மன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்17, 2009

தமிழ் நேசன் அடிகளார் வழங்கிய வாழ்த்துரை


“விட்டு விடுதலை காண்” கவிதை நூலிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வழங்கிய வாழ்த்துரையை பல நண்பர்களின் வேண்டுகோலுக்கமைய பதிவிடுகிறேன்.

அமுதனின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். அவரின் பெயரைப் போலவே அவரின் கவிதைகளிலும் ஆங்காங்கே “அமுதம்” நிறைந்திருப்பதைச் சுவைக்க முடிந்தது. அமுதன் தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார்.

கலைகளுக்குள் பேரரசி கவிதைக் கலை என்பார்கள். கவிதை வாழ்விலிருந்து மலர்வது. வாழ்விற்கே உரியது. வாழ்விற்காகவே நிலைபெற்றிருப்பது.

தமிழ்க்கவிதை வளர்ச்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது. சங்ககாலம் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்கள், காவியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் எனப் பல்வேறு வகை இலக்கியங்கள் தோன்றியுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் மரபுவழி வந்த கவிதைகளோடு சில புதிய வரவுகளும் தமிழுக்கு கிடைத்துள்ளன. குழந்தைக் கவிதைகள், கவிதை நாடகங்கள், புதுக்கவிதைகள் ஆகியவை முற்றிலும் இருபதாம் நூற்றாண்டுக்கே உரியவை எனலாம்.

“கவிதை என்பது உணர்ச்சியின் உதிரப் பெருக்கு. தன்னுள் பெருக்கெடுத்த உணர்வுகளைத், தான் நன்றாக அனுபவித்து, அதனை உட்கொண்டு பிரசவிப்பவன் தான் கவிஞன். கவிதை என்பதுஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தச் சிதறல்கள். சலனமற்ற நெஞ்சின் அமைதியில் உண்டாகும் உணர்ச்சிகளின் கொப்பளிப்புகள்” என்பான் ஆங்கிலக் கவி வோர்ட்ஸ் வொர்த்.

“Poetry is the spontaneous overflow of powerful feelings taking its origin from emotion recollected in tranquility.” – Wordsworth

எவை, எவை எல்லாம் கவிதை அல்ல என்பதை ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் இப்படிக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்; “கவிதை என்பது சுகமான சொற்களின் சொர்க்க வாசல் திறப்பன்று. கவிதை என்பது பசும்புல் தலைகளில் பனிக்குடங்களை முத்தமிட வருகின்ற மோகனக் காற்றன்று. கவிதை என்பது ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் ஆரோகணித்து வரும் வெண்நுரைப் பூக்களன்று”.

கவிதை என்பது கவிஞனின் நெஞ்சில் விழுந்த அடியில், விளைந்த வீக்கம். கவிதை என்பது இதயக் கதவுகளின் இறுக்கமான கீறல்களின் வழியாக ஒரு கோடிக் கல் தொலைவு வரைக்கும் படர்ந்து பரவும் ஓலம். கவிதை என்பது சாயாத கோபுரங்களின், சரியாத கலசங்கள், சமுதாயப் பிரகடனங்கள்” என்பார் வலம்புரி ஜான்.

கவிஞன் காலத்தின் மனச்சாட்சி. தன்னில் இருந்து தான் முறண்படுகின்ற போது தான் கவிஞன் பிறக்கிறான். தீமைகளைச் சாடிச் சத்தியத்திற்குச் சாட்சியாய் நின்று பேசுபவன் கவிஞன். எனவே தான் இன்றைக்கும் சங்க காலக் காக்கைப் பாடினியார் முதல் கவியரசர் கண்ணதாசன் வரை காலமெல்லாம் நம் நெஞ்சங்களில் நிழலாய் உலா வருகின்றார்கள்.

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வௌ;ளத்தின் பெருக்கைப் போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தௌ;ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்” என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.
“உள்ளத் துள்ளது கவிதை – இன்ப
உருவெடுப்பது கவிதை
தௌ;ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை” – எனக் கவிதையின் இயல்பை இயம்புவார் கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளை.

அமுதனின் உள்ளத்து உணர்வு கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. அவருடைய ஒரு கவிதையே அதைக் காட்டுன்றது.

“பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைத்துக் கொண்டவை தான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப்படு கொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன”

இன்றைய சமகால அரசியல், யுத்த சூழ்நிலையில் அரசியலுக்கும் யுத்தத்திற்கும் இடையிலான வித்தியாசம் அதிகமில்லை. “அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்” என்பார்கள். இந்நிலையில் தமிழர்களின் தலைவிதி இந்த அரசியலுக்கும் யுத்தத்திற்கும் இடையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. இன்று உலகத்தில் 62 நாடுகளில் தமிழ் மக்கள் சிந்திச் சிதறிக் கிடக்கிறார்கள். “தமிழன் இல்லாத நாடும் இல்லை. தமிழனுக்கென்றொரு நாடும் இல்லை” என்று பொதுவாகக் கூறப்படுகின்ற வார்த்தை வலியோடுகூடிய உண்மையாகவே உள்ளது. இந்நிலையில்,

“விதைத்த இனம் முளைத்து வரும்
மீண்டும் உனைச் சிதைத் தழிக்கும்
சாம்பலாக வீழ்ந்தாலும்
பீனிக்சாய் எழுவோமென்று (சொல்லடி சிவசக்தி)”
– என நம்பிக்கை வரிகளை அமுதன் வீசுகின்றார்.

இறுதியாக இன்று எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்க ளும் எதிர்கொள்கின்ற உயிராபத்து நிறைந்த சவால்களை அமுதன் இப்படிக் கூறுகின்றார்.

“கைக்குக் கையாலும்
வாய்க்கு வாயாலும்
விடை தரும் பண்டிதர்கள்

ஏனோ எழுத்திற்கு மட்டும்
எழுத்தால் பதில் சொல்வதில்லை”

மரபுக்கவிதையென்றோ, புதுக்கவிதையென்றோ சொல்ல முடியாத “அணிசேரா” நிலையில் நின்று அவர் எழுதுவதாகத் தெரிகின்றது. மரபாக இருந்தாலென்ன, புதுமையாக இருந்தாலென்ன, “பாத்திரம்” அல்ல “பண்டம்” தான் முக்கியம் என்ற கொள்கையே இன்று இலக்கிய உலகில் எழுதாத விதியாகிவிட்டது.

கவித்துவ வீச்சும், உணர்ச்சி வெளிப்பாடும், கருத்தாழமும் கொண்ட கவிதைகள் பல இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. வளரும் இளம் கவிஞரான அமுதனுக்கு இந்நூல் ஓர் ஆரம்பம் மட்டுமே. அவர் நிறைய எழுதி, நிறைய வாசித்து, நிறைய விவாதித்து இன்னும் அதிக கனமான, கவித்துவம் நிறைந்த, காலத்தால் அழியாத கவிதைகளைப் பிரசவிக்க வேண்டுமென ஆசிக்கின்றேன், வாழ்த்துகின்றேன்.

நட்பின் நிழலில்
நிறைந்த வாழ்த்துக்களுடன்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகள்
ஆசிரியர் ”மன்னா” பத்திரிகை


Responses

 1. மகிழ்ச்சி..
  வாழ்த்துக்கள் நண்பரே..

  —-

  அமுதன் நவின்றது:

  நன்றி ஐயா

 2. விட்டு விடுதலைகாண் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா.

  தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி.

  —————

  அமுதன் நவின்றது:

  நன்றி தோழா

 3. அமுதன் உங்கள் கவிதைகளை தேடிப் படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது வாழ்த்துக்கள்.

  ————

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி தர்ஷன். பூபாலசிங்கத்தில் கிடைக்கும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: