மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி3, 2010

வெல்லத் தமிழினி தாகும்


தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே

சொல்வதற் கரிய கனிமை – மொழியில்
கொல்வதற் கரிய உயிர்மை – போரால்
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை

இலக்கிய நகைகளை அணிவாள் – படைப்பில்
இலக்கணப் புன்னகை மலர்ப்பாள் -ஆக்கச்
சிறப்பினை ஓசையால் உரைப்பாள் -கேட்போர்
உள்ளத்தை மெதுவாய்க் கரைப்பாள்

நல்லோர் நாவில் சரசம் புரிவாள்
நல்மனத் தோர்க்கெலாம் கலசம் அருள்வாள்
வன்மங்கள் கண்டு பொங்கியே எழுவாள்
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினைப் பொழிவாள்

கயல்விழி மாதர் அழகெலாம் அழகா
கண்டவர் மேற்கொளும் காதல் நிலையா
இயலிசை, நாடகம் மூன்றையும் உயிராய்க்
கொண்டவர் சிறப்பே என்றும் அழியா

தமிழினி அழிந்தே போகும் – எனும்
தறுதலைத் தலைமைகள் வேகும் தீயில்
மடமைக் கருத்துக்கள் மாண்டே போகும்
மாரித் தவளைகள் கத்தியே ஓயும்

தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் – கற்றால்
தளரவே மாட்டாய் மூப்பால் – சிறிதாய்
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் – நாளை
நீயும் சுரப்பாய் கவிப்பால்

குழலிசை தனிலும் இனிமை – எங்கோ
குழந்தையின் நாவில் உயிர்மெய் -சில
மடந்தையர் கொஞ்சும் மொழிபொய்-இந்த
மடமையை அழித்தே தமிழ்செய்

மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்புநாள் விரைவிலே கூடும்

வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்
வெகுவான கலைச் சொற்கள் கூடும்
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்

செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
எருவாக மாண்டே தான் போகும்- எனும்
கள்ளத் தலைவர் தம்மெண்ணங்கள் மாறும்
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்

சுட்டாலும் தமிழெமக்குத் தெரியாதென்றோர்
சுடு பட்ட புழுவாக துடித்தே வாழ்வீர்
நட்டாலும் நேரான மரமாய் வழர்வீர்
நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனைத் தாரீர்

சோதர மொழிகள் கலவை யின்றி -நாளும்
சோற்றிற் காய்த் தமிழைப் பேசும் காலம்
நரம்பில்லா நாவிற்கு வந்தே தீரும் -மூடா
நம்செவிகளிலே தேனாறாய்ப் பாயும்

வீட்டிற்கு ஒருவர்க்குத் தறிகள் தந்து
பாட்டிற்கு அத்தறியில் கவிதை நெய்வோம்
மாட்டிற்கே தமிழுணர்வு வந்த நாட்டில் -தமிழறியா
மாடென்று உமையேச மனசே வெட்கும்
Responses

 1. ஆங்கில மோகத்தில் சுற்றித் திரிவோர்; தன் நெற்றியில் ஒட்டித் திரியவேண்டிய கவிதை. மொழி எதுவாயினும் நம் பலம் என்றாலும் ‘ஒரு இந்தி மொழி பேசுபவரிடம், ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவனிடம் தமிழை பேச இயலாத பட்சத்தில் தமிழரிடம் பிற மொழிகளை கலந்து பேசுவது எத்தனை தவறென்று ஏனோ நம் சமூகம் உணரவேயில்லை; என வருந்தி வருந்தி நாமெல்லாம் நம் தலையை நல்ல அழுத்தமான சுவற்றில் முட்டி முட்டி சாவோம் போல் அமுதன்!

  வித்யாசாகர்

  **********

  அமுதன் நவின்றது:

  மோகத்தில் உழல்கிறார்கள் ஐயா. தமிழைத் தவிர வேறு மொழிகளை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தவும் வேண்டும். ஆனால் நம் மக்கள், பகட்டாய் வாழ்வதைத் தான் விரும்புகிறார்கள்.

  தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: