“நட்பு” எனும் கூட்டிற்குள்ளே
புகுந்ததொரு நாகம்
நாளும் அது தேடிவந்து
நகைத்து விட்டுப் போகும்
*******
கூடி தினம் இளிப்பதற்கு
மாடிப் படி ஏறும்
குறை நிறைகள் கூறக்கூறி
குழைந்து கொண்டே சீறும்
*******
நாகசூதை அறியாப் பேதை
காதை யெல்லாம் ஓதும்
நாக நட்பே சிறந்த தெங்கும்
மூன்று உலகம் மீதும்
*******
போதை விசம் நாளும் ஊட்டி
பேதை அறிவை மாய்க்கும் – பாம்பை
வாதை கொண்ட நாட்களிலே
தனிமை கொன்றே ஓய்க்கும்
*******
செரித்த உணவைக் கக்கி மீண்டும்
சிரித்துக் கொண்டே தின்னும்
சிறந்த கொள்கை கொண்ட பாம்பின்
பரந்த நெஞ்சம் நஞ்சு
*******
போக இன்பம் சுவைப்பதற்கு
பொறுமை காத்த நாகம்
இலவம் காத்த கிளியின் கதையை
உணர்ந்து நாளும் சாகும்
குறிப்பு:
கூடவே இருந்தவொரு துரோகியை அடையாளம் கண்டதில் மகிழ்ச்சி என்றாலும், என் உணர்வுகளின் தொகுப்பு ஆறு (6) அவனிடம் சிறைப்பட்டதை எண்ணியே மனம் வருந்துகிறேன்.
நேற்றைய நிகழ்விற்கு பிறகு எழுதியதா?
—–
அமுதன் நவின்றது:
கண்டுபிடிச்சுட்டீங்களா., சில மாதமாக, சில வாரமாக, சில நாட்களாக மறைந்து கிடந்த வலி நேற்று இரவு 1.30க்கு இவ்வாறு வெளிப்பட்டது.
நான் வெள்ளோட்டம் பார்க்கும் போதே, உங்கள் கருத்தைப் பகிர்ந்து விட்டீர்கள். உங்கள் தளமும் கவிதைகளும் மிகவும் அருமை நண்பா.
By: Muthusamy on நவம்பர்19, 2009
at 4:53 பிப
நட்புக்கு துரோகம் செய்யும் சில திருந்தாத ஜென்மங்கள் இன்னும் உலகில் கோடி…..
அவற்றுக்கு நாகம் என பெயர் சூட்டியது பொருத்தம்
நட்புக்கு துரோகம் செய்தல், நட்பை கொச்சைபடுத்தல், நம்பவைத்து
கழுத்தறுத்தல்
ஏற்றுக் கொள்ள முடியாத வலியை தருவனதான்
என்ன செய்வது?
இருக்கும் வரை நல் நட்பாக நாம் இருப்போம்
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
நன்றி
—————–
அமுதன் நவின்றது:
நன்றி சிந்தனா. நீண்ட நாட்களுக்குப் பின்னரான உங்கள் கருத்துப் பகிர்வு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றிகள்.
By: சிந்தனை சிறகினிலே on நவம்பர்19, 2009
at 6:03 பிப