மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்17, 2009

ஆக்கங்களும்,விமர்சனங்களும்,அறியாமையும் – பாகம் 3


ஆக்கங்களும்,விமர்சனங்களும்,அறியாமையும் – பாகம் 1

ஆக்கங்களும்,விமர்சனங்களும்,அறியாமையும் – பாகம் 2

( குறிப்பு: எந்தவொரு அமைப்பையோ, தனிமனிதனையோ புகழ்வதோ அல்லது புண்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல)

இத்தகைய மதிப்புமிக்க விமர்சனத்தை செய்யும் விமர்சகளுக்கென்று சில தகைமைகளும் உண்டு.அவற்றுள் விமர்சகன் தனிமனித விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற் சென்று விமர்சிப்பவனாகவும்,பக்கச்சார்பற்றவனாகவும், துறைசார்ந்த நல்லறிவு உடையவனாகவும் விளங்க வேண்டும். மேலும் பிற துறைகள் சார்ந்த தெளிவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும், அனைத்துத் துறைகளையும் சமமாக மதிக்கும் ஆற்றல் மிக்கவனாகவும், ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி ஆராயும் பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்பவை முக்கியமானவையாகும்.

எத்தனைக் கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் தன் துறை சார்ந்த அறிவை மட்டுமே பெருக்கிக்கொண்டு மற்றோர் துறையை அறிய விரும்பாதவர்களையும், தவறான தகவல்களோடு விமர்சிப்பவரையும், தன் துறை மட்டுமே மிகச் சிறப்பானதென மார்தட்டிக்கொள்வரையும் காலம் “அறியாமைப் பொறிக்குள் அகப்பட்ட எலிகளென்றே” கூறும்.

மேலும் சிறந்த விமர்சகன் முதிர்ச்சியையும், கனதியையும் படைப்பிலே தான் தேடுகிறான்.பாடைப்பாளியின் வயது முதிர்ச்சியையோ, சமூக பிரபலத்தையோ கணக்கிலெடுப்பவன் விமர்சகன் அல்ல; வியாபாரி. தன் துறைசார்ந்த விடயங்களை விமர்சிக்கையில் அதிக ஆழமாக விமர்சிக்க முடிவதுடன், அது சிறந்த விமர்சனமாகவும் அமையும்.அண்மையில் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையில் ஊடகம் தொடர்பான ஆக்கமொன்றைப் படிக்க நேர்ந்தது. அதன் மறுவினைகளை வலைப்பதிவில் படித்தேன். கடந்த காலங்களில் அச்சஞ்சிகைக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை வலையில் பதிந்து வரும் தனி நபர்களுக்குமிடையே சில கசப்புணர்வுகள் இடம் பெற்றன. கால ஓட்டத்தில் அதை சரி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நான் இணையத்தில் வாசித்த சஞ்சிகை ஆக்கத்திற்கான மறுவினைகள் சந்தர்பவாதக் கருத்துக்களையும் உட்கொண்டிருந்ததே எனது மனதை சஞ்சலப்படுத்தியது. ஓர் அமைப்பு தனி நபர்களைத் தாக்கும் போது, தம் ஆக்கங்கள் அங்கு வெளிவர வேண்டுமென்பதற்காக அமைதி காத்தவர்கள்,ஆதரவாக ஒரு பின்னூட்டமிடாதவர்கள் தம் துறை சார்ந்த ஓரு நேர்மறை ஆக்கம் அச்சஞ்சிகையில் வெளிவரும் போது, தமக்கு ஆதரவாகப் பதிவர்களை இணைப்பதும், நடந்து முடிந்த சம்பவங்களை தொடர்ப்பு படுத்துவதும் மதிப்பிற்குரிய செயல்களா? அல்லது சந்தர்ப்பவாதமா?

வழக்கில் பயன்படுத்தப்படும் “நாடு” எனும் சொல்லும் “உலகம்” எனும் சொல்லும் மக்களைக் குறித்தே கூறப்படுகிறது. அது போல் “பெயர்” எனும் சொல் தனிமனித அடையாளத்தைக் குறிக்கும். இங்கு தனிமனித அடையாளங்கள் துறைக்குத் துறை வேறுபடலாம். காவல் துறைக்கோ, பரிட்சை நிலையத்திலோ தனிமனித அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது போல், வலையில் பின்னூட்டமிடுகையில் மின்னஞ்சல் முகவரியையும், வலைமுகவரியையும் பயன்படுத்த வேண்டும்.

வெட்டுவதற்கு முன் மஞ்சள் தண்ணியூற்றி ஆட்டைப் புனிதப்படுத்துவது போல்,அனைவருமறிந்த அதே கார சார ஆசிரியருரைக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் ஊழியர்களை சாட முயல்வதும், பிரதான ஆசிரியருக்காகவே நாம் எழுதுகிறோம் என முட்டுக்கொடுப்பதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல. கால சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கதைப்பதும், துரோகம்
தான்.

சமூகப் பிரபலங்களாகவோ அல்லது ஒரு பொறுப்பான பதவியிலோ(!) இருப்பவர்கள் எவருமே கருத்துக்களையோ, விமர்சனங்களையோ முன்வைப்பதற்கான ஒரு மொழிநடை (வார்த்தைப் பிரயோகங்கள்) உள்ளது. சிலரது வார்த்தைப் பிரயோகங்களைப் படித்து விட்டு, அவர்களை நேரில் காண்கையில் அத்திப்பழம் தான் எனக்கும் ஞாபகம் வருகிறது.

அனுபவம் என்பது தலையில் வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு போன்றது என்றொரு கருத்தை நம் முன்னோர்கள் நம் முன்வைத்துள்ளார்கள். அந்த அனுபவம் எனும் சீப்பை மூத்தவர்களிடம் இருந்தும், அனுபவசாலிகளிடம் இருந்தும் தேவையானவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை இலகு படுத்தவே அனுபவக் கட்டுரைகளுக்கு எங்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கடுமையான முயற்சி இன்றி எத்துறையிலும் முன்னுக்கு வரமுடியாது என்பதையும் நாம் வெற்றியடைந்தவர்களின் வாழ்வியல் கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். கட்டுரைகளில் சில மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் உண்மையே இல்லையென்று எதையும் ஒதுக்கிவிட முடியாது. துஸ்பிரயோகங்கள் நடைபெறாத 100 சதவீதம் உன்னதமான துறையென்று எதுவும் இல்லை.

எல்லாத் துறையிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் விகித வேறுபாட்டுடன் இருக்கவே செய்கிறார்கள்.ஆக்கங்களில் பயன்படுத்தும் “சிலர்” எனும் சொல்வழக்கு, நல்ல மனிதர்களைப் புன்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே வழக்கிலுள்ளதைப் பகுத்தறிவுள்ள அனைவரும் அறிவார்கள்.

எனவே சமயத்திற்கு தக்கவாறு வண்ணங்களை மாற்றிக் கொள்பவர்களை சமூகம் இனம் காண வேண்டும். இனம் காணத் தவறுகையில் இனம் காட்ட ஒருவர் முன்வர வேண்டும். எழுதும் சுதந்திரம் எவருக்கும் உண்டு. அது ஒரு ஊடகத்தில் பிரசுரிக்கத் தகுந்ததா இல்லையா என்பது அவ்வூடகத்தின் தரத்தைப் பொறுத்தது. அதற்கான தனிப்பட்ட மறுப்பைத் தெரிவிக்கவும் வாசகர்களுக்கோ, அவ்வூடக பங்களிப்பாளனுக்கோ உரிமை உண்டு.

ஆனால் தன் சுயலாபத்திற்காக மற்றொரு அணியுடன் கூட்டுச்சேருதல், வாயில்லாப் பூச்சிகளையும் தன்னோடு இணைத்துக் கொண்டு அறிக்கை விடுதல் கண்டணத்துக்குரியது.ஆகவே, ஆக்கங்களை எழுதுகையில் நாம் கையிலெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்பது கக்கத்தில் உள்ள குடைக்குச் சமனாகும். அந்தக் குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான் ஒவ்வொருவரின் சுதந்திரமும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இதைப் போல் ஆயிரம் ஆக்கங்கள் வந்தாலும் மூன்று பாகத்திலும் கூறப்பட்டவை என்னவென்று விளங்குபவர்களுக்குத் தான் விளங்கும். விளங்காதவர்களுக்கு விளங்காது. தூங்குபவனைப் போல் நடிப்பவர்களை தண்ணீர் ஊற்றியும் எழுப்ப முடியாது என்பதை அனைவரும் அறிவோம் தானே.

————————————-
இக்கட்டுரையின் நோக்கம்:
ஒருவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள யாரோ ஒருவர் உன்னதமான மனதுடன் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனையே அவரை வாழ்க்கையின் இறுதி வரை வழிகாட்டிச் செல்கிறது என்பதில் தீவிர நம்பிக்கையுடையவன் நான். ஒவ்வொரு சக மனிதனையும் புகழ்வதற்கும், கெளரவப் படுத்துவதற்கும் உரிய உயரிய மனங்களையும் பண்புகளையும், இரசனை மிக்க நம் மக்களிடையே தான் இறைவன் படைத்துள்ளான். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் உயரிய நிலையில் தான் எல்லோருக்கும் பொதுவான வல்லமை மிக்க இறைவனால் வைக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் சமூகப் பிரபலங்கள் எழுதும் கண்ணைக்குத்தும் ஆக்கங்களையும், மட்டமான கருத்துக்களையும் கேட்டும் கேளாதது போல் விட்டுச்செல்லும் சகிப்புத்தன்மையுடைய பண்பட்ட மனிதனாக நான் இன்னும் வளரவில்லை எனும் காரணமே இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது.

நன்றிகள்
—————– (முற்றும்)————–


Responses

 1. அமுதன்…
  சில யதார்த்தங்களை நீங்கள் உணர வேண்டும் என்று நினைக்கிறேன்…

  ஒரு தனி அமைப்பு பதிவர்களைத் தாக்கும்போது அமைதி காத்தவர்கள் என்பது என்ன விடயம் என்று விளங்குகிறது…
  அந்தத் தாக்குதலில் அகப்பட்டவன் நானென்ற வகையில் ‘நாம் இருவர் தானே தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கிறோம், மற்றறைய பதிவர்களும் எமக்கு ஆதரவு தந்திருக்கலாம் தானே?’ என்று நான் ஒருகணம் நினைத்தேன்.
  எனினும் உடனடியாகவே நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன்.

  நீங்கள் குறிப்பிடும் அந்த ஆக்கத்தை எழுதிய பதிவர் அண்ணா ஒரு கெளரவமான, பிரபல்யமான, அந்த அமைப்பைப் போன்ற துறையில் இருக்கும் போது அவர் வந்து எமக்கு ஆதரவு தந்திருப்பின் அது துறை சார்ந்த காழ்ப்புணர்ச்சியாக மாற இடமுண்டு.
  அத்தோடு அவர் தனது பெயரை அங்கு கெடுத்துக் கொள்வதையும் நான் உண்மையாக விரும்பியிருக்கவில்லை.

  இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருந்தன.
  ஒரு பதிவர் அங்கு தந்த உணவுகளை சாப்பிடும் போது எடுத்த படத்தைப் போட்டு அதை பெரிய தலைப்பில் போட்டு எழுதிய சம்பவங்களையும் மறற்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  அவருக்கே அப்பிடி என்றால் பிரபலமானவர்களுக்கு எதிராக எவ்வளவு கேவலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று யோசியுங்கள்.

  மற்றைய விடயம் வலைத்தளங்கள் என்பன வேறு, சஞ்சிகைகள் என்பன வேறு.
  வலைத்தளங்களில் எழுதுவதற்கும். சஞ்சிகைகளில் எழுதுவதற்கும் வித்தியபசங்கள் உண்டு.
  வலைத்தளங்களில் எழுதுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் சஞ்சிகைகளில் எழுதுவதற்கு நிறைய தர்மங்கள் உண்டு.
  அதை அவர்கள் கடைப்பிடிக்காத காரணத்தால் தான் எதிர்க்கப்பட்டது.

  எந்தத் துறைகளிலும் பிழைகள் உண்டு. ஆனால் அதற்காக யாரும் அந்தத் துறையே கூடாது என்று கூறுவதில்லை.
  தனிப்பட்ட ஒரு சில நபர்கள் விடும் பிழைகளுக்காக அந்தத் துறையையே கேவலப்படுத்தி எழுதியமையைத் தான் பிழை என்றோம்.
  எங்களுக்கு அந்த ஆக்கத்தின் மீது உண்மையாகவே எதிர்ப்பு இருந்தபடியால் தான் நாங்கள் ஆதரவு தெரிவித்தோமே தவிர தனிநபர்களுக்காக இல்லை…..

  ———————-
  ———————-

  தோழர் கனககோபிக்கு,

  தங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.

  ஆக்கங்களும்,விமர்சனங்களும்,அறியாமையும் – மூன்று பாகங்களையும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, விரும்பினால் முழுவதுமாகப் படியுங்கள். அவற்றில் நீங்கள் சொல்லும் அனைத்திற்கும் விளக்கமுள்ளது. நீங்கள் கூறும் வலையெழுத்துச் சுதந்திரம் பற்றியும், சஞ்சிகை ஆக்கச் சுதந்திரம் பற்றியும் கூட (சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி) நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் (இலக்கிய, ஜனரஞ்சக) சஞ்சிகையில் எழுதுவதோ, வலையில் எழுதுவதோ எனக்குப் புதிய விடயமும் அல்ல.

  நீங்கள் கூறும் கெளரவமும், இன்ன பிறவும் அவர்களுக்கு இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. மேலும் பல கெளரவங்கள் பெற இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். எவரையும் சாட வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. சந்தர்ப்ப வாதக் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்பதே என் கருத்து.ஆதரவு தர முடியாதவர்கள், துணைக்கும் மற்றவரை அழைக்கக் கூடாது என்பதே என் கருத்து. மற்ற படி சர்ச்சைக்குரிய கட்டுரையை வரைந்தவருக்கோ, அல்லது அவ்வமைப்புக்கோ நான் ஆதரவாக எழுதுகிறேன் என நினைக்க வேண்டாம்.

  ஒருவருக்கு உங்களால் தீமை வரக் கூடாது என நினைப்பது உங்கள் பெருந்தன்மை.

  சகமனிதனில் ஒருவனுக்கு தீமையிழைக்கப்படும் போது வருந்துபவனே படைப்பாளி.

  தெரிந்த, பழகிய உள்ளங்களுக்காகக் குரல் கொடுப்பவனே நண்பன்.

  தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே- அவன் தான் அண்ணண் (சகோதரம்)

  எவரையும் சாடுவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. சாடிப் பெயர் பெற வேண்டிய நிலையும் எனக்கு இல்லை.

  உங்கள் கருத்திற்கும், நல்லெண்ணத்திற்கும் மதிப்பளிக்கிறேன்.

  தங்கள் வரவிற்கும், மேன்மையான கருத்துப் பகிர்விற்கும் மேலான நன்றிகள் தோழா

 2. keep writing. i like your post

  —-

  அமுதன் நவின்றது. நன்றிகள் நண்பரே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: