவேண்டுமென்னும் கருத்தையும் தனது தலைமையுரையில் முன்வைத்தார்.
இலங்கை தமிழ் இலக்கிய வரலாறில் அநுராதபுரம் மிகவும் முக்கியமான இடமாகும். ஏனெனில் சுற்றிலும் சிங்கள நிலப்பரப்பினால் ஆளுகைக்குட்பட்ட இம்மண்ணிலிருந்து கொண்டு தாய்மொழியின் இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்துவதும், அன்றாடப் பயன்பாட்டில் உபயோகப்படுத்துவதும் பெருமிதமடையச் செய்கிறது.
இத்தொகுதி ஒன்பது கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி வந்துள்ளதால் அனைத்துக் கவிதைகளும் பொருள் செறிந்த கவிதைகளாகவே உள்ளன. இத்தகைய கவிதைத் தொகுப்புகள் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தொகுதியிலிருந்து சில துளிகள்
தேர்தல் முடிவு
தாசிகள் கூட்டத்தில்
கற்புள்ளவளைத் தேடி
கண்ட வெற்றிகள் ( அன்பு ஜவகர்ஷா – 1973)
வேலிகளைத் தாண்டும் வேர்கள்
…
வரன் என்ற போர்வையில்
வாய்ப்பதெல்லாம் ஆயுள் தண்டனை
…
….
(நாச்சியா தீவு பர்வீன்)
பொறுத்தது போதும்!
அவன் எத்தனையோ
தடவை என் முகத்தில்
காறி உமிழ்ந்தான்
எனக்குத்தான் சூடு சுரணைகளெல்லாம்
செத்துவிட்டதே
இன்னும் அவனின்
சிரசையே
வருடிவருகிறேன்
…
….
(—அநுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ்)
சுதேச உரிமையைத் தொலைத்தல்
இன்பச் சாயலை
இரசனையை
உறிஞ்சிக் குடிக்கும் வெறியில்
இனத்துவப் பெரு நாய் நகர்கிறது
…..
….
( – -எல்.வஸீம் அக்ரம்)
இவற்றையும் தாண்டி புத்தகம் முழுவதும் உணர்ச்சிக் குவியலாய்க் கவிதைகள் நிறைந்து கிடக்கின்றன. வாசித்து முடிக்கையில், மனம் நிறைமாதக் கற்பினி போல் வீங்கிப் போய் விடுகிறது. அவளுனரும் அதே வலியையும், சுகத்தையும் நானுமுணர்ந்தேன்.
நீங்களும் உணர வேண்டுமா?
கவிதைத் தொகுப்பின் பெயர்: வேலிகளைத் தாண்டும் வேர்கள்
தொகுப்பாளர்கள்: நாச்சியாதீவு பர்வீன் & எல்.வஸீம் அக்ரம்
வெளியீடு: படிகள் பதிப்பகம்
விலை: 150/=
கிடைக்குமிடம்: அனைத்துப் புத்தக சாலைகளிலும்
நிகழ்வுகள்:
கவிஞருக்கு வணக்கம்,
மன்னார் அமுதன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
ஒரு புத்தகம் எழுதி வெளியிடுவதென்பது. தலைசிறந்த பணிகளுள் ஒன்று. தங்களின் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இன்னும் பல உங்களின் படைப்புகளை தமிழுலகம் பெற்று என் மக்கள் பயன்பெற உங்களின் எழுத்தின் வலிமை எல்லையின்றி நீண்டு அகில உலகும் பரவட்டும்.
வாழ்க; வளர்க!
வித்யாசாகர்
குவைத்
********
அமுதன் நவின்றது:
வணக்கம் தோழர். இது இலங்கை – அநுராதபுர இலக்கியவாதிகளின் கூட்டுமுயற்சி. அதைப் பற்றிய பதிவிடுதலும், நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதலும் என் மனதிற்கு சிறு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மற்றபடி எனது வாழ்த்துக்களும் உங்கள் வாழ்த்துக்களும் தொகுத்தவர்களுக்கே சமர்ப்பணம்.
By: வித்யாசாகர் on பிப்ரவரி22, 2010
at 6:16 பிப
நல்ல பதிவு. உடனுக்குடன் படங்களுடன் உங்கள் பதிவுகள் வாசகர்களுக்கு பெருவிருந்து.
==
அமுதன் நவின்றது:
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஐயா
By: Dr.M.K.Muruganandan on பிப்ரவரி23, 2010
at 2:49 முப
very super
==============
அமுதன் நவின்றது:
நன்றி
By: bibarish on பிப்ரவரி26, 2010
at 12:10 முப