மன்னார் அமுதன் எழுதியவை | செப்ரெம்பர்14, 2009

மெல்லத் தமிழினிச் சாகும்


மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்தமிழ்ப் படுகொலைகள்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்புநாள் விரைவிலே கூடும்

வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்
வெகுவான கலைச் சொற்கள் கூடும்
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்

செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
எருவாக மாண்டே தான் போகும்- எனும்
கள்ளத் தலைவர் தம் எண்ணங்கள் மாறும்
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்

Advertisements

Responses

 1. //செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
  எருவாக மாண்டே தான் போகும்- எனும்
  கள்ளத் தலைவர் தம் எண்ணங்கள் மாறும்
  தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்//

  நல்ல வரிகள் எல்லோரது ஏக்கமும் உங்கள் கவி வரிகளாய்

  வாழ்த்துக்கள் நன்றிகள்

  ————————————————-

  நன்றி சந்ரு

 2. எங்களது ஆதங்கங்களை நீங்கள் கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்..

  ——————————————–

  நன்றி யோகா,

  மனிதனின் ஏக்கங்களே படைப்பாளியின் ஆக்கங்கள். அவை உங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். கண்ணாடியை அடிக்கடி துடைத்தால் தான் எண்ணங்களைத் தெளிவாகப் பிரதிபலிக்கும்

 3. தயவு செய்து இந்தத் தலைப்பை மாற்றி விட முடியுமா? தலைப்பை மட்டும் பார்ப்பவர்கள் சிலரால் பெரும் தீது விளைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே? இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக் கொண்டு, பாரதி சொல்லிவிட்டான் தமிழ் இனி சாகும் என்று எத்தனை பேர் துள்ளினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

  ————————————————-
  அமுதன் நவின்றது:

  தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும் நன்றி திரு.செயபால்.

  ‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
  மெத்த வளருது மேற்கே – அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

  சொல்லவும் கூடுவதில்லை – அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
  மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’

  என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
  இந்தவசையெனக் கெய்திட லாமோ?
  சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் — மகாகவி.பாரதி

  சொல்லப்பட்டிருக்கும் முழுக்கருத்தையும் உணராமல்
  //மெல்லத் தமிழினிச் சாகும்// என்ற வரியை மட்டும் படித்து விட்டு விமர்சனம் செய்ய வருவோரை நாயை விட்டுக் கடிக்க வையுங்கள். மெல்லத் தமிழினி சாகும் என்பது பாரதியின் கருத்தாக பாரதி எங்கும் முன்வைக்கவில்லை.

  வேறு எந்தத் தலைப்பையிட்டாலும் எவரும் படிக்க மாட்டார்கள். நீங்களே என் தளத்திற்கு வந்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான்.

  தலைப்பு வாசிக்காதவரையும் வாசிக்கத் தூண்ட வேண்டுமென்பதற்காகவே அப்படி வைத்தேன். தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும் என்றே வேறு தளங்களில் (எ.கா: தமிழ்விசை.கொம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. நன்றி உங்கள் தமிழுணர்விற்கு…

 4. //உலகையே செம்மொழி ஆளும்
  உவப்புநாள் விரைவிலே கூடும்//

  நெஞ்சத்தை நிமிர வைக்கும் தன்னம்பிக்கை வரிகள். இதே தன்னம்பிக்கையைத் தலைப்பிலேயே செதுக்கியிருக்கலாம்..!!

  கவிதை மிக அருமை.

  ———————————-
  அமுதன் நவின்றது:

  உங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி சுப.நற்குணன் அவர்களே. திருத்தமிழ் வளர்க

 5. ஒரு சிறு கவியின் அருமையான வரிகளுக்கூடாக தமிழரின் ஆதங்கங்களை அழகாய் அனுபவத்தோடு சொல்லி இருக்கின்றீர்கள்… உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும் “வெல்லத் தமிழ் இனிதாகும்” வாழ்த்துக்கள்

  ———————————–

  அமுதன் நவின்றது:

  நன்றி சிந்தனா. தாங்கள் பல வழிகளில் எனக்கு உதவி புரிந்ததை என்றும் மறவேன். தங்கள் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.

 6. எனக்கும் தமிழ் பிடிக்கும். இருப்பினும் ஒரு கேள்வி. மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம். அது இன்னதாகத்தான் இருக்க வேண்டுமென்பதேன்? தமிழ் ஒரு உயர்தனிச்செம்மொழிதான். ஆனால் தமிழர்களும் பிற இந்தியர்களும் பல நூறு வருடங்கள் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த காலத்தில் அறிவியல் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவிட்டது. அவை யாவற்றையும் தமிழில் பெயர்த்து கற்பிக்க விழைவதைவிட ஆங்கிலத்திலோ அல்லது அறிவியல் வளர்ந்த மொழிகளிலோ அறிவியலைக் கற்பதுவே ஏதுவானதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழன் உறங்கிப்போனதால் தமிழும் உறங்கிப்போனது. அவன் விழித்தெழுகையில், பிற மொழிகள் படர்ந்துவிட்டன. நாம் சீனர்களையும் மற்ற ஆசிய நாடுகளையும் ஒப்பிட்டு தமிழை ஏன் அவர்களைப்போல் வளர்க்க கூடாது என்று கேட்கலாம். சீனா ஒரு நாடு. தமிழகம் ஒரு மாநிலம். இந்தி தமிழ் பிரச்சினையை யாவரும் அறிவோம். அதற்காக தமிழ் சாக வேண்டுமென்பதென் விருப்பமில்லை. தமிழ் ஒரு மொழியாக தமிழகத்தில் இருக்கலாம். ஆனால் அறிவியல் கற்பிக்க தமிழ் ஏதுவானதா என்பதே என் கேள்வி?

  ==========

  அமுதன் நவின்றது:

  வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள் தோழரே . நீங்களே கேள்விகள் கேட்டு, நீங்களே பதில் சொல்லி எல்லாத்தையும் முடித்து விட்டீர்கள். நன்றி…

  //மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம்.// உங்கள் கூற்று சரி தான். இது வழக்கில் உள்ள ஆயிரக்கணக்காண மொழிகளுக்குப் பொருந்தும். எனவே தமிழ் மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல‌

  மொழியும் தரம் பிரிக்கப் பட்டுள்ளது.. செம்மொழி எனும் தகுதியையைப் பெற்ற மொழிகள் உலகில் எட்டு மட்டுமே உள்ளன… இச்செம்மொழிகள் நீங்கள் கூறுவது போல் வெறும் “ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமாக மட்டுமே” பயன்படுவதில்லை..

  சீனா, தமிழ்நாடு, தமிழ், அறிவியலில் தமிழ் மொழி மூல கற்கைநெறிகள் பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை. மொழியைத் தெரிதல் ஒருவரின் சுயவிருப்பு… தமிழ் என்றவுடன் உங்களுக்கு தமிழ்நாடு தான் நினைவிற்கு வரும்… ஆனால் எனக்கு இலங்கை தான் நினைவிற்கு வரும்… அரச கரும மொழியாகவும், பாராளுமன்ற மொழிகளுள் ஒன்றாகவும் தமிழ் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் எனது தாய் மொழியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. தாய் மொழி தமிழ் தான் என்னைத் தெரிந்து கொண்டது.

  தமிழ் தான் எம்மை வள‌ர்க்கிறது. நாமோ அதைச் சிதைக்கிறோம்.. நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: