மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்22, 2009

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 3


ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 1

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 2

—-
இன்றைய மாணவர்கள் மறியல் செய்வதிலும், வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும், ஒருவரை ஒருவர் தாக்கி உடல் பலத்தைக் காட்டுவதிலும், பகிடிவதையில் ஈடுபடுவதிலும், தமக்குத் தேவையானவற்றையும், அனாவசியமானவற்றையும் கூட பெற்றோருடமிருந்து மிரட்டிப் பறிப்பதிலும் மிகவும் ஆற்றல் மிக்கவராயிருக்கிறார்கள். அத்தோடு வலிந்து சென்று நலிந்த மாணவர்களை அடிமைப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைக் கல்வியிலும், அவர்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள கடமைகளிலும் காட்டத் தவறுகின்றனர்.

கல்வி கற்பதை விடவும் விரிவுரையாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் எதிராகச் சுவரொட்டிகளை வெகு முனைப்போடு தயாரிப்பதிலும், தமக்கு ஒதுக்கப்படாத வகுப்பறைகளை அடாவடித் தனமாக ஆக்கிரமிப்பதிலும், இரவினில் வகுப்பறைகளிலேயே தங்குவதிலும் வெகு முனைப்போடு செயலாற்றுகிறார்கள்.

“அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது” எனும் பழமொழிக்கேற்ப பெற்றோர்கள் செயல் பட வேண்டும். விரிவுரையாளர்களையும் ஒழுங்கீனமான மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். ஒரு புதுமுக மாணவனுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் மென்மையானதாகவோ (mild torture), வேதனையளிக்கத் தக்க வகையிலோ (harsh), உளவியல் (psychologically) அல்லது உடலியல் (physically) என எவ்வடிவத்தில் இருந்தாலும், அவை அனைத்துமே பகிடி வதையென்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பகிடிவதை எந்த ஒரு பயன்பாடான விடயத்திற்கும், வளர்ச்சிக்கும் (ஆளுமை விருத்திக்கோ, இன்ன பிறவுக்கோ ) ஒருபோதும் மாணவர்களுக்கு உதவாது. ஒரு புதுமுக மாணவனை துன்புறுத்துவதன் மூலமும், துஸ்பிரயோகம் செய்வதன் மூலமும் எந்த ஒரு மேலாண்டு மாணவனும் தனக்குரிய மரியாதையைப் பெற்றுக் கொள்ள முடியாது. மரியாதை என்பது கொடுத்துப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை பேராசிரியர்கள் கூறித் தான் மேலாண்டு மாணவர்கள் அறிந்து கொள்வார்களா?

புதுமுக மாணவர்களிடம் மரியாதையைப் பெற்றுக் கொள்ள மேலாண்டு மாணவர்கள் உதவி மனப்பாண்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஒரு குழந்தை எவ்வாறு எல்லாவற்றையும் பெரியோர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறதோ அதே போல் தான் புது முக மாணவனும் கற்றுக் கொள்கிறான். ஏனெனில் பல்கலைக்கழகம் எனும் குடும்பத்திற்குள் புதிதாய் இணைந்துகொள்ளும் குழந்தைகளே “புதுமுக மாணவர்கள்”. அவனிடம் மேலாண்டு மாணவர்கள் பணிவுடன் நடப்பதன் மூலம் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.

“பகிடிவதை” சட்டத்தால் தடை செய்யப் பட்ட அனுகுமுறை என மாணவர்கள் அறிந்திருந்தும், அதை மீண்டும் மீண்டும் செய்யத் துணிவதற்குக் காரணம் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படாமையே ஆகும். மேலும் இவர்கள் தமது துறை சார்ந்த பேராசிரியர்களாலும், உறுப்பினர்களாலும் பல முறை எச்சரிக்கப் பட்ட பின்னரும், மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்துவது, அவர்கள் தமது துறை சார்ந்தவர்களையே மதிக்கவில்லையென்பதையே காட்டுகிறது. தமது மூத்தோர்களின் வாய்மொழியை மதிக்காத இவர்கள், புதுமுக மாணவர்களுக்கு எப்படி மரியாதையைக் கற்றுத் தர முனையலாம். மேலாண்டு மாணவர்கள், கல்வியிலும், தொழில்முயற்சிகளிலும், நல்ல குணங்களாலும் சக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எமது கல்வி நிறுவனத்தின் நிர்வாகியும், முகாமைத்துவ அலுவலர்களும், எமக்குக் கற்றுத் தரும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களும் கூட ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டே இன்று இந்நிறுவனத்தை வழிநடத்துகிறார்கள். மாணவர்களாக இருந்த போது அவர்களும் நிச்சயமாக பகிடிவதைக்கு ஆளாகியிருப்பார்கள். மேலும் அவர்கள் மேலாண்டு மாணவர்களாகிய போது சில புதுமுக மாணவர்களை மென் பகிடிவதைக்கு உட்படுத்தியதாகவும் சிரித்துக்கொண்டே பழைய நினைவுகளை இரைமீட்டினார் ஒரு விரிவுரையாளர்.

போதிய பகிடிவதைக்கு உட்படுத்தப் பட்டிருப்பினும் இவ்விரிவுரையாளர்கள் தலைமைத்துவப் பண்புகளையோ, ஆளுமையையோ, ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றையோ பகிடிவதையின் மூலம் பெற்றுக் கொள்ளவில்லையென்பதை, இக்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் பகிடிவதைப் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்கமுடியவில்லை எனும் காரணத்தைக் கொண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இக்காரணங்களிலிருந்து, பகிடிவதை மாணவர்களின் ஆளுமையையோ, தலைமைத்துவப் பண்பையோ ஒருபோதும் விருத்தி செய்யாது என்பது தெளிவாகிறது. மேலும் மாணவர்களிடையே ஓர் அன்புப் பாலத்தை, பிணைப்பையும் பகிடிவதையால் ஏற்படுத்த முடியாது.

பகிடிவதையால் தனிமனித ஆளுமை கெடுகிறது:

மேலாண்டு மாணவர்கள் புதுமுக மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தும் போது

1. மேலாண்டு மாணவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள்

2. புதுமுக மாணவர்களும் அவ்வாறே ஒரு குழுவாக வாழ வேண்டுமெனவும், தம்மைப் பின்பற்ற வேண்டுமெனவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

3. மேலும் தனி மாணவனாக எதையும் சாதிக்க முடியாது எனும் தவறான கருத்தை விதைக்கிறார்கள்.

மேற்கூறிய மூன்று விடயங்களையும் புதுமுக மாணவர்களின் மனதில் பதிப்பதன் மூலம் பகிடிவதை எனும் கோடூரத்தை எளிதில் ண்டத்தி முடிக்கிறார்கள். இவ்வாறு செய்கையில் தனிமனிதச் செயல் திறன் மாணவர்களிடம் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும் மேலாண்டு மாணவர்கள் “அட்டைப் பெயர்”களைப் (card names) பாவிக்கிறார்கள். இந்த அட்டைப்பெயர்கள் அவர்களின் தனிமனித (மாணவ) அடையாளத்தை மறைத்துக்கொண்டு (ஒரு முகமூடியுடன்) இக்கொடூரங்களைச் செய்யத் துணைபுரிகிறது. எவ்வளவு கோழைகள் இவர்கள்?

முன்னெழுத்துடன் தமது சொந்தப் பெயர் கூற முடியாத இவர்கள், கோழைகள் தானே. இந்தக் கோழைகள், புதுமுக மானவர்களை School yawanna, bucket, ..etc எனவும், இன்னும் பல பெயர் தெரியா கொடுமைகளுக்கும் ஆளாக்குகிறார்கள்.

மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கல்வி நிலையத்தைத் தாண்டிய பின்பு தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமே ஆரம்பிக்கிறது. பெற்றோரின் பணத்தில் சுகமாக வாழும்போது வாழ்க்கையின் பல்வேறு பரிமானங்கள் புலப்படுவதில்லை. கல்விநிலையத்துள் மாணவர்களாக நுழையும் நமக்குக் கற்க மட்டுமே உரிமையுள்ளது. அது நமது பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் ஆகும். அதை விடுத்து மற்றொரு மாணவன் மீது அன்பு செலுத்த முடியாத ஒருவனுக்கு ஆதிக்கம் செலுத்தவும் தகுதி இல்லை.

என்னுடைய முன்மொழிவின் படி, இக்கல்வி நிறுவனத்தைச் சார்ந்து நடைபெறும் அனைத்துச் சீரழிவுகளுக்கும், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். பகிடிவதை எனும் நொடிப்பொழுது சந்தோசம் எத்தனையோ மாணவர்களின் கல்விநிலையை மட்டும் பாதிப்பதோடு நின்று விடாமல், எதிர்கால சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியையே கேள்விக் குறியாக்கி விடும்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் பகிடிவதை எதிர்ப்பு அமைப்புகள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். புதுமுக மாணவர்கள் தம்மை தொல்லைக்குட்படுத்தும் மாணவர்களின் பெயர்களையும், முகங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். எவருக்கும் பயப்படாமல் நிர்வாகத்திடமோ, பேராசிரியர்களிடமே தங்கள் பிரச்சினைகளைக் கூறி, தீர்வுகாண முன் வரவேண்டும். அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தால், மனித உரிமை அமைப்புகளிடம் அவர்களையும் இணைத்துப் புகார் கொடுக்க வேண்டும்.

நேரடியாகப் புகார் கொடுக்க விருப்பமில்லாத மாணவ, மாணவிகள் தமது பெற்றோர்களிடமாவது பிரச்சினைகளைக் கூற வேண்டும். பெற்றோர் மூலமாக மாணவ விடுதி பாதுகாவலரிடமோ, அல்லது பேராசிரியரிடமோ முறையிட வேண்டும்.

இக்கருத்துக்கள் ஏன் இங்கு வலியுறுத்தப் படுகின்றனவென்றால், இன்றைய புதுமுக மாணவர்களால் மட்டும் தான் பகிடிவதை எனும் கொடூர காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த முடியும். முதுகெலும்பில்லாத கல்வி நிலைய நிர்வாகங்கள் ஒருபோதும் இதனைத் தடுத்து நிறுத்த முன்வரப் போவதில்லை. உங்களின் கீழ் பயில வரும் மாணவர்களுக்கும் இக்கலாச்சாரத்தை எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களை எந்த விதத்திலும் தொல்லை செய்யப் போவதில்லை. நாம் பட்ட துன்பம் போதும். இனிவருவோருக்கு வேண்டாம் எனும் மேன்மையான எண்ணத்தை எம் மனங்களில் விதைத்துக் கொள்வோம். இதை ஒவ்வொரு மாணவனும் உணரும் போதே, பகிடி வதை எனும் மனநோய் நீங்கும்.

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பது மூத்தோர் வாக்கு. தாம் பெறாக் கல்வியை தம் பிள்ளைகளாவது பெற்று விட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். கல்வி நிலையத்தை ஒரு பாதுகாப்பான இடமாகவே பெற்றோர்கள் உணர்கிறார்கள். பேராசிரியர்கள் மேலுள்ள நல்லெண்ணமே மாணவனையும் வழிநடத்துகிறது. எனவே கல்வி நிலைய நிர்வாகமே, பகிடிவதைக்கு எதிரான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நடந்த பின் காவல் துறையை நாடுவதை விட, மாணவர்களின் தேவையறிந்து சட்டத்தைப் பாரபட்சமில்லாமல் நடைமுறைப்படுத்துவதே நல்ல முகாமைத்துவமாகும்.

—*—–*—முற்றும்—*—-*—-


Responses

  1. விழிப்புணர்வளிக்கும் கட்டுரை..


    நன்றி ஐயா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: