நீ வென்றதால் மறந்திடுமோ மோகம்
சுயாட்சி மீதே தணியாத தாகம் – எம்மைக்
கொல்வதால் குறைந்திடுமோ வீரம்
தமிழர்க்கு விடுதலையே போராட்டச் சாரம்
உலகப் படை கொண்டு அழித்தீர் – தமிழனைக்
கலகப் படையென்று அழைத்தீர்
வளரும் பிறைபோல வளைத்தீர் – பின்
வணங்காத் தமிழ் மண்ணை வதைத்தீர்
அனைவருக்கும் நல்லாட்சி என்று மொழிந்தீர்
ஆசையோடு வந்தவர் தம் முகத்தில் உமிழ்ந்தீர்
கூடிவாழ்ந்த குலத்தினரைச் சாடிப் பிரித்தீர்
கூத்தியர்க்கு மத்தியிலே குவளையை வைத்தீர்
விட்டத்தில் சட்டத்தைத் தொங்க விட்டீர்
வீதியிலே போகும் பெண்ணைத் தோளில் தொட்டீர்
கல்விக்கும், கலைகளுக்கும் கப்பம் விதித்தீர்
காடையரை வாடகைக்கு எம் வீட்டில் வளர்த்தீர்
விடைதேடி வந்தவரை விரட்டியடித்தீர்
படைகொண்டு வென்றோரைப் பயங்கரமென்றீர்
சர்வாதி காரத்தைக் கையிலெடுத்தீர்
சமத்துவத்தின் தலைமீது ஏறி மிதித்தீர்
நீ வென்றதால் மறந்திடுமோ மோகம்
சுயாட்சி மீதே எம் தணியாத தாகம் – எம்மைக்
கொல்வதால் குறைந்திடுமோ வீரம்
தமிழர்க்கு விடுதலையே போராட்டச் சாரம்
Nalla kavithai!!!!
By: Kiri on ஜூன்28, 2009
at 9:09 பிப