மன்னார் அமுதன் எழுதியவை | ஓகஸ்ட்28, 2009

“கவிதைச் சமர்க்களம்”நீங்களும் எழுதலாம் இதழில் அமுதனின் மடல்


19.06.2009 அன்று “நீங்களும் எழுதலாம்” இருமாத கவிதையிதழின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஜீன் – ஜூலை இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதனை இங்கு வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.

“நீங்களும் எழுதலாம்” ஆசிரியர் அவர்களுக்கு,

“நீங்களும் எழுதலாம்” இருமாத கவிதை இதழின் வாசகன் மன்னார் அமுதனின் வணக்கங்கள்.

ஆலவிருட்சம் போல் வளர்ந்து நிற்கும் பல இலக்கிய இதழ்கள், சில எழுத்தாளர்களால் நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய படைப்பாளிகளை “நீங்களும் எழுதலாம்” ஊக்குவிப்பதும், இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் ஆற்றலை வளர்க்கக் களம் அமைத்துக் கொடுப்பதும் மன மகிழ்ச்சிக்குரிய விடயம்.

சில மாசிகைகள், தங்களை வைத்துப் பல எழுத்தாளர்கள் வாழ்ந்து வருவதாகவும், புகழ் பெறுவதாகவும் திரும்பத், திரும்பக் கூறிவரும் நிலையில், தாங்கள் நீங்களும் எழுதலாமின் ஆசிரியர் பகுதியைச் சிறப்பான கருத்தாழமிக்க செய்திகளுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கிறது.

இருப்பினும் ஒரு சிறு நெருடலான விடயத்தைத் தங்கள் கவனத்திற்கு முன்வைக்கிறேன். புதுக்கவிதை என்பது மரபுகளைக் களைந்த வடிவமாக இருந்தாலும், தனக்கென சில மரபுகளைச் சுயமாக உருவாக்கிக் கொண்டவை.

“ஹைக்கூ” என்பது புதுக்கவிதை அல்ல. மரபுக்கவிதை, புதுக்கவிதை, கஸல் போன்றே “ஹைக்கூ” என்பது ஒரு கவிதை வடிவமாகும். ஹைக்கூ, அசை பிரித்து எழுதப்பட வேண்டியது. மூவடிகளைக் கொண்டதெல்லாம் ஹைக்கூ அல்ல. முதலடி 5 அசைகளும், இரண்டாம் அடி 7 அசைகளும், மூன்றாம் அடி 5 அசைகளும் கொண்டமைந்து, (5,7,5) ஒரு கருத்தை வெளிப்படுதுவதே “ஹைக்கூ” எனப்படும்.
இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், 2009 ஜனவரி – பெப்ரவரி இதழில் (பக்கம் 29) மாவனல்ல உ.நிசாரின் கவிதைகள் ஹைக்கூ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அது போன்ற கவிதைகளை “குறுங்கவிதைகள்” என்றே கூறலாம். அவை ஹைக்கூ அல்ல. இதனை “திராட்சைரசம்” தொகுப்பில் கலாநிதி.துரைமனோகரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை, (“நீங்களும் எழுதலாம்: மார்ச் -ஏப்ரல் 2009, பக்கம் 26” இதழில் அறிமுகக் குறிப்பு) மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஹைக்கூ எழுதுவதிற்கான விதிகள் தெரிந்தால் நம் படைப்பாளிகள் சிறப்பான கருத்தை 5,7,5 அசைகளுக்குள் சிறைபிடிப்பார்கள் என்பது நாமறிந்ததே. எனவே அசைபிரிக்கும் முறையை ஒர் அறிமுகம் செய்வது சாலச் சிறந்தது.

இதனைத் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேனே தவிர பிழை கண்டுபிடிக்கும் முயற்சியல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. பல தொழிற்பாடுகளுக்கும், பணிப்பளுவிற்கும் மத்தியில் “நீங்களும் எழுதலாம்” இதழை இடைவிடாது வெளிக்கொணர்வது பாராட்டப்படக் கூடிய விடயம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மாவனல்ல உ.நிசாரின் “எங்களூரிலும் இருந்தது ஒரு குளம்”, தங்களுடைய “அலங்கோலம்”, ஷெல்லிதாசனின் கவிதைகள்…மற்றும் பலரின் கவிதைகள் அனத்தும் சிறப்பான சமூகக் கண்ணோட்டத்தோடும், எதிர்கால ஏக்கங்களோடும் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

சுருக்கமாக சொல்வதென்றால் “நீங்களும் எழுதலாம்” படைப்பாளிகளுக்கு (மாணவர்கள் உட்பட) களம் அமைக்கும் உயர்தளம், கருத்துக்களை மோதவிடும் சமர்க்களம்.
இலக்கியங்களின் ராணியான கவிதாவுலகில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தங்களோடு ஒருமுறை தொலைபேசியில் கதைத்துள்ளேன். இதற்கு முதல் ஒரு கவிதையை மின்னஞ்சல் மூலமும் அனுப்பியுள்ளேன். தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.

நன்றி.
பணிவன்புடன்

மன்னார் அமுதன்


Responses

 1. அமுதன்,
  கைக்கூ ஒரு ஐப்பானிய கவிதை வடிவம்.அதன் பூர்வீகம் இந்தியாவோ இலங்கையோ அல்ல.அப்படியிருக்க எங்கிருந்து வந்தது இந்த அசையும் சீரும்?

  **********************************

  தங்கள் ஆர்வத்திற்கும் கருத்திற்கும் நன்றி சேரன்.

  {(அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. நிப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர். நிப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். நிப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது நிப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!)
  தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள்.

  நன்றி:கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழ் விக்கிபீடியா)}

  அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எல்லாம் இலக்ககணத்தைக் கொண்டே தம்மை அழகுபடுத்திக்கொண்டுள்ளன. இலக்கண விதிகள் பல மொழிகளில் ஒத்துப்போவதால் தான் அதனைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

  நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் சரி. ஹைக்கூவின் பூர்வீகம் இந்தியாவோ, இலங்கையோ இல்லை தானே. ஜப்பானியர் போற்றி வளர்க்கும் கைக்கூவின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத நாம் ஏன் அந்தப் பெயரை (ஹைக்கூ) மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பது என் பணிவான கேள்வி. குறைந்த பட்சம் நம் மூவரிக் கவிதைகளுக்கான புதுப் பெயர்களையாவது நாம் சூட்டலாம் தானே.

  லொறியைக் காட்டி கார் என்று சொல்வதைத் தான் வேண்டாமென்கிறேன். நம் உற்பத்திக்கு நாமே பெயர்சூட்டலாம் தானே. தமிழில் பெயருக்கா பஞ்சம். ஆங்கிலேயரும் மூவரிக் கவிதைகள் எழுதுகிறார்கள். அதனை லிமரிக்ஸ் என்று கூறுகிறார்கள்.

  செண்ட்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், லிமெரி சென்ரியூ (லிமரைக்கூ +சென்ரியூ = லிமரி சென்ரியூ) என தமிழில் பல பரிணாமங்களோடு ஹைக்கூ வளர்ந்து வருகிறது. நமது கவிதைக்கு பொருந்தும் பெயரைச் சூட்டலாம் என்பது தான் என் பணிவான கருத்து.

  நான் பல முறை படித்து ரசித்த கவிஞர் மு.முருகேசின் “என் இனிய ஹைக்கூ” விலுருந்து எனக்குப் பிடித்த சில ஹைக்கூக்களை உங்கள் ஆர்வத்திற்கு விருந்தாக்குகிறேன்.

  ஜன்னலோரம் சிறு தளிர்.
  அக்காவுக்குப் பிரசவம்
  பெண் குழந்தை.
  *************
  மழைக்குக் கூட
  பயந்து ஒதுங்கவில்லை…
  காவல் நிலையம்
  *************
  பூக்காரன் குரல்
  காசின்றி கனக்கிறது…
  வெற்றுக் கூந்தல்
  *************
  குடிகார அப்பா
  குடும்ப குரிஷேத்திரம்
  விழுப்புண் அம்மா.
  ———————


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: