நேர்காணல்லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான நேர்காணல்… ஒலிவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது…  http://www.firstaudio.net/index.htm

1.உங்களைப் பற்றி விரிவாக பேசி விடயங்களை அறிந்து கொள்வதற்கு முன்னதாக..உங்களைப்பற்றிய அறிமுகத்தை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்..

இயற்பெயர் ஜோசப் அமுதன் டானியல்.. அப்பா அனிசிடஸ் பிரின்ஸ் தேவேந்திரன் ஜோசப்… அம்மா சகாயம் விராசுப்பிள்ளை ஜோசப்.. 1984 இல் மன்னார் சின்னக்கடையில் பிறந்து, இனப்பிரச்சினையால் 1990 இல் தென்னிந்தியாவிற்கு இடம்பெயர்ந்த குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று.. கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் தென்னிந்தியாவின் பல பாகங்களில் ஒரு அகதியாக வசித்திருக்கின்றேன். என்னுடைய இளமைப்பருவத்தையும், பல்கலைக்கழக முதுமானி கணணி பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு 2005 ஆண்டு 20ஆம் வயதில் இலங்கை வந்தேன்… இலங்கை மற்றும் உலக இலக்கியம், உளவியல் உட்பட பல்வேறு துறைகளில் 12 பட்டயக் கல்வி (Diploma)நெறிகளைப் பூர்த்தி செய்திருக்கின்றேன்.

தென்னிந்தியாவில் கெளதமன் எனும் பெயரில் எழுதி வந்தேன்… பல்கலைக்கழகம், நண்பர்கள், மற்றும் நான் சார்ந்து இயங்கிய அமைப்புகளில் மட்டும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருந்தேன். இலங்கையில் மன்னார் அமுதன் எனும் பெயரில் எழுதி வருகின்றேன்.

2.எழுத்துத் துறையின் மீதான உங்கள் ஆர்வத்திற்கு .. பரம்பரை காரணமா..? இல்லை தனித்துவமாக உங்களில் தோன்றிய ஒன்றாக எழுத்தைப் பார்க்கறீங்களா..? எப்படி..?

திடீரென்று வாழ்க்கையில் எதுவுமே உருவாவதில்லை. தனித்துவம் எனும் ஒற்றை வார்த்தையால் என்னை சுற்றி நின்று தோள்கொடுத்தவர்களைத் தூர வீசிவிட மனமில்லை. என்னுடைய அம்மாவிற்கு எழுதும் பழக்கம் உண்டு… பல பல காரணங்களால் அது முறையாக வெளிப்படுத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கின்றேன். அதைவிட என்னுடைய தந்தையும், தாயும் மிகச் சிறந்த வாசகர்கள். ஆங்கில, தமிழ் குறுக்கெழுத்துப் போட்டிகளை போட்டி போட்டு நிரப்பும் அவர்களின் வாசிப்பு காரணமாகச் சேர்ந்திருந்த பல சிறந்த இலக்கிய நூல்களை சிறு வயதிலேயே எனக்கு வாசிக்கக் கிடைத்தது ஒரு கொடையென்றே கூற வேண்டும்.

தென்னிந்தியாவில் விருதுநகர் மாவட்டத்தில் எனது ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அப்போது ”அறிவொளி இயக்கம்’ எனும் பள்ளி மட்டத்திலான கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டேன். இவ்வமைப்பிற்காக கல்வி, எயிட்ஸ், மலேரியா, சிறுவர் தொழிலாளர் பிரச்சினை, பள்ளி இடைவிலகல் போன்றவற்றை முன்வைத்து விழிப்புணர்வுப் பாடல்களையும், கூத்துகளையும் இயற்றி தெருப்பிரச்சாரங்களை நானும் எனது நண்பர்களும், பெருமாள் எனும் ஆசிரியரின் தலைமையில் மேற்கொண்டோம்.

இப்படி சிறிது சிறிதாகத் தான் என்னுள் இருந்த எழுத்தாளன் வளர்ந்தான். அவனுக்குத் தேவையான ஆகாரத்தை கட்டமைப்புகள் சிதைந்த நம் சமுதாயம் தந்து கொண்டேயிருக்கிறது.

3.எழுத்துத் துறையோடு இணைந்த வேறு எந்தெந்த துறைகளில் உங்கள் கவனம் இருக்கிறது..?

எழுத்துத் துறையெனும் போது கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் கவியரங்கம் என ஈடுபட்டு வருகின்றேன். அதோடு இணைந்து வானொலி நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். பதிப்பித்தல் துறையிலும் ஈடுபட்டு வருகின்றேன். மன்னார் எழுத்தாளர் பேரவை எனும் அமைப்பினை ஆரம்பித்திருக்கின்றோம். அதன் தலைவர் என்ற முறையில் சில நூல்களை மன்னார் எழுத்தாளர் பேரவையினால் வெளியிட்டிருக்கின்றோம்.

4.எப்பொ எப்போ எல்லாம் உங்களுக்கு எழுத தோன்றும்.. அதிலும் எந்த நேரத்தில் கவிதை எழுதுவீர்கள்..?

எப்பொழுதுமே எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்றே தோன்றும்… ஆனால் சோம்பலும் வேறு வேலைகலும் வந்து எல்லாவற்றையும் தடுத்துவிடும்… குறிப்புகளை மட்டும் எழுதிவிட்டு பிறகு எழுதிக்கொள்வோம் என விட்டு விடுவேன்.. எழுதாவிட்டால் நித்திரை கொள்ள முடியாது என்றதொரு நிலை வரும் போது அரைத்தூக்கத்தில் நடுராத்திரியில் எழுந்து எழுதிய நாட்கள் தான் அதிகம்…

5உங்கள் கவிதைகளுக்கான .. படைப்புகளுக்கான வரவேற்பு எப்படியானதாக இருக்கிறது..?

வரவேற்கத்தகுந்த விதத்தில் உள்ளது… மின்வெளி ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள், இலக்கியமேடைகள் என எல்லைகள் விரிவுபட்டிருக்கின்றன. ஒரே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஆக்கங்கள் பல்வேறு வழிகளில் சென்றடைகின்றன. அதற்கான விமர்சங்களும் உடனடியாக எமக்குக் கிடைக்கின்றன.

இதே நேரத்தில் போலியான நபர்களும், விமர்சகர்களும் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.. புனைப்பெயர் என்பதையும் தாண்டி பெயரிலிகளின் (anony) செயற்பாடுகள் பலருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.. இவர்களை சரியான முறையில் நாம் அடையாளம் காணாவிட்டால் இத்துறையிலிருந்து நாமாகவே வெளியேறவேண்டிய மனநிலைக்குத் தள்ளப்படுவோம்.

6.உங்கள் கவிகளில் என்னைப் பாதித்த கவிதைகளும் இருக்கின்றன.. அதற்கு முன்னதாக.. உங்களில் பாதிப்பை தூண்டிய கவிதைகள் இருந்தால் எங்களோடும் இணைத்துக் கொள்ளுங்கள்…

நிச்சயமாக … ஒவ்வொரு கவிதைகளுமே என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை தான்… மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு கருவுருகிறார்கள் என்பது என்னை மிகவும் பாதித்த விடயம்… பள்ளியில் படிக்கும் காலத்தில் தினமும் என்னைக் கடந்து செல்லும் ஒரு மன நிலை பாதிக்கப் பட்ட பெண் ஒருநாள் வீங்கிய வயிரோடு செல்வதைக் காணநேரிட்டது…

அதன் தாக்கம் … கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பின்னே ஒரு கவிதையாக வெளிப்பட்டது… அக்கவிதை “அவளும் அவர்களும்”

அதை இப்பொழுது வாசிக்கின்றேன்..

அவளும் எச்சிலிலையும்…
—————————–

என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி

“பாவம்,
தின்னட்டும்”

குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் …
குரல் கொடுத்தவனும் …

7.எழுத்துத்தறை தவிர்ந்த ஏதும் துறைகளோடு உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா..?
சிறுவயது முதலே நாடகங்களில் நடித்துள்ளேன்… பயிற்சிக்கு செல்வதற்கான நேர அவகாசம் இல்லாதிருப்பதால் இப்பொழுது நடிப்பதில்லை… இசையை ரசிப்பேன்… எனது மனைவி சிறந்த பாடகி… யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பட்டதாரி… அவரது குரலில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பேன்.

8.இடைப்பட்ட காலத்தில் 2 நூல்களை வெளியீடு செய்திருக்கிறீர்கள்… இதற்கான கருவை எப்படி அமைத்துக் கொண்டீர்கள்..?

நான் சார்ந்து வாழும் சமூகமே எனது படைப்புகளுக்கான கருவைத் தருகின்றது… ஒரு விடயத்தை உள்வாங்கி, அது ஒரு படைப்பாக உருக்கொள்ளும் வரை காத்திருக்கின்றேன்.. உரிய காலத்தில் படைப்புகள் என்னை மீறியே வெளிவருகின்றன… நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகின்றேன்..

9.அக்குரோனி என்று எப்படி பெயர் வைத்துக் கொண்டீர்கள்..? புதுமையாக இருக்கிறது..இதன் அர்த்தம் என்ன என்று அறிய ஆவலாயுள்ளேன்..

அக்குரோணி என்பது தமிழிற்குப் புதிய பெயர் அல்ல. வழக்கில் இருந்த பல சொற்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம். அக்குரோணி எனும் சொல் பண்டைய இலக்கியங்களான மகாபாரதத்திலும் உள்ளது … ஒரு படையில் இடம்பெறும் குதிரைபடை, யானைப்படை, காலாட்படை என்பவற்றை அளக்கும் ஒரு அலகாக இது பயன்படுத்தப்பட்டது. அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109,350 காலாட்களையும் கொண்ட (மொத்தம் 2,18,700) ஒர்படைத்தொகை…

அக்கோணி,அக்கோகிணி,அக்கௌகிணி என்பவை அக்குரோணியின் அரும்பதங்களாகத் தமிழ் அகராதியில் இடம்பெற்றுள்ளன… இத்தகைய பலம் பொருந்திய ஒரு படையைப் போன்று சமுகக் கருத்துக்களைத் தாங்கி வரும் என் நூலும் வலிமை மிக்கதாக இருக்க வேண்டுமென்றே அக்குரோணி என்று பெயரிட்டுள்ளேன்…

10. இந்த இரு நுால்கள் பற்றியும் மூத்த எழுத்தாளர்களளின் வரவேற்பு எப்படியானதாக இருந்தது..உங்களுக்கு திருப்தியை அளிக்கக் கூடியதாக இருந்ததா..?

திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருந்தது… பலர் இன்றைய இளையவர்களின் எழுத்துக்களை ஆர்வமுடன் வாசிக்கிறார்கள்… திருப்திகரமாக விமர்சிக்கிறார்கள்… சிலர் வாசித்து அறிந்து கொண்டாலும் அறியாதது போல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரோடும் இணைந்தே செயல்பட்டு வருகின்றோம்.

11. தற்கால இலக்கிய உலகம் எதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்..?

இலக்கியம் என்பது மனங்களை இணைக்கவேண்டும்.. நம் சமூகத்தை இருக்கும் நிலையிலிருந்து வளர்ச்சியை நோக்கிய ஒரு படிக்கு மேல்நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.. அத்தகைய இலங்கியங்களே காலத்தால் அழியாமல் நிற்கின்றன. தற்கால இலக்கியங்களும் அவ்வாறான தனது பணியை சிறப்பாகச் செய்து வருகின்றது…

ஆனால் இவையெல்லாமே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தாம் இயங்கிய காலகட்ட இலங்கியங்களே சிறப்பானவை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காலம் எதையும், எவரையும் இருட்டடிப்புச் செய்வதில்லை.. ஆனால் சிறந்தவகளை வெளிப்படுத்த சிறிது காலத்தை எடுத்துக்கொள்ளும்.

12. உங்கள் வயதை ஒத்த படைப்பாளிகள் பற்றி என்ன நினைக்கறீங்கள்..?

இலக்கியத்துறையில் நான் சாதித்ததை விட நல்ல பல நண்பர்களைச் சம்பாதித்தது தான் அதிகம். என்னுடைய நண்பர்கள் மிகச் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாக இருக்கிறார்கள். மேலும் பரந்த மனப்பான்மையுடனும், சகிப்புததன்மையுடனும் வாழ்வதற்கு நாங்கள் பழக்கப்பட்டிருக்கின்றோம்.
தேடல் வேட்கை அதிகமாக உள்ளது. ஒருவரை ஒருவர் பாராட்டும் நற்பண்புள்ளது… என்னுடைய இலக்கிய நண்பர்களின் வட்டம் மிகப்பெரியது…

தோழர்களும் கவிஞர்களுமான அமல்ராஜ், சிஹார், பொத்துவில் அஸ்மின், கிண்ணியா அமீர் அலி, ஜனூஸ், கலாமணி பரணிதரன், நாச்சியாதீவு பர்வின், லுனுகல ஸ்ரீ, ஆதித்தன், பிரமிளா, லோமியா உதயன் என பல சிறந்த படைப்பாளிகளை நண்பர்களாகப் பெற்றுள்ளேன். ஒருவர் மற்றொருவருடைய ஆக்கங்களை வாசிக்கின்றோம். விமர்சிக்கின்றோம்… பெயர் குறிப்பிடாத இன்னும் எத்தனையோ நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.. பெயர்குறிப்பிட தனியாக அரை மணி நேரம் தேவைப்படும்..

13. தலைமுறை இடைவெளி என்று பேசி கொள்கிறார்களெ அது என்ன..?

மனம் விரிவடையாத வரை, தலைமுறை இடைவெளி எல்லாக் காலத்திலும் இருக்கும் என்றே நினைக்கின்றேன்.. மனங்களுக்கிடையே உள்ள இடைவெளி தான் தலைமுறை இடைவெளி. சிலரால் இன்றைய இளைய சமுதாயத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் இலக்கிய உலகில் அடையாளம் பெறுவதற்கு மிக நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டவர்கள்.. தங்களுடைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களால் இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்…. குறுகிய காலத்தில் இளைஞர்கள் முன்னேறுவதை ஏற்றுக் கொள்வதற்கு இவர்களுக்குச் சிரமமாக உள்ளது.

14.மூத்த படைப்பாளிகள் என்ன செய்ய வேண்டும் என்ற நினைக்கிறீங்கள்…ஃ

எவருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் நான் வளர்ந்துவிடவில்லை.. வளர்ந்தாலும் அதைச் செய்யமாட்டேன்… பொதுவாகவே ஒரு மனிதன்/ படைப்பாளி எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது, எதை எழுத வேண்டும், எழுதக் கூடாது என்பதை எவருமே வரையறுக்க முடியாது… ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என்பது அவரவர் சுதந்திரம்… இந்தச் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனியைத் தொடாத வரை எல்லாம் சுமூகமாகவே இருக்கும்.. எழுத்தும் அப்படித்தான்…. நம் கக்கத்தில் உள்ள குடையைப் போன்றது… அடுத்தவர் கண்ணில் குத்தாதவரை நாம் நம் குடையை எங்கும் வைத்துக்கொள்ளலாம்.

15. ஆரோக்கியமான ஒரு இலக்கிய உலகம் என்பது சாத்தியமாகுமா..? எப்படி..?

இலக்கிய உலகம் என்பது படைப்பாளிகளை மட்டும் கொண்டதல்ல. இங்கு வாசகர்களும் திறனாய்வாளர்களும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றனர். ஆரோக்கியமான இலக்கிய உலகம் என்பது கருத்துக்களோடு மட்டும் முரண்படும், கருத்துக்களை மட்டுமே விமர்சிக்கும் போது தான் சாத்தியமாகும். வாய்ப்பு கிடைத்தவுடன் விமர்சனம், திறனாய்வு என்ற பெயரில் தனி நபரை அல்லது படைப்பாளியை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக்கூடாது. வெளிப்படையாகவும் மற்றவர் முகம் கோணாமலும் மேடை நாகரிகங்களையும் கற்றுக் கொண்ட ஒரு தலைமுறையால் ஆரோக்கியமான இலக்கிய உலகம் சாத்தியமாகும்.

இலக்கியத்தை சமூக வளர்ச்சிக்கான ஒரு இயக்கமாக நாம் பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அதைவிடுத்து இலக்கியமேடைகள் பிரதேசவாதம் பேசுவதற்கும், தற்புகழ்ச்சிக்காவும் பயன்படுத்தப்படக்கூடாது. விமர்சகர்கள் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு புகழுரைகள் பாடுவதை விடுத்து, நல்ல படைப்புகளைத் திறனாய்வு செய்ய முன்வர வேண்டும்.

16. எழுத்துறையோடு இணைந்த எதிர்காலத்த திட்டம் ஏதும் இருக்கிறதா..? அது பற்றி சொல்ல முடியுமா..?

மன்னார் மாவட்டம் கூத்துக்கலைக்குப் பெயர்பெற்றது. கூத்துக்கலை வளர்ந்த அளவிற்கு இலக்கியம் வளரவில்லை. அதற்கு முக்கியககாரணம் இன்றைய காலம் வரை இலக்கியத்திற்கென ஒரு சிற்றிதழ் இல்லாமல் இருப்பது தான். நாவண்ணன், செபமாலை மொத்தம் போல் போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் மன்னாரில் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களைப் பற்றிய பதிவுகளோ, படைப்புகளோ இல்லை.

அண்மையில் கவிஞர்.செபமாலை மொத்தம் போல் அவர்களின் கவிதைகளை அன்னாரின் மாணவரான மு.சுந்தரபாண்டியன் தொகுத்து நூலாக்கியிருந்தார். இந்நூல் வெளிவரும் வரை எம்மில் பலருக்கு இப்படி ஒரு அருமையான கவிஞர் இருந்தாரா என்பதே தெரியவில்லை… கிறிஸ்தவ பக்தி இலக்கியத்தில் உள்ளடக்கும் அளவிற்குச் சிறந்த கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இலக்கியச் சிற்றிதழ் இருந்தால் நிச்சயம் இனிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களாவது ஒரு பதிவாகப் பாதுகாக்கக்படும். எமது திட்டங்களை நானும் எனது தோழர்களும் இணைந்தே செயற்படுத்த உள்ளோம்… எங்களது இலக்கியச் சிற்றிதழ் திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்த பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றன… பொருளாதார உதவிகளை மன்னார் மாவட்ட தனவந்தர்களின் உதவியோடும், புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியோடும் செயற்படுத்தலாம் என நினைக்கின்றோம்… எமது மாவட்டத்தின் இலக்கிய வளர்ச்சியில் பங்கெடுப்பது ஒவ்வொருவரின் உரிமையாகும்.

17. என்ன சாதிக்க வேண்டும் நினைக்கறீங்க..?

சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எதையும் செய்வதில்லை… பொறாமைகளற்ற தன்னிறைவான சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.. மேடைகளில் நடுநாற்காலியைத் தேடாத இலக்கியத் தோழர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்.. மாதம் ஒருமுறையாவது இலக்கியக் கருத்தாடல்களை மன்னாரில் நடத்த வேண்டும். இலக்கியத் தோழமைகள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்… இதற்கான கட்டிட வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலும், நாங்கள் மரநிழல்களில் கூட்டங்களை நடத்துவோம்.

அடுத்த தலைமுறைக்காவது இலக்கியம் பற்றிய நல்ல புரிந்துணர்வை எம்மால் ஏற்படுத்த முடிந்தால் அதைத் தான் சாதனை என்பேன்.

18. இறுதியாக லண்டன் தமிழ் வானொலி நேயர்களுக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்…?

இது வரை நேர்காணலை செவிமடுத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நேயருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். புலத்தில் வாழ்பவர்களைப் போலவே புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் எத்தனையோ சோகங்களை தம்முள் அடக்கி வைத்துள்ளனர். அவற்றின் வடிகால்களாகத் தான் இன்றைய கலை இலக்கியங்களைக் காண முடிகிறது.

பிறந்த மண்ணையும் எமது மக்களையும் நேசிக்கும் நாம் அவர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும். அந்தப் பங்கெடுப்பை எந்த வகையில் வழங்கப் போகின்றோம் என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கூறிக் கொள்கின்றேன்.

தொடுப்பு:  ஒலிவடிவத்தை செவிமடுக்க விரும்பினால் இங்கு சொடுக்குங்கள்

======================

தமிழ் மிரர் இணைய செய்திச் சேவையில் வெளிவந்த நேர்காணல் – 07-செப்டம்பர்-2011
தொடுப்பு: http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/27508-2011-09-07-09-19-51.html

கேள்வி:- நீங்கள் உங்களது வெளிப்பாட்டுக் களமாக கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு காரணம் என்ன?

பதில்:-சிறுகதைகளையும், கட்டுரைகளையும் விட கவிதைகளை நான் அதிகமாக எழுதிவருகின்றேன் என்று தான் கூறவேண்டும். மனித இனத்தையும் கவிதைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஏரோட்டினாலும், தேரோட்டினாலும் பாடிக்கொண்டே வாழ்ந்தவர்கள் நாம். பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி என படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது கவிதை. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம் வரை நம் முன்னோர்கள் கவிதைகளில் தான் வாழ்க்கையை லயித்துக் கழித்திருக்கிறார்கள். வெறும் சொல்வித்தைகளாக மட்டுமேயல்லாமல் மொழியாட்சியுடன் அமையும் கவிதைகளின் அதிர்வு காலங்கள் கடந்த பின்பும் மக்கள் மனதை விட்டு அகல்வதேயில்லை.

கேள்வி:- ஆரம்பத்தில் கவிதையால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் அடுத்தக் கட்டமாக சிறுகதை, நாவல் என தமது பன்முக திறமையை வெளிப்படுத்த முனையும் போது கவிதையை மறந்துவிடுகின்றார்களே. இதைப்பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- கவிதை எழுத முயற்சிக்காத படைப்பாளியென்று எவரும் இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன். படைப்பிலக்கியத்தின் எந்த வடிவத்தை தம்மால் சிறப்பாகக் கையாள முடியும் என உணர்ந்து கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்படும். அந்தக் காலத்தைச் சிலர் கவிதையில் கழிக்கின்றனர். இவ்வாறு கவிதையில் ஆரம்பிப்பவர்களே காலப்போக்கில் சிறுகதை எழுத்தாளர்களாக, நாவலாசிரியர்களாக, கட்டுரையாளர்களாக உருவாகின்றார்கள். சிந்தனை விரிவடையும் போதும், எழுத்தை லாவகமாகக் கையாளும் பக்குவம் அதிகரிக்கும் போதும் இருக்கும் தளத்திலிருந்து சற்று முன்னோக்கி நகர்வது இயல்பானதே. ஆனால் இதில் எல்லோருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. கருவை கவிதைக்குள் அடக்க முயன்று முடியாமல், அல்லது அக்கவிதையில் திருப்தி அடையாமல் சிறுகதையிலோ, பத்தி எழுத்திலோ வெளிப்படுத்துபவர்களும் உள்ளனர்.

கேள்வி: மரபை நோக்கி உங்கள் கவிதைகள் பயணிக்கின்றனவே. இது குறித்து உங்களது பதில் என்ன?

பதில்:- இலக்கியம் என்பது ஒரு பரந்த வெளி. இதில் பயணிக்க இலக்கணம் இன்றியமையாத ஒன்றாகவே நான் கருதுகின்றேன். இங்கு கற்றுக் கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் எவ்வளவோ விடயங்கள் உள்ளன. தமிழ் இலக்கணம் மட்டுமின்றி பிறமொழி இலக்கியங்களையும் கற்றுக் கொள்வதால் இலக்கியம் பற்றிய நமது பார்வையும், நம் எழுத்தின் வீச்சும் அதிகரிக்கும். மரபில் பல கருத்துக்களை ஆணித்தரமாக கூறலாம். ஒத்திசைவும், ஓசையும் வாசகர்களின் மனதில் இலகுவாக பதிந்து விடும். நீண்ட வரிகளில் உள்ள ஒத்திசைவற்ற புதுக்கவிதை வரிகள் வாசித்தவுடன் முற்றுமுழுதாக மனதில் பதிந்துவிடுவதில்லை. புதுக்கவிதைகளைக் கூட ஓசை நயத்துடன் எழுதுவதே எனது நடை. இலக்கியப் பெருங்களத்தில் நம் மனவிருப்பத்துடனேயே நாம் பயணிக்கிறோம். நம்மால் மரபில் எழுத முடியுமா முடியாதா என்பது வேறு விடயம். ஆனால் நம் செயல்படும் துறைசார்ந்த விடயங்களைத் வாசித்தாவது அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கேள்வி:- ஹைகூ, நவீன கவிதைகள் என வாசகர்கள் புதிய கோணங்களை நோக்கி பயணிக்கும் இக்காலகட்டத்தில் மரபுக் கவிதைகள் வாசகர்களை சென்றடையும் என நினைக்கின்றீர்களா?

கவிதையைப் பொறுத்தவரை, கவிஞனுக்குத் தோன்றும் முதல் வரிதான் அந்தக் கவிதை மரபா அல்லது நவீன வடிவமா என்பதைத் தீர்மானிக்கிறது. பொழிப்புரை தேவைப்படாத மரபுக் கவிதைகள் தான் இன்று பெரும்பாலும் படைக்கப்படுகின்றன. தமிழ் ஆற்றலை வெளிக்காட்டுவதற்காகப் படைக்கப்பட்ட தமிழ்க் கவிதைகளின் காலம் கடந்துவிட்டது. இன்று இலகு தமிழில் படைக்கப்படும் கவிதைகளுக்கு அகராதியைப் புரட்டி அர்த்தம் தேட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. எல்லோரும் புதுக்கவிதை எழுதும் இன்றைய சூழலில் ஒரு சில கவிஞர்கள் மட்டுமே மரபிலும், புதுக்கவிதையிலும் திறமையாக எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

உங்களது கவிதை தொகுதிகளில் ஓவியங்கள் ஏன் உள்வாங்கப்படுவதில்லை.

பதில்:- எனது முதலாவது தொகுதியான “விட்டு விடுதலை காண்” இல் இணையத்திலிருந்து ஓவியங்களை எடுத்துப் பயன்படுத்தியிருந்தேன். எல்லாக் கவிதைகளுக்கும் ஓவியங்கள் அவசியமற்றவை என்பதை கற்றுக் கொண்டதால் எனது இரண்டாவது தொகுதியில் ஓவியங்களைப் பயன்படுத்தவே இல்லை. சில கவிதைகளுக்கு தலைப்பை வாசித்தால் தான் கவிதை முழுமை பெறும். சில கவிதைகளுக்கு அருகிலுள்ள ஓவியத்தைப் பார்த்தால் தான் கவிதையின் பொருளை அறிந்து கொள்ள முடியும். அக்குரோணி தொகுதியில் உள்ள கவிதைகளுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இது தவிர்ந்து, இன்று ஒரு ஓவியம் குறைந்தது 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு நல்ல கவிதை நூலை குறைந்தது 200ரூபாய் கொடுத்துக் கூட வாங்க மாட்டார்கள். இந்நிலையில் பொருளாதார மதிப்பீடற்ற ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் காப்புரிமையுடைய ஓவியங்களை உள்வாங்கி நூல் வெளியிடுவது என்பது மிகவும் கடினமானது.

உங்களது சிறுகதை முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?

பதில்:- இதுவரை 6 சிறுகதைகளையே எழுதியுள்ளேன். அவற்றில் ஒரு சில மட்டுமே வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில் எனது சிறுகதைத் தொகுதி வெளிவரும் என நம்புகின்றேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நூல்களை வெளியிடுதலே இப்போதைக்கு சாத்தியமாகவுள்ளது. பொருளாதார ரீதியாக என்னை பலப்படுத்திக் கொண்ட பின்பே அடுத்தடுத்த தொகுதிகளை வெளிக்கொணர முடியும்.

வளர்ந்து வரும் எழுத்தாளர் என்ற ரீதியில் நீங்கள் எதிர்நோக்கும் சவாலென எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்:- மனம் வெதும்பிச் சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை. கண்ணிற்குத் தெரிந்தும் தெரியாமலும் எண்ணற்ற சவால்களை நாள்தோறும் நாம் எதிர்கொண்டுகொண்டே தான் இருக்கின்றோம். அந்தச் சாவால்கள் தான் சோர்வடையாமல் எழுதத் தூண்டுகின்றன. எழுர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் என் எழுத்துக்கள் மட்டுமே என்னைத் தாங்கிக் கொள்ளும் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளேன்.

ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடாத பண்பாக எதனை கூறுவீர்கள்?

பதில்:- மாகாகவி சுப்பிரமணிய பாரயின் வரிகள் அழகாகக் கூறுகிறது..

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே நல்ல எழுத்தாளன் இருக்கக்கூடாது

அண்மையில் உங்களுக்கு அகஸ்தியர் விருது கிடைத்தது. இதைப்பற்றி கூறுங்கள்?

பதில்:- எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமாக நாம் விருதுகளை நோக்கினால், அந்த அங்கீகாரம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைக்கவேண்டும். விருது பெறுவதற்கு இன்னும் வயதுள்ளது என்று கூறி இளம் எழுத்தாளர்களை ஒதுக்கக் கூடாது. படைப்புகள் காத்திரமாக இருக்கும் பட்சத்திலோ, பாராட்டத் தக்க சேவையை முன்னிறுத்தியோ வழங்கப்படும் விருதுகள் இளைஞர்களை ஊக்குவிக்கும். கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் தடாகம் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகள் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்றன. அகஸ்தியர் விருதும், கலைத்தீபம், கலைமுத்து போன்ற பட்டங்களையும் வழங்கி கெளரவித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

இறுதியாக நீங்கள் கூற விரும்புவது…

புதில்:- பரந்த வாசிப்பிற்கு எம்மை உட்படுத்தும் போது இலக்கியம் பற்றிய எமது பார்வை விசாலமடையும். மன்னாரில் இருந்து இலக்கிய சஞ்சிகை ஒன்று விரைவில் வெளிவரும்.

———————————–
———————————–

ஞாயிற்றுக்கிழமை, 30. ஓகஸ்ட்.2009 மித்திரனில் வெளிவந்த நேர்காணல்… (இது தவிர வானொலிகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நேர்காணல்கள் வழங்கியுள்ளேன்…)

உருப்பெருக்கி வாசிக்க :
http://picasaweb.google.com/amujo1984/TAMILMOZHIVAAZTHTHU#5522952567341504322

——

====
முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்

Responses

 1. வாழ்த்துக்கள் சகோதரன்.

  அமுதன் நவின்றது:

  நன்றி தோழரே

 2. வாழ்த்துகள்
  சிந்திக்கவைக்கும்
  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: