
அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்
இம்மாதம் 17ம் திகதி யாழ்ப்பாணம் நல்லை ஞானசம்மந்தர் ஆதீன மண்டபத்தில் இடம்பெற்ற விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது. தமிழ் நேசன் அடிகளார் சார்பில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் அருட்திரு. அருட்செல்வன் அடிகளார் இவ்விருதைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.
அருட்தந்தை. தமிழ் நேசன் அடிகளாரால் எழுப்பட்ட “ வெளிச்சத்தின் வேர்கள்” என்ற நூலுக்கே விருது வழங்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவ செபம் பற்றிய ஆழமான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்நூலானது சிறந்த சமய நூலுக்கான விருதைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் கடந்த 9 வருடங்களாக மன்னா என்ற மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இப்பத்திரிகை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பத்திரிகையாகக் கணிக்கப்படுகின்றது.
தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் நேசன் அடிகளார் பல நூல்களின் ஆசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் உள்ளார். மன்னா பதிப்பகம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல மன்னார் எழுத்தாளர்களுடைய நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கையின் பல்வேறு தேசிய நாளிதழ்கள் மற்றும் தேசிய இலக்கிய சஞ்சிகைகளுக்குக் கவிதை, கட்டுரை, விமர்சனங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இதேவேளை கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாத மல்லிகை இதழில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் புகைப்படம் அட்டைப்படமாகப் பிரசுரிக்கப்பட்டு, அவரைப்பற்றிய கட்டுரையும் அதில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: ஓகஸ்ட் 9ஆம் திகதி வெளிவரவிருக்கும் மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” கவிதைப் புத்தக வெளியீட்டு விழா அருட்பணி.தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற உள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்