மன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்15, 2009

ஆக்கங்களும், விமர்சனங்களும், அறியாமையும் – பாகம் 1


( குறிப்பு: எந்தவொரு அமைப்பையோ, தனிமனிதனையோ புகழ்வதோ அல்லது புண்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல)

இக்கட்டுரையின் நோக்கம்:

——————————————————————————
(ஒருவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள யாரோ ஒருவர் உன்னதமான மனதுடன் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனையே அவரை வாழ்க்கையின் இறுதி வரை வழிகாட்டிச் செல்கிறது என்பதில் தீவிர நம்பிக்கையுடையவன் நான். ஒவ்வொரு சக மனிதனையும் புகழ்வதற்கும், கெளரவப் படுத்துவதற்கும் உரிய உயரிய மனங்களையும் பண்புகளையும், இரசனை மிக்க நம் மக்களிடையே தான் இறைவன் படைத்துள்ளான். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் உயரிய நிலையில் தான் எல்லோருக்கும் பொதுவான வல்லமை மிக்க இறைவனால் வைக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் சமூகப் பிரபலங்கள் எழுதும் கண்ணைக்குத்தும் ஆக்கங்களையும், மட்டமான கருத்துக்களையும் கேட்டும் கேளாதது போல் விட்டுச்செல்லும் சகிப்புத்தன்மையுடைய பண்பட்ட மனிதனாக நான் இன்னும் வளரவில்லை எனும் காரணமே இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டுகிறது.)
—————————————————————————–
நிலத்தைப் பண்படுத்த மனிதன் கலப்பையைப் பயன்படுத்துகிறான். பண்பட்ட நிலங்களே நல்விளைச்சலைத் தருகின்றன. அதேபோல் மனித மனத்தைப் பண்படுத்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். எழுத்தும் ஒரு வகை ஆயுதம் தான். அதனால் ஆக்கவும் முடியும்,அழிக்கவும் முடியும். எந்தவொரு ஆயுதத்தையும் ஆக்க சக்திற்கு பயன்படுத்துவதே மானிட பண்பாகும்.

அந்த வகையில் ஒரு ஆக்கத்தைப் படைத்து முடிப்பது என்பது ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு பிரசவமாகவே உள்ளது. ஆக்கப் படைப்பாளி தன் மனதில் அதிர்வை ஏற்படுத்திய சிந்தனையை எழுதி முடிக்கும் வரை, எதிலும் மனமொன்றா நிலையில், வார்த்தைகளுக்குள் சிக்காத மன உளைவுக்கு உட்படுகிறான்.

இவ்வாக்கங்களுக்குக் கிடைக்கும் விமர்சனத்தை மட்டுமே சன்மானமாக எதிர்பார்த்துப் படைப்பவனே காலவோட்டத்தில் கலைஞனாகப் பரிணமிக்கிறான். சமகால நிகழ்வுகளும், அனுபவங்களும், சமூக அவலங்களும், மேல்மட்ட மனிதக் கழுகுகளின் ஆதிக்க மனப்பான்மையும், தளிரும் போதே முளையைக் கிள்ளும் சகாக்களின் செயல்களும் ஒரு படைப்பாளியின் எண்ணத்தில் உந்துதல்களை ஏற்படுத்தி, மனதில் கருக்கொண்டு, எழுத்தில் (ஏதோ ஒரு வடிவில்) உருக்கொள்வதே படைப்பிலக்கியமாகும்.

படைப்பாளி எனப்படுபவன் ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்திற்குள்ளோ, சமூக மற்றும் மதக் கட்டுப்பாட்டிற்குளோ சிக்கிக் கொள்ளாதவனாக, மனிதநேயம் மிக்க ஒரு மானிடனாக மிளிரவேண்டும். தோழர் சேகுவரா “எங்கெல்லாம் அநீதி நடப்பதைக் கண்டு உன் மனம் குமுறுகிறதோ, அங்கே நீயும் நானும் தோழர்கள்” என்று கூறியது போல் படைப்பாளியும் அநீதிகளைக் கண்டு சமூகக் கட்டமைப்புகளைத் தாண்டிக் கிளர்ந்தெழ வேண்டும். உண்மையான படைப்பாளிகள் வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு என்று வாழ்வதில்லை.எனினும் கலப்படம் என்பது ஏற்றத் தாழ்வின்றி இங்கும் வியாபித்துள்ளது கவலையளிக்கத் தக்கதே.

ஒரு சஞ்சிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்காகவே நான் எழுதுகிறேன் என்பதும், சன்மானத்திற்காகவோ, நம் படைப்பு வெளிவரவில்லை என்பதற்காக சஞ்சிகையையே நிறுத்தி விடுவார்களோ(!!!) என்ற காரணங்களுக்காக படைக்கப்படும் ஆக்கங்கள் குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் தூக்கியெறியப்படும். தனக்காகவும், தன்மானத்திற்காகவும், தன்னை வருத்திய உணர்வை எழுதாத நாட்களை சுமையாக உணர்ந்தும் எழுதப்படும் ஆக்கங்களே காலத்தால் நிலைக்கும்.

சில படைப்புகளை வாசிக்கும் போது அவை வாசகனின் மனதைத் தொட்டு சில மாற்றங்களை உருவாக்கி வேறோர் படைப்பாக வெளிவர முயலும். அவ்வாறு ஒரு படைப்பின் தாக்கத்தால் புதிய படைப்பை ஆக்குவது தவறல்ல. ஆனால்,தெரிந்தோ, தெரியாமலோ மற்றொருவரின் படைப்பை தன் படைப்பாக உரிமை கோருதல் மற்றும் பிரதி செய்தல் மிகவும் அருவருக்கத் தக்க விடயமாகும்.

அண்மையில் வெளிவந்த ஒரு கவிதை நூலில் கவிஞர் பிரேமிளின் கவிதையின் ஒரு பகுதியும், இந்திய தினசரி நாட்காட்டிகளில் வெளியிடப்படும் பிரபலமான மற்றொரு கருத்தும் கவிதையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நூலிற்கு ஆசியுரை, அணிந்துரை, மற்றும் பல உரைகளை எழுதிய பலருள் ஒருவர் கலாநிதி பட்டம் பெற்றவர், மற்றொருவர் பேராசிரியர். இவர்கள் குறிப்பிட்ட பிரதிக் கவிதைகளையும் மேற்கோள் காட்டி நூலாசிரியரின் எழுத்திற்கு நிகரில்லை எனவும், நூற்றாண்டுக் கவிஞர்களுள் நூலாசிரியரும் ஒருவர் எனப் புகழ்ந்துள்ளனர்.

இத்தகைய காலக்கொடுமைகளுக்கு காரணங்கள் இரண்டு. ஒன்று துறை சார்ந்தவர்களிடம் நூலிற்கான உரைகளைப் பெறாமை. இரண்டாவது தனது துறைகளில் மட்டுமே பாண்டித்தியம் பெற்றவர்களிடம் சமூக அந்தஸ்திற்காக உரைகளைப் பெற்றுக்கொண்டமை. அனைவரும் ஏதோ ஒரு துறையைச் சார்ந்தே செயல்படுகிறார்கள். அவரவர்க்கு அவரவர் துறை பெரிது தான். ஆனால் அது மட்டும் தான் பெரிது, சிறந்தது என மார்தட்டிக் கொண்டால் காலத்தால் அவர்கள் “கிணற்றுத் தவளைகளுக்கே” ஒப்புமைப்படுத்தப்படுவர்.

படைப்பாளியின் நோக்கம் படைப்பது மட்டுமல்ல; பகிர்வதும் தான். ஒருவனின் படைப்பு எப்பொழுது அடிமட்ட மக்கள் வரை சென்று அவர்களுக்குள் ஓர் கருத்தாடலை உருவாக்குகிறதோ அன்றே அப்படைப்பின் நோக்கம் பூர்த்தியடைகிறது. எனவே சிறந்த ஆக்கங்களை மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டிய கடப்பாடு படைப்பாளிக்கு மட்டும் மட்டுப் படுத்தப்படவில்லை. அத்தகைய கடமை அனைத்து ஊடகங்களுக்கும் உண்டு. மறுமலர்ச்சியை உருவாக்குவதில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இது கடமையாகும்.

…. ஆக்கங்களும், விமர்சனங்களும், அறியாமையும் – பாகம் 2

….ஆக்கங்களும், விமர்சனங்களும், அறியாமையும் – பாகம் 3


Responses

  1. படைப்பாளியின் மனம் பற்றிய ஆய்வு அருமை நண்பரே..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: