காலச் சக்கரத்தின்
கோரைப் பற்களில் சிக்கி
ஏதோவொரு மணித்துளியில்
நானும் மாண்டு போவேன்
என்றும்
சுற்றும் பூமி சுற்றும்
வெடித்த மொட்டு மலரும்
அஸ்தமனத்தின் பின்னரான
முன்னிரவில்
நிலா முளைக்கும்
அன்றும்
நீரில்லா நிலவில்
மாவரைத்து
வடை சுடுவாள் பாட்டி
சூரியனும்
கிழக்கே தான் உதிக்கும்
மேற்கே உதித்தாலும்
மறக்காமல்
நமக்கெல்லாம் வியர்க்கும்
மூன்றாம் நாட்களில்
காய்ந்து போன
ஆற்றின் சுவடாய்க்
கண்ணீர் வற்றிவிட
அவரவர் செயல் நோக்கி
சிந்தனைத் தூண்டல்களுடன்
உறவுகள் பறக்கும்
எட்டாம் நாளில்
ஒருமுறையும்…
முப்பத்தியொன்றாம் நாளில்
மறுமுறையும்…
அவர்களின்
செத்த நாக்குகளையும்
சொந்தங்களையும்
உயிர்ப்பிக்கும்
எனக்கான நினைவுகூறல்கள்
ஒருபொழுதில்
எனக்குப் பிடித்தவற்றை
விட்டுக் கொடுக்காதவர்கள்
தானே முன்வந்து
படையிலிடுவார்கள்
என்னைப் பிடிக்குமென்று
வாழ்கையில்
வாழ்த்தத் தெரியாதவர்க்கெலாம்
வாய்ப்பளித்து
வாய்மூடிக் கிடப்பேன்
நடுமுற்றத்தில்
அவர்கள் உதிர்க்கும்
பொய்களைக் கேட்க
செவியென்றும் திறந்தே இருக்கும்
மரமொன்று
வீழ்ந்து, காய்ந்து
கருகி மறைவதாய்
நானும் அழிவேன்
நானில்லா நிறையைச்
சமன் செய்ய
மற்றோர் தளிர் முளைக்கும்
சுற்றும் பூமி சுற்றும்
இன்னும் வேகமாய்
அன்றும் ஒருவன்
சொல்லிக்கொண்டிருப்பான்
“நான் மட்டும் இல்லையென்றால்…?”
குறிப்பு:
இவ்வாக்கம் “ இளமை விகடன் மின்னிதழ் நவம்பர்-2009” ற்காக எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இன்று இம்மின்னிதழ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதை முன்னிட்டு இக்கவிதை இங்கே பதிந்துள்ளேன். இளமை+புதுமை= இளமைவிகடன் மின்னிதழுக்கான பதிவிறக்கச் சுட்டி இங்கே












“நான் மட்டும் இல்லையென்றால்…?”
superb amuthan
————
அமுதன் நவின்றது:
நன்றி மருதமூரான்
எழுதியவர் maruthamuraan நாள் நவம்பர்11, 2009
நேரம் 2:51 பிற்பகல்
nice poem amuthan
————
அமுதன் நவின்றது:
நன்றி யோ
எழுதியவர் யோகா நாள் நவம்பர்11, 2009
நேரம் 3:56 பிற்பகல்
வாழ்க்கையின் போக்கை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
—————-
அமுதன் நவின்றது:
நன்றி விஜய்.
எழுதியவர் Vijay நாள் நவம்பர்11, 2009
நேரம் 6:30 பிற்பகல்
அகங்காரத்தை அழிக்கச்சொல்லும் யதார்த்தம்.அருமை.
—————
அமுதன் நவின்றது:
நன்றி நண்பரே. அகங்காரம் நமக்கு முன்னோ, பின்னோ சென்றாலோ, வந்தாலோ நாம் அதை உணர்ந்து கொண்டு திருத்தி விடுவோமாம். ஆனால் அது மனிதனின் கண்ணில் படாதவாறு தலையின் மேல் ஏறி அமர்ந்து கொள்வதால் தான் அதை அழிக்கமுடியாமல் மனிதன் அழிந்து விடுகிறான்.
எழுதியவர் velji நாள் நவம்பர்12, 2009
நேரம் 12:01 மு.பகல்
உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடருங்கள்
அ முதல் Z வரை
http://yovoice.blogspot.com/2009/11/z.html
*****************
அமுதன் நவின்றது:
தொடர்கிறேன் தோழா
எழுதியவர் Yoga நாள் நவம்பர்12, 2009
நேரம் 6:56 பிற்பகல்